அறிவியல் சிறகுகளுடன் பறப்பவர்கள்!
இந்தக் காலத்துப் பசங்க யாருமே சரியில்லை. கொஞ்சமாவது பொறுப்பிருக்கிறதா? எப்பப்பாரு சினிமா, டிவி பற்றிப் பேசுறது.
""இந்தக் காலத்துப் பசங்க யாருமே சரியில்லை. கொஞ்சமாவது பொறுப்பிருக்கிறதா? எப்பப்பாரு சினிமா, டிவி பற்றிப் பேசுறது... டூ வீலரில் கண்மண் தெரியாத வேகத்தில் போகிறது... பஸ்ஸில் தொங்கிக் கொண்டு பயணம் செய்து கூச்சல் போடுவது... இப்படியே போனா நம் நாடு என்னாகுமோ?'' என்று கோபத்துடன் பேசுபவரா நீங்கள்?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குருúக்ஷத்ரா பொறியியல் தொழில்நுட்ப விழா ஒன்று நடந்தது. அதை நீங்கள் பார்த்திருந்தால் இப்படியெல்லாம் நிச்சயம் பேசமாட்டீர்கள். இளம் வயதினர் இப்படியும் திறமையாக - இப்படியும் அறிவாக எல்லாம் இருப்பார்களா? என்று மூக்கில் விரலை வைப்பீர்கள்.
""நம்நாட்டிலாவது அறிவியல் கண்டுபிடிப்புகளாவது? யாராவது வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்பான். நாம் நோகாமல் அதைப் பயன்படுத்திக் கொள்வோம்'' என்று சலிப்பாகப் பேசுபவர்களும் அந்த பொறியியல் தொழில்நுட்ப விழாவைப் பார்த்திருந்தால், நிச்சயம் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.
அப்படியென்ன அங்கே என்று கேட்கிறீர்களா?
ஒவ்வோராண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த பொறியியல் தொழில்நுட்ப விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர். அவற்றில் ஒன்றுதான் "ரோபாட்டிக் ஸ்கேவன்ஜர்'.
இந்தக் கண்டுபிடிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங்கின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏழு பேர் உருவாக்கியுள்ளனர். இதைப் பற்றி அவர்களிடம் கேட்டோம்:
""எங்கள் கல்லூரியில் ரோபாட்டிக் கிளப் உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த ஆண்டு குருúக்ஷத்ரா புராஜெக்ட்டுக்காக என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் (அஷ்வின்குமார், ஹரிகுமார், சாய் மோஹித், சரண்யா லக்ஷ்மி, பார்கவி, ஸ்வாதி, ப்ரியா) எல்லாரும் கூடிப் பேசினோம். அப்போது உதித்ததுதான் இந்த ரோபாட்டிக் ஸ்கேவன்ஜர்.
ரயில் நிலையத்தில் நடைமேடைக்கு அருகே உள்ள தண்டவாளத்தில் நிறைய குப்பைகள் கிடக்கும். பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், பேப்பர்கள் மட்டுமல்ல, மனிதக் கழிவுகள் கூட இருக்கும். இவற்றைச் சுத்தம் செய்கிறவர்களும் மனிதர்கள்தானே? மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்யக் கூடாது. அது மனித உரிமை மீறல் என்று உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கிறது. எனவே தண்டவாளத்தில் உள்ள குப்பைகளை, மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் இயந்திரம் ஒன்றைச் செய்தால் என்ன? என்று எங்களுக்குத் தோன்றியது.
ரயில் நிலைய நடைமேடைக்கருகில் உள்ள தண்டவாளத்தில் மட்டுமல்ல, ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள நீண்ட தண்டவாளத்தில் கூட இந்தக் குப்பைகள் கிடக்கின்றன. இந்தியாவின் மிக நீண்ட டாய்லெட் என்று சொல்லும் அளவுக்கு ரயில் தண்டவாளங்கள் இருக்கின்றன. மனிதர்கள் அவற்றைச் சுத்தம் செய்யும்போது, ரயில் வருவதைக் கவனிக்காவிட்டால் விபத்து நடக்கவும் வாய்ப்பு உள்ளது. படுகாயம் அடைந்து உயிர் இழந்தவர்களும் உள்ளனர். எனவே தண்டவாளத்தைச் சுத்தம் செய்யும் ரோபாட்டிக் ஸ்கேவன்ஜரைச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.
நாங்கள் எல்லாரும் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்கள் என்றாலும், எல்லாரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். இருவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பவர்கள். இன்னொருவர் ECE படிப்பவர், சிவில் என்ஜினியரிங் படிப்பவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவர் என இந்த புராஜெக்ட்டுக்குத் தேவையான எல்லாரும் இதில் இருக்கிறோம். அதனால்தான் இந்த ரோபாட்டிக் ஸ்கேவன்ஜரை எங்களால் உருவாக்க முடிந்தது.
இந்த ரோபாட்டிக் ஸ்கேவன்ஜர் தண்டவாளத்தில் செல்லும்போது தண்டவாளத்தின் நடுவே உள்ள குப்பைகள், பாட்டில்கள், மனிதக் கழிவுகளை இந்த ஸ்கேவன்ஜரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் பிரஷ் அப்படியே வாரி எடுத்து இதில் உள்ள டேங்க்கில் கொட்டிவிடும். சுத்தப்படுத்தப்பட்ட தண்டவாளத்தை, ரோபாட்டிக் ஸ்கேவன்ஜரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் இருந்து ஸ்ப்ரே ஆகும் கிருமி நாசினி மேலும் சுத்தமாக்கிவிடும்.
