தினமணி கதிர்

வித்தியாசமான கில்லி பண்டிகை!

ஜனவரி 1, சித்திரை 1, தை 1- இவையெல்லாம் புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளாகும். ஆனால்,

ஏ. பேட்ரிக்

ஜனவரி 1, சித்திரை 1, தை 1- இவையெல்லாம் புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளாகும். ஆனால், இவற்றை தவிர்த்து புத்தாண்டை தங்களது குல வழக்கப்படி பாரம்பரியமாக கொண்டாடுவோரும் இருக்கின்றனர். இவர்கள்தான் நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடி மக்களாவர்.

இவர்கள் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தங்களது மரபுப்படியும், குல வழக்கப்படியும் தீர்மானிக்கப்பட்ட நாட்களை அடிப்படையாக வைத்தே கொண்டாடுகின்றனர். அதனால் மற்றவர்கள் கொண்டாடும் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் போல இவர்களது புத்தாண்டு கொண்டாட்ட தினங்கள் இருப்பதில்லை.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய பழங்குடிகளான தோடர் இனத்தார் "ஆருத்ரா தரிசனத்தை' புத்தாண்டு தொடக்கமாகவும், கோத்தர் இனத்தார் "அய்யனோர்-அம்மனோர் பண்டிகை' என ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் கொண்டாடும் நிலையில் மவுண்டாடன் எனப்படும் பழங்குடியினர் "புத்தரி திருவிழா' என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவை புத்தாண்டு கொண்டாட்டங்களாக டிசம்பர் மாதத்திலேயே கொண்டாடி விடுகின்றனர்.

இந்நிலையில் கோத்தர் இன பழங்குடியினர் அய்யனோர்-அம்மனோர் திருவிழாவையொட்டி "கில்லி பண்டிகை' என்ற பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதற்காக விரதமிருந்து பாரம்பரிய வழக்கப்படி உடைகளை அணிந்து குல தெய்வத்தின் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் அனைவரும் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து ஆடிப்பாடி மகிழ்ந்த பின்னர், இந்நிகழ்வுகள் முடிந்த 10வது நாளில் "பில் ஆச் பாய்ம்' என அவர்களால் அழைக்கப்படும் கில்லி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையே அவர்களது புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களில் முக்கிய நிகழ்வாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வுகளையொட்டி கோத்தர் இனத்தாரின் கிராமங்களிலுள்ள குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை தங்களது பாரம்பரிய உடையணிந்து குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் பாரம்பரிய இசையை இசைத்து ஆடிப்பாடி மகிழ்வர். பின்னர் கில்லி ஆட்டம் ஆடுகின்றனர். தமிழகத்தின் தொன்மையான விளையாட்டாகக் கருதப்படும் கில்லி விளையாட்டு தற்போது காணாமல் போய்விட்ட நிலையில் இவர்கள் மட்டும் தங்களது பாரம்பரிய விளையாட்டை தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

இவ்விழாவையொட்டி கோத்தர் இன பழங்குடியினர் தங்களது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் சாமை அரிசியை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தேன் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவு மற்றும் பணியாரம் உள்ளிட்டவற்றை பிறருக்கும் பரிசாக தந்து மகிழ்விப்பர். இதுவே இவர்களது பாரம்பரிய புத்தாண்டு விழாவாக கருதப்படுகிறது.

அதேபோல நீலகிரியின் பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தாரும் தங்களது புத்தாண்டு

கொண்டாட்டங்களை வித்தியாசமாகவே கொண்டாடுகின்றனர். இவர்களது புத்தாண்டை குறித்த உறுதியான தகவல்கள் ஏதுமில்லையென்றாலும் ஆருத்ரா தரிசனத்தையே தங்களது புத்தாண்டின் தொடக்கமாக கருதுகின்றனர். இதையொட்டி தங்களது பாரம்பரிய தேரை ஊர்வலமாக கொண்டு வருவதுடன் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.

இதைப்போலவே ஒவ்வொரு பழங்குடியினத்தாரும் தங்களது பாரம்பரிய ஆண்டு திருவிழாக்களை முன்வைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துகின்றனர்.

அதனால், புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது உலகில் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு விதமான சூழலையொட்டி அமைந்துள்ள நிலையில் மலை மாவட்டமான நீலகிரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல்வேறு தரப்பினராலும் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருவது வித்தியாசமானதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT