கவிதை எழுதும் பள்ளி மாணவி!
சென்னை அம்பத்தூரில் ஒரு திருமண வரவேற்பு விழா. பாட்டுக் கச்சேரி. வழக்கமான பாடல்கள், இசைக் கருவிகள்.
சென்னை அம்பத்தூரில் ஒரு திருமண வரவேற்பு விழா. பாட்டுக் கச்சேரி. வழக்கமான பாடல்கள், இசைக் கருவிகள். ஆனால் கீ போர்டு வாசித்தவர் ஓர் இளம் பெண். ட்ரம்ஸ் வாசித்தவர் இன்னோர் இளம்பெண். இந்த இசைக் கச்சேரியை நடத்துபவர் ஒரு பெண்மணி. பாடகியாக மேலும் ஒரு பெண்மணி. பெண்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த வித்தியாசமான கச்சேரியைப் பற்றி, அதன் அமைப்பாளரான கோமதியிடம் பேசினோம்:
""எங்களுடைய "ரிதம்ஸ்' இசைக்குழுவை ஆரம்பித்து 8 ஆண்டுகளாகின்றன. நான் இந்தத் துறைக்கு வந்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நான் படித்தது காஸ்ட்யூம் டிசைன், டிரஸ் மேக்கிங் பற்றி. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தேன். அப்போது கல்லூரி ஆண்டு விழாக்களில் நான் பாடுவேன். நன்றாகப் பாடுவதாக எல்லாரும் பாராட்டுவார்கள். படித்து முடித்ததும் உஷா ஃபேன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து 28 ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றேன்.
ஓய்வுக்குப் பிறகு டிரினிடி கல்லூரியில் கீ போர்டு வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதில் மொத்தம் 8
கிரேடுகள் பாஸ் பண்ண வேண்டும். நான் 3 கிரேடுகள் பாஸ் செய்தேன், சென்னை கிழக்குத் தாம்பரத்தில் உள்ள "ஸரிகமபதநி' இசைப் பள்ளியின் ஆண்டு விழாவின் போது நான் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்களைப் பாடினேன். அப்போதுதான் எனக்குப் பாட வரும் என்று தெரிந்தது.
நான் இப்படி பாடகியாக உருமாறியபோது எனது பேத்திகள் சரண்யாவும், சந்தியா லக்ஷ்மியும் முறையே கீ போர்டும், ட்ரம்ஸூம் வாசிக்க கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். சந்தியா அப்போது நான்காவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சரண்யா 2 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
அவர்களிருவரும் "மழலை ராகங்கள்' இசைக் கச்சேரிகளில் வாசிக்க ஆரம்பித்தனர். நாம் ஏன் வேறு இசைக் குழுக்களில் பங்கேற்க வேண்டும்? நாமே புதிதாக இசைக் குழு ஆரம்பித்தால் என்ன? எனத் தோன்றியது. 2007 இல் இசைக் குழுவை ஆரம்பித்தேன்.
வேறு குழுக்களில் பங்கேற்கும்போது பாடகர்கள், பாடகிகள், பிற இசைக் கலைஞர்களின் தொடர்புகள் எனக்குக் கிடைத்தன. அதனால் இசைக் குழு ஆரம்பிப்பது எனக்கு எளிதாக இருந்தது.
இசைக் கச்சேரியை நடத்த ஒருவரிடம் ஒரு தேதியில் ஒத்துக் கொண்டால் தலை போகிற நிலை வந்தாலும் அதை நடத்தியே ஆக வேண்டும். எனவே நிறைய இசைக் கலைஞர்களிடம் தொடர்பு கொண்டு, அவர்களைக் குறித்த நாளில், நேரத்தில் அவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். இது ரொம்ப முக்கியம்.
கச்சேரிக்கு வாத்தியங்கள் இசைக்கக் கூடிய, பாடக் கூடிய கலைஞர்களை வரவழைப்பது மட்டுமல்ல, ஆடியோவிற்கும் நான்தான் ஏற்பாடு செய்கிறேன். அப்போதுதான் எங்களுடைய தேவைக்கேற்ப ஆடியோவை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.
ஒரு கச்சேரிக்கு எல்லாவிதமான மனிதர்களும் வருவார்கள். அவர்கள் ரசனையும் வேறு வேறு மாதிரி இருக்கும். எனவே அனைத்துத் தரப்பினரையும் திருப்தி படுத்துகிற மாதிரி இசைக் கச்சேரியை நடத்த வேண்டும். பழைய பாட்டுகளைச் சிலர் விரும்பிக் கேட்பார்கள். சிலர் இக்காலத்துப் பாடல்களை விரும்புவார்கள். சிலர் பழையதும் அல்லாத, புதியதும் அல்லாத பாடல்களைக் கேட்பார்கள். எல்லாரும் விரும்புகிற மாதிரி கச்சேரியை நடத்த வேண்டும்.
கச்சேரிக்கு ஒத்துக் கொண்டதில் இருந்து, கச்சேரியை நடத்தி முடிக்கும் வரை எப்போதும் டென்ஷனாகவே இருக்கும்.
பெண்கள் நடத்துகிறார்களே என்று வியந்து கச்சேரிக்கு புக் செய்பவர்களும் இருப்பார்கள். பெண்கள் நடத்தும் இசைக் கச்சேரி நன்றாக இருக்காது என்று வேறு இசைக்குழுக்களை நாடிச் செல்பவர்களும் இருப்பார்கள்.
