முகப்பு
தினமணி கதிர்

முடியாதது என்று எதுவுமே இல்லை: பிரியங்கா சோப்ரா

""மேரிகோம்' படத்தைப் பொறுத்தவரை எனக்கு இது ஒரு கடினமான படம்தான். என்னுடைய தந்தை இறந்த நான்காவது நாளான்றே

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

""மேரிகோம்' படத்தைப் பொறுத்தவரை எனக்கு இது ஒரு கடினமான படம்தான். என்னுடைய தந்தை இறந்த நான்காவது நாளான்றே இதன் படப்பிடிப்பிற்குச் சென்றேன். அவர் உயிருடன் இருந்தபோது சாப்பிடும் நேரங்களில்  இப்படத்தின் கதையைப் பற்றி அவரிடம் விவாதித்ததுண்டு இதுதான் அவர் என்னிடம் கடைசியாக கேட்ட கதை. இதைக் கேட்டதும் அவர் சொன்னார் ""மற்ற இந்திப்பட ஹீரோயின்கள் ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் நடிப்பதுபோல் நடிக்காதே. செய்வதை சரியாக செய். வெறும் கையுறைகளை மாட்டிக் கொண்டு "பாக்ஸர்' போஸ் கொடுக்காதே. உன்னைப் பொறுத்தவரை இந்தப் படம் ஒரு தண்டனைதான். இதுவரை ஷோகாட்டிக் கொண்டு நடித்தது போல் இந்தப் படத்தை நினைக்காதே. முதலில் உன்னுடைய உடற்கட்டை "பாக்ஸர்' போல் உருவாக்க "ஜிம்'மிற்கு போ''என்றார்.

என்னுடைய பெற்றோர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததைப் போல் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும் பயிற்சிக்காக ஜிம்மிற்கு சென்று திரும்பியவுடன் ஏதாவது ஒரு புகாரை சொல்வேன். ஒரு நடிகை என்ற முறையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். "முடியாதது என்று எதுவுமில்லை' என்பதை இந்தப்படத்தில் நடிக்கும்போதுதான் உணர்ந்தேன்'' என்கிறார் பிரியங்கா சோப்ரா.

""நான் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவள்தான். இந்த சினிமா உலகத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. சில தவறான படங்களையும் கொடுத்திருக்கிறேன். சில நல்ல படங்களிலும் நடித்திருக்கிறேன்.

 "மேரிகோம்' படத்தைப் பொறுத்தவரை எனக்குத் தேவையான அனுபவம் கிடைத்திருக்கிறது. நடிகை என்ற முறையில் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டேன். முதலில் என்னுடைய உருவத்தை மேரிகோம் போல் மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் என்னை ஒப்பந்தம் செய்தபோது அவரது பாத்திரத்திற்கு நான் பொருத்தமானவளா என்று ஒவ்வொருவரும் கருதினார்கள். அவரைப் போலவே புஜ வலிமை பெறவேண்டும். மேரிகோமுக்கு பயற்சியளித்த பிரஷாந்தையே எனக்கும் பயிற்சியளிக்க நியமித்தனர். எனக்குப் பயிற்சியளிப்பதற்காகவே டைரக்டர் சஞ்சய்லீலா பன்சாலி குத்துச் சண்டை மேடையொன்றை அமைத்துத் தந்தார். வட இந்திய பெண்ணான எனக்கு மேரிகோம் போல் உருவத்தை மாற்றிக்கொள்ள சிரமமாகத் தானிருந்தது. மேரிகோம் இடது கை பழக்கமுள்ளவர். எனக்கு வலதுகை பழக்கம். நாள்தோறும் ஆறு வேளை சாப்பிட்டு உடல் எடையை கூட்டினேன். காலை 9 மணிமுதல் இரவு பன்னிரண்டு மணிவரை தூக்கம் வராது. கோவாவில் உள்ள என்னுடைய வீட்டின் முதல் மாடியில் ஜிம் அமைத்து பயிற்சி எடுத்தேன். அறை முழுக்க மேரிகோமின் வித்தியாசமான புகைப்படங்கள். உண்மையான பாக்ஸர் கூட இவ்வளவு பயிற்சி எடுத்திருக்க மாட்டாரென்று கருதுகிறேன்.

படப்பிடிப்பில் என்னுடன் ஸ்ரீலங்கா பாக்ஸராக நடித்த பவித்ரா உண்மையான பாக்ஸர் என்பதால் பல முறை குத்துக்கள் வாங்க வேண்டியாயிற்று. ஒரு முறை முகத்தில் குத்திய குத்தில் நெற்றியில் காயமேற்பட்டு ரத்தம் வந்துவிட்டது. 25நாள் படப்பிடிப்பில் நாள்தோறும் 12 மணிநேரம் பாக்ஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. வீட்டிற்குச் சென்றதும் குளியலறை தொட்டியில் உடல்வலி நீங்க பல மணி நேரம் அப்படியே படுத்துக் கிடந்ததும் உண்டு. நிரந்தரமாக வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு ஒரு விரல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான பின்னர்தான் இந்த பாத்திரத்திற்கு நான் பொருத்தமானவளா என்று கேட்டவர்கள், இப்போது படம்  எப்போது வெளிவரும் என்று ஆர்வத்துடன் கேட்கிறார்கள். இதை என்னுடைய தொழிலுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். இந்தப் புகழை வேறுயாரும் என்னிடமிருந்து பறித்துவிட முடியாது.

மேரிகோமை முதன்முதலாக மணிப்பூரில் நேரில் சந்தித்தபோது நான் நினைத்துக் கொண்டிருந்த பாக்ஸர் தோற்றத்திற்கும் இவரது தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். அவரது நாகரீமான தோற்றம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர் பயிற்சி பெற்ற ஜிம்மிற்குச் சென்று பார்த்தேன். எப்படியெல்லாம் கடினமான பயிற்சிகளை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. மேரிகோமை பொறுத்தவரை அவர் ஒரு வெளிப்படையான பெண்மணி. சமையல் செய்வதிலும் குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதிலும் சிறந்த தாயாக விளங்குகிறார்.

ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில் இவர் பாக்ஸிங் கற்றுக் கொண்டபோது இந்தியா சார்பில் பெண் பாக்ஸர்கள் யாருமே இல்லை. 2000 ஆம் ஆண்டில் இவர் இந்தியப் பிரதிநிதியாக பாக்ஸிங் பந்தயங்களில் பங்கேற்ற போதுதான் ஒலிம்பிக்ஸில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். நானும் உலக அழகி பட்டத்தைப் பெற்றிருந்தாலும் அவரைவிட அதிகமாகவே வெட்கப்படுவேன். மூன்று குழந்தைகளுக்கு தாயான மேரிகோம். அவரது கணவர் முன்பு வெட்கப்படுவது ஆச்சர்யமாக இருந்தது. தற்போது மணிப்பூரில் பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டு மற்றவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார் மேரிகோம்.

இப்படத்தில் நடிப்பதற்காக நான் எடுத்துக் கொண்ட முயற்சியும் பயிற்சியும் வீண் போகவில்லை. உண்மையிலேயே பாக்ஸிங் மேடையில் ஒருவரை வெற்றி கொள்ளுமளவிற்கு இப்போது திறமை இருக்கிறது. "மேரிகோம்' என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய சவாலானபடம் என்பது மட்டும் உண்மை'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.