இந்த ரோபாட்டிக் ஸ்கேவன்ஜரை இயக்க ஆட்கள் தேவையில்லை. ஸ்விட்ச்சை ஆன் செய்ததும் தானே இயங்கும். அதுமட்டுமல்ல, ரயில்நிலையத்துக்கு வெளியில் உள்ள தண்டவாளங்களைச் சுத்தம் செய்யும்போது இந்தக் கருவி எங்கே உள்ளது என்பதை மொபைல் போனிலேயே தெரிந்து கொள்ளவும் முடியும்.
ரோபாட்டிக் ஸ்கேவன்ஜரை நாங்கள் சிறிய அளவில் செய்திருக்கிறோம். இதை அப்படியே மூன்று மடங்கு பெரிதாக்கினால், இப்போதுள்ள ரயில் தண்டவாளங்களைச் சுத்தம் செய்ய முடியும். இதற்காக நாங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று விசாரித்தோம். இப்போது ரயில் தண்டவாளங்களின் அகலம் 1.7 மீட்டர் உள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு அகலத்தில் இந்த ரோபாட்டிக் ஸ்கேவன்ஜரை அமைத்தோம்.
நடைமேடைக்கு அருகே உள்ள தண்டவாளத்தை இந்த ரோபாட்டிக் ஸ்கேவன்ஜர் சுத்தம் செய்து கொண்டே போகிறது. பிளாட்பாரம் முடிந்துவிடுகிறது. அப்போது தானே இந்த ரோபாட்டிக் ஸ்கேவன்ஜர் நின்றுவிடும். அப்படி நிற்பதற்காக இதில் ஒரு சென்சாரைப் பொருத்தியிருக்கிறோம்.
ரயில் நிலையத்துக்கு வெளியே ஏதாவது பெரிய பொருள் தண்டவாளத்தில் கிடந்தாலும் இந்தக் கருவி செயல்படுவதை நிறுத்திவிடும்.
இந்தக் கருவியைச் செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவானது. பெரிய அளவில், அதிக அளவில் செய்யும்போது அடக்கவிலை குறைந்துவிடும்'' என்கின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்புறம் செல்லும் பெரிய சாலை. ஏராளமான வாகனங்கள் மிக வேகமாகச் செல்கின்றன. ஒன்றையொன்று முந்திக் கொண்டு செல்கின்றன. ஒருநாள் ஓர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை பின்னால் வந்த ஒரு லாரி முந்திச் செல்ல முயற்சித்தது. இரு சக்கர வாகன ஓட்டி அது தெரியாமல் வாகனத்தை வலது பக்கம் சற்றுத் திருப்ப, பின்னால் வந்த லாரி மோதி, அந்த இடத்திலேயே இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரும், அதன் பின்னால் அமர்ந்திருந்தவரும் இறந்து போய்விட்டார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் மாணவ, மாணவிகள். அப்படி விபத்துகள் நடக்காமலிருக்க என்ன செய்யலாம்? என்று யோசித்ததின் விளைவுதான் இந்த ORRA (On Road Accident Anticipation). இந்தக் கண்டுபிடிப்பின் சொந்தக்காரர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங்கின் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகளான அஷ்வின்குமார், பெனிடா, பவிஷ்யா, ஜெனிதா ஆகிய நால்வரும்.
இந்த ORRA-வின் சிறப்பென்ன? என்று கேட்டோம் :
""ஒரு காரின் டிரைவருக்கு முன் பகுதியில் உள்ள டாஸ்போர்டில் இந்த ஞததஅ -வைப் பொருத்திவிட்டால் அந்தக் காரை விட அதிக வேகத்தில் காரை முந்திச் செல்ல முயலும் அல்லது எதிர்ப்புறத்தில் இருந்து வரும் இன்னொரு வாகனத்தை காரை ஓட்டிச் செல்பவர் தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது. அதன் பின்புறத்தில் இருந்து லாரி முந்திச் செல்ல முயற்சிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது காரில் பொருத்தப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் சென்சார்கள் அதைத் தெரிந்து கொண்டு காருக்குள் டாஷ்போர்ட் அருகே பொருத்தப்பட்டுள்ள விளக்கை எரியச் செய்யும். அது மட்டுமல்ல, "ஒரு வாகனம் உங்களை முந்திச் செல்ல முயற்சிக்கிறது' என்று ஒலியெழுப்பும். அப்படியும் காரை ஓட்டிச் செல்பவர் அதைக் கவனிக்கவில்லை என்றால், அவர் அணிந்துள்ள சீட் பெல்டில் அதிர்வலைகள் உருவாக்கி அவரை விழிப்படையச் செய்யும்.
இப்போது எல்லாம் நல்ல சாலைகள் போட்டுவிட்டார்கள். எல்லாரும் 110- 120 கி.மீ. வேகத்தில் பறக்க ஆசைப்படுகிறார்கள். அப்போது சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனத்தை மிக அருகில் வந்தால்தான் அவர்களால் பார்க்க முடிகிறது. பார்ப்பதில் ஒரு விநாடி தாமதமானாலும், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து நடந்துவிடுகிறது. இந்த ORRA -வைக் காரில் பொருத்திவிட்டால் நின்று கொண்டிருக்கும் வாகனத்தைப் பற்றி முதலிலேயே கார் ஓட்டுநரை எச்சரித்துவிடும். அதிக விபத்துகள் நடக்கும் இக்காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் '' என்கின்றனர்.
இதைப் போல இன்னும் பல கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர் மாணவ, மாணவியர்கள். கொஞ்சமும் கூச்சப்படாமல், தங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றி அவர்கள் உற்சாகமாகவும், தொழில் நுட்ப அறிவுடனும் பேசுவதைப் பார்க்கும்போது யாருக்கும் எதிர்கால உலகத்தைப் பற்றி நம்பிக்கை வராமல் போகாது.