தினமணி கதிர்

நிழலின் நிழல்

நம்மையும் அறியாமல் வழக்கத்திற்கு மாறாகப் போய்க் கொண்டிருக்கிறோமோ? என்று தீபனுக்கு ஒரு மெல்லிய

கே.ஜி.ஜவஹர்

நம்மையும் அறியாமல் வழக்கத்திற்கு மாறாகப் போய்க் கொண்டிருக்கிறோமோ? என்று தீபனுக்கு ஒரு மெல்லிய சந்தேகம் முதன் முதலாய் கிளம்பிற்று.

""என்னங்க, இப்பல்லாம் அடிக்கடி ரூமை சாத்திகிட்டு கம்ப்யூட்டர்னே கதியாய் கிடக்கிறீங்க?'' என்று சுவர்ணா கேட்டேவிட்டாள்.

கரெக்ட். அவள் கேட்டதும் சரிதான். முன்னெல்லாம் இப்படி பண்றதில்லையே என் மடியில் கனம் வந்து விட்டதோ மஞ்சுளா என்ற பெயரில் -அவன் மனதிற்குள் குடைச்சல் கேள்வி எட்டிப் பார்த்தது.

 கண்ணாடி முன் நின்று அவசரம் அவசரமாய் தலை வாரிக் கொண்டிருந்த போது, ""ஏங்க'', என்றவாறே வந்தாள் சுவர்ணா. இடுப்பில் குழந்தை ஆர்த்தி. குழந்தையின் இடது கையில் பாய்ஸன் சென்ட் பாட்டில். திடுக்கிட்டுப் போனான்.

""இந்த சென்ட் பாட்டில் மேஜைமேல் இருந்துச்சு.. நீங்க வாங்கிட்டு வந்தீங்களா?'' என்றாள் இயல்பாக. இவனுக்குத்தான் வியர்த்துவிட்டது.

""ஆமாம்.. சொல்ல மறந்துபோச்சு...'' என்றான் அழுத்தமாக.

இதைக் கேட்டதும் அவள் வியந்து அவன் கண்களையே கூர்ந்து நோக்கினாள். போன மாதம் சுவர்ணாவிற்கு ஒரு புடவை வாங்குவதற்காக ஒரு பெரிய ஷாப்பிங் சென்டருக்கு சென்றான். கூடவே அவளும் வந்திருந்தாள். அவளுக்கு துணிமணி வாங்குவதைவிட கண்ணாடி லிஃப்டில் பயணிப்பது, இலவச மோர் குடிப்பது, துளசிக் கன்றாவது கனகாம்பர செடியாவது வாங்கி வருவது, கடைவாசலில் அடர்த்தியாய் தொடுக்கப்பட்ட மல்லிகைப்பூவை  வாங்கி சூடிக் கொள்வது, மயிலிறகு வாங்கி வீட்டு ஸ்டாண்டில் சொருகி வைப்பது போன்ற விஷயங்கள்தான் பிடிக்கும்.

""இதுக்கெல்லாம் நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம்'' என்று திட்டுவான். 

""நானா என் பர்த்டேக்கு ஸாரி கேட்டேன்? நீங்கதானே கூட்டிட்டு வந்தீங்க..'' என்பாள் மிளகாய்த்தூள் தூவப்பட்ட அந்த பல்வரிசை மாங்காய்துண்டுகளைக் கடித்துக் கொண்டே.

   இரண்டாவது தளத்தில் நுழைந்த போது, ""ஸார்..ஸார்..'' என்று இரண்டு இளம் பெண்கள் கூப்பிட்டார்கள். தீபன் அவர்கள் அருகே சென்றபோது, ""நல்ல ப்ர்ஃப்பியூம் ஸார்..பார்க்கிறீங்களா?..'' என்றவள் மென்மையாக அவன் கையைப் பிடித்து, ஷர்ட்டில் ஸ்ப்ரே செய்ய, அவன் அலறியே விட்டான்.

""என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க.. எனக்கு சென்ட் வாசனையே பிடிக்காது.. இப்ப என்ன பண்றது?'' என்று எரிந்து விழுந்தான். பதைபதைத்துப் போன அந்தப் பெண், ""ஸாரி ஸார்...'' என்று சொல்லி பாட்டில் ஒன்றை அவசரம் அவசரமாக திறந்தாள். அதில் வறுத்த காபி கொட்டை இருந்தது.

""இதை மணந்து பாருங்க..சென்ட் வாசனை தெரியாது...'' என்றாள். இவன் அவர்களை முறைத்தவாறே காபி கொட்டை வாசனையை மூக்கில் நன்றாக ஏற்றிக்கொண்டான்.

சுவர்ணாவிற்கு அதெல்லாம் நினைவுக்கு வந்தது.

""இந்த சென்ட் பாட்டில் உங்களுக்காகவா வாங்கினீங்க?..'' என்றாள் வியப்பாக. இவன் மென்று விழுங்கினான். "அவசரத்திற்கு பதில் அளிக்கத் தெரியாத உனக்கெதுக்குடா மஞ்சுளா நட்பும் மண்ணாங்கட்டியும்...' என்று மனதில் ஒரு குரல் நையாண்டி செய்தது. உண்மையில் இந்த செண்ட் பாட்டில் வாங்கியதற்கு காரணமே மஞ்சுளாதான்.

""நீங்க என்னைப் பார்க்க வரும்போது பாய்ஸன் சென்ட் போட்டுட்டு வாங்க.. கரெக்டா கண்டு பிடிச்சிறுவேன்...'' என்று சொல்லியிருக்கிறாளே? குழந்தையின் கையிலிருந்த சென்ட் பாட்டிலை வெடுக்கென. இழுத்தான். வரவில்லை. அது அலறியது. எரிச்சல் தாங்காமல் குழந்தையின் முதுகில் அறைந்தான். அழுகையின் டெசிபல் உச்சத்திற்கு போனது.

  ""ஐயோ.. ஐயோ.. ஐயோ.. கைக் குழந்தையை அடிக்கிறீங்களே.. என்னாச்சுங்க  உங்களுக்கு?'' என்று அலறிய சுவர்ணா குழந்தையுடன் வேகமாக நகர்ந்தாள். போகும்போது அவனை மிரட்சியுடன் பார்த்துவிட்டுப் போனாள். இப்படி எதுவுமே முன்பெல்லாம் நடந்ததில்லை. வீடே அமைதிப் பூங்காவாக இருக்கும். குழந்தை பசிக்கு மட்டுமே அழும். அப்பாவின் மிரட்டலையோ, அம்மாவின் அதட்டலையோ அது கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. சுவர்ணாவின் முகத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் ஒரு வித நிம்மதி,அமைதி, திருப்தி, எல்லாமே இப்போது மிஸ்ஸிங். இந்த மாற்றமே அவனுள் ஒரு அதிர்வை ஏற்படுத்தி விட்டது.

வாட்சைப் பார்த்தான். மணி பத்தரை. சரியாக பன்னிரண்டு மணிக்கு க்ராண்ட் மாலில் மஞ்சுளாவைச் சந்திப்பதாகப் பிளான்.  நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. பீரோவைத் திறந்து பரபரவென்று தேடினான். அந்த டார்க் ப்ளூ டீ ஷர்ட் கிடைக்கவில்லை. அவன் பிறந்த நாளுக்கு அவன் தந்த பணத்திலிருந்து சேர்த்த சிறுவாட்டு பணத்திலிருந்து சுவர்ணா வாங்கித் தந்த டீ ஷர்ட்.