சென்னை நகரிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் கச்சேரி நடத்த நாங்கள் பெறும் கட்டணத்தை விட, தொலை தூரங்களில் கச்சேரி நடத்த அதிகக் கட்டணத்தை வசூலிக்கிறோம். காரணம், போக்குவரத்துச் செலவு அதிகமாவது, கலைஞர்கள் நீண்ட தொலைவு எனில் அதிகச் சம்பளம் கேட்பது.
எனது பேத்தி சந்தியா மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவி. சரண்யா முதலாம் ஆண்டு பி.காம் மாணவி. இருவரின் படிப்பும் கெடாமல் கச்சேரிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்கிறேன். தேர்வு நாள்களில், படிப்பு காரணமாக கச்சேரிக்கு அவர்கள் வர முடியாத நாள்களில் இருவரையும் நான் தொந்தரவு செய்வதில்லை.
எங்களுடைய இசைக் குழுவில் மட்டுமல்ல, வேறு இசைக் குழுக்களிலும் நான் பாடுகிறேன். என் பேத்திகள் வாத்தியங்களை இசைக்கிறார்கள்.
திருமண விழாக்களில் மட்டுமல்ல, கோவில் விழாக்களிலும் கச்சேரி நடத்துகிறேன். கோவில் விழாக்களில் திரைப்படங்களில் இடம் பெற்றிருந்த பக்திப் பாடல்களைப் பாடுகிறோம். ஆனால் என்ன? சில பக்திப் பாடல்களைப் பாடியதுமே, சினிமாப் பாடல்களைப் பாடுமாறு சீட்டு எழுதிக் கொடுத்துவிடுவார்கள். வேறு வழி? பாடித்தான் ஆக வேண்டும் '' என்கிறார் கோமதி.
ஆங்கில வழியில் படிக்கும் ஒரு தமிழ் மாணவனுக்கோ, மாணவிக்கோ தமிழைப் பிழையின்றி உச்சரிப்பதே பெரும்பாடு. அதிலும் நான்கு வரி தமிழில் பிழையின்றி எழுதுவது அவர்களால் முடியவே முடியாத செயல். ஆனால், ஆங்கில வழியில் படிக்கும் ஒரு தமிழ் மாணவிக்குக் கவிதைகள் என்றால் உயிர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? "பன் மலருள் என் மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அந்த மாணவி ஹரிபிரியா. சென்னை பெரியார் நகரில் உள்ள "பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி' யில் பிளஸ் டூ படிக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்:
எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?
எனது மூன்று வயதில் நான் "வெள்ளை முடி வெள்ளை முடி- வயசான தாத்தா முடி- தம்பிப் பயலைத் தூக்கும் நடராசா தாத்தா முடி- வெள்ளை முடி வெள்ளை முடி' என்று விளையாட்டாகச் சொல்லியிருக்கிறேன். எனது தாத்தா இ.ப.நடராசன் "பன்மலர்' என்ற சிறு இலக்கிய இதழை நடத்தி வருபவர். அவர் எனது மழலைக் கவிதையை அதில் வெளியிட்டிருக்கிறார். எனக்கு விவரம் தெரியாத காலத்திலேயே எனது கவிதைப் பணி தொடங்கிவிட்டது.
உண்மையில் தமிழ்க் கவிதையில் ஆர்வம் வந்தது எப்படி?
நான் கவிதைத் தொகுப்புகள் எல்லாம் படித்து வளர்ந்தவள் இல்லை. இப்போதுள்ள பாடச்சுமையில் பாடப் புத்தகங்களைத் தவிர, வேறு எதையும் படிக்க முடிவதில்லை. நேரம் இருப்பதில்லை. எனவே தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள செய்யுள்களை, கவிதைகளைப் படித்தே எனக்கு கவிதைகளில் ஆர்வம் வந்துவிட்டது.
நீங்கள் எழுதிய கவிதைகள் எல்லாம் இலக்கண அடிப்படையில் அமைந்தவையா?
எதுகை, மோனையுடன் எழுத முயற்சி செய்திருக்கிறேன். இனிமேல்தான் முறைப்படி தமிழ் யாப்பிலக்கணத்தைக் கற்க வேண்டும். மனதில் தோன்றியவற்றுக்கு கவிதை உருவம் கொடுத்திருக்கிறேன்.
எதற்காக எழுதுகிறீர்கள்? பிறருக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதுகிறீர்களா?
எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறபோது எழுதுகிறேன். அதைப் பிறர் படித்துப் பாராட்டும்போது மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதியதைத் திரும்பவும் படித்துப் பார்க்கிற போது கிடைக்கிற சந்தோஷத்துக்காகவே கவிதை எழுதுகிறேன். பிறருக்கு எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து எதையும் எழுதுவதில்லை. ஆனால் நான் எழுதிய "வாக்களித்தல் நம் உரிமை' என்ற கவிதை நல்ல கருத்துகளைச் சொல்கிறது என்று அதைப் படித்தவர்கள் சொல்கிறார்கள்.
நீங்கள் கவிதை எழுதுவது உங்களுடைய நண்பர்களுக்குத் தெரியுமா?
கவிதைத் தொகுப்பு வெளிவரும் வரை யாருக்கும் தெரியாது. தொகுப்பு வெளிவரப் போகிறது என்று தமிழாசிரியரிடம் சொன்னபோது, மிகவும் ஆச்சரியப்பட்டார். எனது நண்பர்களும் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டுப் பாராட்டினார்கள். நான் கவிதை எழுதுவதற்கும் அவற்றைப் புத்தகமாக வெளியிடுவதற்கும் என் தாத்தா மிகவும் உதவினார். அவரில்லாமல் நான் கவிதை எழுதியிருக்க முடியாது.