இசைக்கு மருத்துவ குணம் உண்டு!
மியூசிக் தெரபி பற்றி மியூசிக் அகடமி உட்பட இப்போது பல மேடைகளில் பல ஆய்வுச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன.
மியூசிக் தெரபி பற்றி மியூசிக் அகடமி உட்பட இப்போது பல மேடைகளில் பல ஆய்வுச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. என்ன ராகம் பாடினால் என்ன நோய் குணமாகும் என்றெல்லாம் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்பட்டதை எடுத்துச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையைப் பாடக் கேட்டு, வேண்டிய பலன் அடைந்ததாக யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. சென்ற வாரம், சரசுவதி வாக்கேயகார அறக்கட்டளை ஆதரவில் டாக்டர் ஆர். ஆஷா, முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகள் பற்றி "தீபனம்' என்ற தலைப்பில் பேசும்போது, இரண்டு நிகழ்ச்சிகளை நினவுகூர்ந்தார்.
""நான் சங்கீதம் கற்றுக் கொண்ட கர்நாடக இசைப் பாடகி சீதா நாராயணனிடம் ஒரு பெண்மணியும் வந்து கற்றுக் கொண்டிருந்தார். ஒரு நாள் சீதா நாராயணன், "பிருஹஸ்பதே' என்ற அடாணா ராகக் கீர்த்தனையைச் சொல்லிக் கொடுக்கக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. அவர் எதற்காக அழுகிறார் என்று தெரியவில்லை. பாடல் முடிந்ததும் அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். பின்னர் சில நாள் கழித்து அவர் வந்த போதும், அந்தப் பாடலைக் கேட்டு அவர் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. ஆறு மாதங்கள் போல ஆயிற்று. அவர் மீண்டும் தரிசனத்துக்காக வந்தபோது அவர் கையில் ஓர் அழகான குழந்தை இருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை எண்ணி அவர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். அந்தக் கீர்த்தனையில் "புத்ரகாரக தீன பந்தோ' என்று சரணத்தில் ஒரு வரி வருகிறது. (புத்திர பாக்கியத்தை அளிப்பவர்) அந்தப் பாடலைப் பாடியபடி வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது.
இன்னொரு பெண்மணிக்கும் இதே போலப் பிள்ளையில்லாக் குறை. அவர் "ஹரிஹரி புத்ரம் ஸாஸ்தாரம் சதா பஜேஹம்' என்ற பாடலை என் குரு வீணைக் கலைஞர் கல்பகம் சுவாமிநாதன் வாசித்துப் பாடக் கேட்டார். அதில் அநுபல்லவியில் வருகிற "தீன ஜன பலப் ப்ரதம்' (எளியவர்களின் விருப்பங்களை அருளுபவர்) என்ற வரி வருகிறது. அவருக்கும் அந்தப் பாடலால் குழந்தை பாக்கியம் கிடைத்தது'' என்றார்.
அது மட்டுமல்ல, "கமலாம்பிகாயாம் பக்திம் கரோமி' என்ற சஹானா ராகப் பாடலும் "சங்கரம் அபிராமி மனோகரம்' என்ற மனோகரி ராகப் பாடலும் நோய்களைத் தீர்க்குமாம். குறிப்பாக "சங்கரம் அபிராமி' என்ற பாடல் காலசம்ஹார மூர்த்தியாகிய திருக்கடையூர் ஈசனைப் பற்றி அமைந்திருப்பதால், ""இந்தப் பாடலைப் பாடுபவர்களுக்கு மரண பயமும் போகும்'' என்றார் ஆஷா.
இந்த சந்தர்ப்பத்தில் முத்துசாமி தீட்சிதரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்:
முத்துசாமி தீட்சிதரின் சீடன் தம்பியப்பன் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு புரோகிதரை அணுகித் தனக்குப் பரிகாரம் செய்ய வேண்டினான். அவர், ""உனக்கு குரு, சனி முதலிய கிரகங்கள் பலகீனமாக இருக்கின்றன. நீ வேதம் அறியாததால் வேத சம்பந்தமான பரிகாரமும் செய்ய இயலாது'' என்று அவர் மறுத்துவிட்டார். தம்பியப்பன் தன் குரு முத்துசாமி தீட்சிதரிடம் சென்றான். அவர் சீடனுக்கு தாயம் அளித்து, சனி, குரு ஆகிய கிரகங்களின் மீது பாடல்கள் இயற்றி, அவற்றைத் தினமும் பாடச் சொல்லி வருமாறு கூறினார் முத்துசாமி தீட்சிதர். அதன்படியே அவன் பாடிவர, அவன் வயிற்று வலி தீர்ந்தது.
""இசை எல்லாருக்கும் பொது. எந்த வேத சாரங்கள் அடங்கிய கீர்த்தனையானாலும் அதைப் பாடிப் பயன் பெறலாம்'' என்று தீட்சிதர் கூறினார். தம்பியப்பன் தன்னிடம் நோய் குணமாக வந்தவர்களிடம் நவகிரக கீர்த்தனைகளைப் பாடி அவற்றைத் தீர்த்து வைத்தான் என்பது திருவாரூரில் எல்லோரும் அறிந்த சரித்திரம்.
ஆர்.ஆஷா உரையில் இன்னும் சில அபூர்வமான தகவல்கள் இருந்தன. ஆனால் அவை மிகுந்த ஆராய்ச்சி செய்து தரப்பட்ட வேறு சில செய்திகள்.
இசை மூலம் நோய் குணமாகும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். கைக்கெட்டாமல் தள்ளிப் போகும் உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது தெரியுமா? காயக சிகாமணி என்றும், முதன்முதலில் இசையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்றும் அறியப்பட்ட ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சகோதரர் வழிப் பேத்தியும், எர்ணாகுளம் மகாராஜா இசைக்கல்லூரிப் பேராசிரியையும் ஆன ஜெயலட்சுமி ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை இங்கே மீண்டும் நினைத்துப் பார்க்கத் தூண்டியது. (தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 9.9.2007).
ஜெயலட்சுமி தன் உரையில் அன்று சொன்னார்: ""திருவனந்தபுரம் இசைக் கல்லூயில் ஓர் ஆசிரியைக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிடைக்கவில்லை. என் தகப்பனார் 13 வயதிலிருந்தே அம்பாளைப் பூஜை செய்துகொண்டு வருபவர். அவள், ""சார் என்ன காரணமோ தெரியவில்லை. எனக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை'' என்று சொல்லி வருத்தப்பட்டாள். என் தங்கை மீது சில சமயம் சாமுண்டீசுவரி வருவாள். அன்றைக்கு அவள் அந்த ஆசிரியையைப் பார்த்து, சுபபந்துவராளியில் முத்தையா பாகவதர் இயற்றிய "மனோன்மணி மந்தஹாசினி மஞ்சுபாஷிணி' என்ற கீர்த்தனையை 11 நாட்களுக்குப் பாடச் சொன்னாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மனோன்மணி பாடலைப் பாட ஆரம்பித்த ஏழு நாட்களிலேயே அந்த ஆசிரியைக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது''.
இசைக்கு நோய் தீர்க்கும் குணம் மட்டுமல்ல, கை நழுவிப் போகும் பதவி உயர்வுகளும் கூடக் கிடைக்கும் என்பதும் ஒரு செய்தி.