""எனக்கு நீலக்கலர் பிடிக்காதுன்னு தெரியுமில்லேடி? எதுக்கு இதப் போய் வாங்கிட்டு வந்தே..'' என்று தூக்கி எறிந்த ஷர்ட். இப்போது அது தேவைப்படுகிறதே.. காணோமே... ஒரு வேளை நான் எறிந்ததால் அவளும் அதைத் தூக்கி எறிந்திருப்பாளோ அல்லது பழைய துணிக்காரனிடம் போட்டுவிட்டு ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன் வாங்கியிருப்பாளோ? அப்படி எல்லாம் செய்யக்கூடியவளில்லை சுவர்ணா. அதைத் தேடும்போது புடவைகள், சட்டைகள், குழந்தையின் துணிமணிகள் எல்லாம் நிலை குலைந்து விழுந்தன. கடைசியில் கிடைத்தே விட்டது அந்த டார்க் கலர் ப்ளு டீ ஷர்ட். அவசரம் அவசரமாக அதை அணிந்து கொள்வதற்கும் சுவர்ணா வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஆச்சரியப்பட்டுப் போனாள்.  ""அட, எப்படி சூப்பரா இருக்குது பாருங்க.. இதப்போய் வேணாம்னு தூக்கி எறிஞ்சீங்களே...'' என்றாள் ஆதங்கமாய். அவளுக்கு அதன் பின் கதை தெரியாது.

""நீங்க என்னைச் சந்திக்க வரும் போது பாய்ஸன் செண்ட் போட்டு வந்தால் மட்டும் பத்தாது... நல்ல டார்க் ப்ளு கலர்ல ஒரு டீ ஷர்ட் போட்டுட்டு வாங்க...'' என்று மஞ்சுளாதான் சொல்லி இருந்தாள்.

 ""சென்ட் பாட்டில் எங்கே?'' என்றான் சுவர்ணாவிடம். கேட்கும்போதே குற்ற உணர்வு பீறிட்டுக்கொண்டு வந்தது.

""குழந்தை தரமாட்டேங்குறா...'' என்றாள் சுவர்ணா லேசான பயத்துடன். இவன் கூடத்திற்கு சென்று பார்த்த போது, சென்ட் பாட்டிலை இறுக்கமாக கைகளால் பற்றியவாறே தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை. அவன் அவளைப் பார்த்தான். அவள் மெள்ள குனிந்து பாட்டிலை உருவினாள். வெற்றிட விரல்களுக்கு நடுவே ஒரு பொம்மையைக் கொடுத்தாள். பாட்டிலை வாங்கி அவசரம் அவசரமாக மேனியெங்கும் ஸ்ப்ரே செய்துகொண்டான். அவளுக்கே அந்த நெடியில் தலை வலித்தது. எப்படி இருந்தவர் இப்படி ஆய்ட்டாரே...என்று கவலையுடன் அவனைப் பார்த்தாள் அவள். அதே சமயம் அவனுக்கும் அதே எண்ணம் அவனைப் பற்றி அவனுக்கே உண்டாயிற்று

வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு, படபடப்பு, சொல்லவரும் வார்த்தைகளில் கோர்வையின்மை போன்ற விஷயங்கள் அவனிடம் தென்பட்டதால், அவளுக்கு முதன்முதலாய் ஒரு கிலி ஏற்பட்டது.வேகமாய்க் கிளம்பியவனை வழிமறித்து நிறுத்தி,  ""மதியம் சாப்பாடு'' என்றாள்.

""தேவையில்லை... அங்க போய் சாப்பிடப் போற சிக்கன வாந்தி எடுக்காம இருக்கணும்''அவசரத்தில் வார்த்தை வந்து விழுந்து விட்டது.

"" ஐயையோ... சிக்கனா.. வாந்தியா... எங்க போறீங்கங்க...பகவானே... எனக்குப் பயமா இருக்கே... இவர் பண்றது ஒண்ணும் சரியில்லையே...ஏங்க என்னாச்சுங்க உங்களுக்கு... '' சுவர்ணா பதறியடித்து உலுக்குகிறாள்.

"" ச்சு..வழியை விடு...'' என்றவன் வேகமாக பல்சரை ஸ்டார்ட் செய்தான். வியூ மிரரில் முழுதாக தெரிந்த சுவர்ணா புள்ளியாகி மறைந்து போனாள். "கேக் கூட சாப்பிடாம இருக்கும் வெஜிடேரியனான எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. .என்ன செய்ய..ஆபீஸ் விஷயமாக நான் வெளிநாடு போனா சமாளிக்க. இந்த என்வீ சமாச்சாரம்லாம் உதவும்'னு, மஞ்சுளாதானே சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அவ ரியலி இன்டலிஜண்ட்..

இந்த முகநூல்  நட்பு தீபனைப் பொறுத்தவரை வரமா? சாபமா? என்று தெரியவில்லை. ஆனாலும் தற்சமயம் ரொம்ப திரில்லிங்கா இருப்பது மட்டும் உண்மை. என்ன இதில் சில சென்டிமெண்டுகள் ஸ்பீட் ப்ரேக்குகளாக உள்ளன. சுவர்ணா, குழந்தை ஆர்த்தி என்று பலவித பிணைப்புகள் அவனைப் பின்னுக்கு இழுத்தன. மனம் என்று ஒன்று வந்து விட்டாலே கூடவே மனச்சாட்சியும் வந்து தொலைக்கிறதே. உருவத்திலிருந்து நிழலைப் பிரிக்கமுடியுமா? என்ன நீ என்னைக் கடந்த பின்னால் உன் நிழலை நான் பிடித்துக் கொண்டேன் என்பது கவிதைக்கு மட்டும் அழகாக இருக்கலாம்.

""தீப்பு, என் நூற்றுக்கணக்கான நண்பர்களில் நான் யாரையும் நேரில் சந்திக்க ஆசைப்பட்டதில்லை. .உன் கிடார் இசையும், புதுக்கவிதைகள் மட்டுமல்ல.. உன் வித்யாசமான சிந்தனைகளும் என்னைக் கவர்ந்து விட்டன... நீ வித்யாசமானவன் தீப்பு..'' மஞ்சுளாவின் வார்த்தைகளைப் படித்தபோது அவன் மேலேயே அவனுக்கு ஒரு கர்வம் வந்துவிட்டது. முகமறியாப் பெண் ஒருத்தி அவனை வியக்கும் குணம் அவனிடத்தில் இருக்கிறது என்ற நினைப்பே அவனுக்குப் பெருமையாக இருந்தது

""கிராண்ட் மால் வந்து விட்டது ஸார்... ஸார்...'' என்று கூவினான் அந்த காக்கிச்சட்டைக் காரன்.

""பார்க்கிங் டோக்கன் வாங்காம போறீங்களே சார்...மணிக்கு ஐம்பது ரூபா...'' சீட்டை நீட்டினான். ""பகல் கொள்ளை'' என்று முணுமுணுத்தவாறே  டோக்கனைப் பெற்றுக் கொண்டான். நவ நாகரீக யுவதிகள், இளைஞர்கள்,ஃபெர்முடாஸ் போட்ட கிழடுகள்,டைட் பனியன் வெள்ளைக்காரிகள்  என்று மாலில் கூட்டம் வழிந்தது. இந்த மாலுக்கு பலமுறை சுவர்ணாவோடு வந்திருக்கிறான். ஆனால் இப்போதுதான் அவள் இல்லாமல் வெறும் "திக் திக் 'உணர்வுடன் வந்திருக்கிறான். மனதில் இத்தனை நாள் இல்லாத பயம் வேறு, வேண்டாத விருந்தாளியாய் வந்து உட்கார்ந்திருந்தது. திடீரென கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தன. நான் பல்சரில் கிளம்பியதும், சுவர்ணா ஓர் ஆட்டோவில் என்னை, ஃபாலோ பண்ணியிருந்தால்

""சே மடையா ..ஏன் பயப்படறே?'' அவள் தனியாக வீட்டை விட்டு இறங்கியதில்லை.. "ஹஹ் ஹ ஹ் ஹா...' சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்டுப் பார்த்தான். யாருமில்லை. அவன் உள்ளிருந்துதான் சிரிப்பு வந்தது.

