முகப்பு
தினமணி கதிர்

ஒவ்வொரு படமும் எனக்குப் பெருமைதான் : வைஜெயந்திமாலா

1971-ஆம் ஆண்டில் திரையுலகிலிருந்து ஓய்வு பெற்றவுடன் திரும்பவும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்படவில்லை. சினிமாவுக்குள் திரும்ப வேண்டுமென்ற ஆசையும் இல்லை. ஒருமுறை கமல்ஹாசன்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 1971-ஆம் ஆண்டில் திரையுலகிலிருந்து ஓய்வு பெற்றவுடன் திரும்பவும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்படவில்லை. சினிமாவுக்குள் திரும்ப வேண்டுமென்ற ஆசையும் இல்லை. ஒருமுறை கமல்ஹாசன் என்னைச் சந்தித்து "விஸ்வரூபம்-2' படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தினார். அவர் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பு இருந்தாலும் என்னுடைய கொள்கையை நான் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. நான் ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரத்தை அவர் விளக்கினார். ""கமல், நான் நீண்ட காலத்திற்கு முன்பே படங்களில் நடிப்பதை விட்டுவிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? ஒருமுறை தீர்மானித்துவிட்டால் அதிலிருந்து நான் எப்போதுமே பின்வாங்குவதில்லை. தயவுசெய்து மன்னியுங்கள்'' என்று கூறினேன். இந்தப் பதில் அவருக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்குமென்பது எனக்குத் தெரியும்.

 ரஜினிகாந்தும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். நான் உண்மையாக நேசிப்பவர்களில் அவரும் ஒருவர். அவரும் பலமுறை என்னை படங்களில் நடிக்க வற்புறுத்தியிருக்கிறார். ஒருமுறை நாங்கள் அனைவரும் கூடியிருந்த நேரத்தில் ரஜினி சொன்னார். ""இவரைப் பாருங்கள். எவ்வளவு பணம் கொடுக்கத் தயாராக இருந்தாலும் மீண்டும் நடிப்பதில்லை என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார். உங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டால் மக்களிடமிருந்து கிடைக்கும் மரியாதையே அலாதியானது''.

 மறைந்த தயாரிப்பாளர் யாஷ்சோப்ரா, அவரது "திவார்' படத்திலும், மனோஜ்குமார் அவரது "கிராந்தி' படத்திலும் நடிக்க எனக்கு அழைப்பு விடுத்தபோதுகூட நான் அதை ஏற்கவில்லை. என்னுடைய ரசிகர்கள் மனதிலிருந்து விலகக்கூடாது என்பதற்காகவே உச்சத்தில் இருந்தபோதே திரையுலகத்தை விட்டு விலகிவிட்டேன். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் ஒரே தயாரிப்பாளர் படத்தில் அடுத்தடுத்து நடித்தாலும் வித்தியாசமான கேரக்டர்களைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். பிமல்ராயின் "தேவதாஸ், மதுமதி', பி.ஆர்.சோப்ராவின் சாதனா, நயா தவுர் போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

 என்னுடைய காலத்தில் நடிகைகள் அனைவருமே புகழ்பெற்ற கதாநாயகர்களுடன்தான் நடிக்க விரும்புவார்கள். திலீப் குமாருடன் நான் சேர்ந்து நடித்த மதுமதி, கங்கா ஜமுனா, தேவதாஸ், லீடர், சங்கர்ஷ் போன்ற படங்கள் அத்தனையும் வெற்றி பெற்றன. எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது. தேவ் ஆனந்துடன் பல படங்களில் நடித்திருந்தாலும் "ஜுவல் தீஃப்'தான் எனக்குப் புகழைத் தந்தது. ராஜ்கபூருடன் நடித்த "சங்கம்' எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாகும். தயாரிப்பாளரும் நடிகருமான அவர் ஒரு சிறிய காட்சி என்றாலும் சிறப்பாக வரவேண்டுமென்பதற்காக காட்டிய அக்கறை என்னை வியக்க வைத்தது. "புத்தா மில் கயா' பாடல் காட்சியில் நடிப்பதற்கு முதலில் தயக்கம் இருந்தாலும், என்னாலும் அதுபோல் நடிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவே, அந்தக் காட்சியில் தேவையான காஸ்ட்யூம்களை வெளிநாட்டிலிருந்து காபரே நடனம் ஆடுபவரிடமிருந்து தருவித்தேன்.

 "கங்கா ஜமுனா' படத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்துப் பெண் போஜ்புரி மொழியைப் பேசுவது போன்ற பாத்திரம் கிடைத்தது சவாலாக இருந்தது. பழக்கப்பட்ட ஒரு துறையிலிருந்து வேறு ஒரு துறைக்குச் செல்வதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதற்கு உதாரணம் நான் அரசியலுக்குச் சென்றதுதான். அந்த அனுபவம் என்னுடைய வாழ்க்கையில் வித்தியாசமானது என்றாலும் அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. ஏனெனில் எதையுமே நான் முன்கூட்டியே தீர்மானித்த பிறகே இறங்குவதுண்டு. என்னுடைய வாழ்க்கையுடன் இன்னமும் தொடர்ந்து இருப்பது நடனம்தான். நான் முதன்முதலாக காதலிக்கத் தொடங்கிய நடனம் இன்னும் என்னை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவுட்டோர் விளையாட்டுகளிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கோல்ப் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறேன். ஆனால் வேறு பல அலுவல்கள் காரணமாகத் தொடர்ந்து ஆட முடிவதில்லை.

 எதையுமே வெளிப்படையாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும். அதேநேரத்தில் என்னுடைய தன்மானத்தையும் விட்டுத் தர மாட்டேன். "தேவதாஸ்' படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அளித்தபோது அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அனுபவத்தைத்தான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய கணவருடன் இருந்த அதே மகிழ்ச்சி இப்போதும் என்னுடைய மகன், மருமகள், பேரனுடன் இருக்கும்போதும் இருப்பதாகவே உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் நடித்த படங்கள் அனைத்துமே பெருமையைத் தேடித் தந்தவைதான்''.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.