""மிஸ்டர் தீபன்...நீங்க கூடத்தான் இப்படி வந்ததில்லை...நீங்க ஒரு விதியை உடைத்த மாதிரி அவங்களும் விதியை உடைத்து விட்டிருந்தால் "குழந்தை அழுதாள்... பொம்மை கேட்டாள். ஃப்ராக் வாங்கலாம்னு நினைச்சேன்'. இப்படி எத்தனையோ பொய்கள் சுவர்ணாவிற்கு கிடைக்கலாம்.  உங்களைக் கையும் களவுமாய் பிடிக்க'' அவனுக்கு முதன்முதலாய் வயிறு கலங்கிய மாதிரி இருந்தது.

மணி பன்னிரண்டை நெருங்கி விட்டது. தீபனுக்கு படபடப்பு கூடிக் கொண்டே போயிற்று. இந்த மாதிரி  நேரங்களில் வந்த விஷயம் சீக்கிரம் முடிந்தால் நல்லது. டீ ஷர்ட்டை நன்கு இழுத்துவிட்டுக் கொண்டான். இவனுக்கு அவள் முகம் தெரியாது. அவளுக்கு இவன் முகம் தெரியாது. இப்போதைக்கு கரீனாகபூர் போட்டோவிலும்,ஷாருக்கான் போட்டோவிலும் நட்பு ஓடிக்கொண்டிருந்தது.

""தீபன்  ரிஷப்ஷன் அருகே முன்னும் பின்னும் நடை பயின்று கொண்டிருங்கள். நான் மெல்ல பின்புறமாய் வந்து உங்கள் வலது தோளைத் தொடுவேன்'' -மஞ்சுளா சொல்லியிருந்தாள்.

 இன்னும் ஓரிரு நொடிகளில் அவள் தொட்டு விடலாம். தொட்ட பிறகு என்ன நடக்கும்? நான் திரும்புவேன். நிச்சயம் அவள் அழகாய்த்தான் இருப்பாள். அவளின் கடிதங்களின் அழகு, நேர்த்தி, எல்லாமே அதைச் சொல்கின்றன. உருவத்தை மறைத்தது போல் குரலையும் மறைத்துவிட்டாள். இன்றேல் இன்னும் நன்றாய் அவளின் அழகை யூகிக்கலாம். பேச்சு தொடர்ந்த பின் நட்பு கூடும். நெருக்கமாவாளோ? அவளின் வேண்டுகோளைத் தட்ட முடியுமா? இப்பவே கேஎஃப்சி-யில் அரை பக்கெட் சிக்கனாவது  ஆர்டர் பண்ணிச் சாப்பிடணும்னு அவ சொன்னதுக்கு சரின்னு சொன்னேனே? வெளியூர் கூப்பிடுவாளோ? பலவித யோசனைகளுடன் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான்.

கூட்ட நெரிசலில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தை ஆர்த்தியின் ஞாபகம் வந்தது. காலையில் அதன் அழுகையும் விம்மலும் நினைவுக்கு வந்தது. குழந்தை மீது ஒரு தூசு பட்டால் கூட துடித்துப் போகிறவன் அவன். எப்படி முதுகில் அறைந்தான் என்று இன்னமும் விளங்கவில்லை. இந்த மூன்று வருட தாம்பத்தியத்தில் சுவர்ணாவின் முகம் வாடியதே இல்லை. பல சந்தர்ப்பங்களில் அவன் திட்டியபோதும். ஆனால் இன்று நடந்ததென்ன? எல்லாம் இந்த விபரீத விளையாட்டால் வந்த வினையா அல்லது இது வெறும் சாதாரண விளையாட்டா? எப்போது ஒருவன் ஒரு விளையாட்டில் இறங்கும் போது உடன் இருப்பவர்களுக்கு இனம் புரியாத பயம் தொற்றிக் கொள்கிறதோ..அல்லது விளையாடுபவன் உடனிருப்பவர்களைப் பார்த்து கலவரம் கொள்கிறானோ? அந்த விளையாட்டு விபரீத விளையாட்டுதான். அந்த வகையில் இது நிச்சயம் ஒரு விபரீத விளையாட்டு தான். இந்த விளையாட்டில் கம்பியில் நடப்பது நல்லபடியாய் முடியுமா, கரணம் தப்புமா? மரணம் விளையுமா? என்றெல்லாம் சில நிமிடங்களில் தெரிந்து விடும். இது சரியா?

""தீபன்...களவும் கற்று மற'' -இப்போது உட்குரல் அவனை சப்போர்ட் பண்ணிற்று

சட்டென்று வாட்சைப் பார்த்தான் தீபன். துணுக்குற்றான். மணி பன்னிரண்டை எப்பவோ கடந்திருந்தது. பங்சுவாலிட்டி பற்றி வரி வரியாய் எழுதுபவளுக்கு என்னாயிற்று? ஏன் வரவில்லை? வந்து ஏன் என் வலது தோளைத் தொடவில்லை? இனியும் வருவாளா? வந்தவுடன் என்னைப் பார்த்து வியப்பாளா? புகழ்வாளா? ""ஒரு சின்னப் பிரச்னை டியர்...ஒரு ஒரு லட்சம் தரமுடியுமா? என்று கேட்பாளா? வாங்க ஹோட்டல் சுமியில் ரூம் போடலாமா? என்று கூப்பிடுவாளா? அல்லது ஒற்றைக் காலில் வளையமும் கையில் வெள்ளி ஸ்ட்ராப்பும் அணிந்து டைட் ஜீன்ஸ் பனியனில் இருக்கும் ஒரு நோஞ்சான் இளைஞனை அறிமுகப்படுத்தி, ""மீட் மை வுட் பீ'' என்று அதிர வைப்பாளா? அவனுக்கு ஒரு கவிதை நினைவுக்கு வந்தது: "நட்சத்திரங்கள் மின்னுகின்றன. அதனுடைய இடத்தில் இருக்கும் வரை'

  மால் இப்போது தகிப்பது போல் இருந்தது. மனக்குழப்பம் கூடிக்கொண்டே போயிற்று. மனம் வலுவிழக்க ஆரம்பித்து விட்டதோ? கயிறு இழுக்கும் போட்டி. ஓர் அணியில் பலபேர். எதிர் அணியில் ஒரே நபர். அது ஒரு யானை. இவன் யானையா அல்லது மஞ்சுளா யானையா? எதிர் அணியில் யார்? யார்? அங்கு சுவர்ணா, ஆர்த்தி, சமூகம் மற்றும் இவனின் மனசாட்சியா? ஏன் இப்படி எல்லாம் இப்போது நினைவு வந்து தொலைக்கிறது? அவள் வரவில்லை. நேரம் ஆக ஆக அந்த யானை இப்போது எதிர்  அணியில் இருந்த மாதிரி இருந்தது. அதன்மேல் சுவர்ணாவும், ஆர்த்தியும். சுவர்ணாவின் கையில் இவனுடைய மனசாட்சி அங்குசமாக இவனுக்கு மூச்சு முட்டிற்று. ஓட்டமெடுக்க வேண்டும் போலிருந்தது. அவள் இன்னும் வந்து தோளைத் தொடவில்லை. மனது கவுண்ட்டெüன் சொல்ல ஆரம்பித்தது.

"பத்து... ஒன்பது.... எட்டு... ஏழு...ஆறு... நாலு... ரெண்டு... ஒண்ணு... பூஜ்ஜியம்' அதுக்கான நேரம் முடிந்து விட்டது.

""நிற்காதே...ஓடு..''

அவன் வேகமாக ஒரு ரெடிமேட் ஷாப்பினுள் நுழைந்தான். அங்கிருந்த இளம் பெண் இவனையும் இவன் வேகத்தையும் கவனித்தாள்.

""என்ன ஸார் வேணும்?'' என்றாள்.

"" ஒரு டார்க் கலர் டீ ஷர்ட்''

"" சிவப்பு கலர் பரவாயில்லையா?''

"" ஓக்கே..ஓக்கே ஆனா சீக்கிரம் எடுங்க. வாட்சைப் பார்த்தான். மணி ஒன்றே முக்கால்.

""ûஸஸ் என்ன ஸார்..'' என்றவள் அவன் கண்களையே பார்த்து வலது தோளைத் தொட்டாள். திகிலடித்து பின் வாங்கினான். ""லக

ûஸஸ்'' என்றான். ஷர்ட் வந்ததும் டிரையல் ரூமிற்கு ஓடி மாற்றிக் கொண்டான். வெளியே வந்ததும் அவள்,""அப்ப அந்த டார்க் ப்ளூ ஷர்ட்ட பேக் பண்ணிறவா?'' என்றாள். லேசாகச் சிரித்து கூடவே ""நல்ல தமாஷ்'' என்றாள். ஓர் அழகிய பார்பிக்யூ பொம்மை போலிருந்தாள். இவன் மறுபடியும் அவளை உற்றுப் பார்த்தான்.

""ஏன்...சிரிக்கிறீங்க?'' என்றான். ""வரும்போது நீலம்..போகும் போது சிவப்பு'' என்றாள் மறுபடியும் சிரித்தவாறே. இவள் ஏன் வந்ததிலிருந்தே ஒரு மாதிரி நடந்துகொள்கிறாள்? அவன் மடியிலிருந்த கனம் சந்தேகமாய் வெளிப்பட்டது. சட்டை மாறியிருந்தாலும் அந்த கிராண்ட் மாலை விட்டு வெளியே ஓடி விட மனசு பரபரத்தது. கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு பார்க்கிங் நோக்கி நடக்கையில் லேசான வெளிச்சம் மட்டும் இருந்த அந்த குறுகிய வெராந்தா குறுக்கிட்டது. அதைக் கடந்த போது கண்ணாடி வளையல்களின் "சிலுங்..சிலுங்... சத்தம் திரும்புவதற்குள் ஒரு மென்மையான கரம் அவன் வலது தோளைத் தொட்டது

 ஷாக் அடித்து திரும்பினான்.

 கை நிறைய கண்ணாடி வளையல்கள். முகத்தில் ஏகப்பட்ட பவுடர். காதெல்லாம் வளையங்கள். ஒற்றை மூக்குத்தி. அழுத்தமான லிப்ஸ்டிக். வெற்றிலைக் கறை படிந்த பற்களுடன் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

    ""ஹாய் சுந்தர்... நான்தான்.. ஷர்மி உங்களை.. சிவப்பு நிற டீ ஷர்ட் போட்டுகிட்டு இரண்டு மணிக்கு வரச்சொன்னவள்'' -கிசுகிசுத்தாள் அவன் காதோரம்.

  ""ஐயோ.....ஐ யாம் தீபன்...''

 "" ஓ...ஸாரிடா  செல்லம்...'' பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்து விட்டுப் போனாள்.நிலை குலைந்து போனான் அவன். ஒரு கணம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். ஒரு சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியவன் வேகமாக வாஷ் பேஸினை   நோக்கி நடக்க ஆரம்பித்தான். கன்னத்தை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் போலிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT