நகைச்சுவைக்கு ஒரு நடனம்!
சென்னைக்கு வந்த புதிதில் வேலைக்காக ஒரு முறை கலைமகள் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே "கண்ணன்' ஆசிரியர் ஆர்வியிடம் என்னை அழைத்துப் போனார்கள்.
சென்னைக்கு வந்த புதிதில் வேலைக்காக ஒரு முறை கலைமகள் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே "கண்ணன்' ஆசிரியர் ஆர்வியிடம் என்னை அழைத்துப் போனார்கள். அவர் ஒரு படம் போடச் சொன்னார். காகிதத்தை எடுத்துக் கொண்டு, கறுப்பு இங்க் புட்டியைத் திறந்து படம் போட பிரஷ்ஷை எடுத்து ஒரு சித்திரம் வரைந்தேன். என்னை அறியாமல் கைபட்டு மொத்த இங்க் பாட்டிலும் காகிதத்தின் மீது கொட்டி படம் பாழ். ஆர்வி சிரித்துக்கொண்டே, ""பரவாயில்லை. நல்ல சகுனம்தான். இன்னொரு படம் போட்டுடு'' என்றார். போட்டுக் கொடுத்தேன். என்னுடைய பத்திரிகை ஓவிய வாழ்க்கை இப்படித்தான் கொட்டி முழங்கி ஆரம்பமாகியது'' என்று தமக்குப் பாராட்டு விழா நடந்த போது சொன்னார் ஓவியர் நடனம். இயற்பெயர் : நடராஜன்.
ம்யூரல்கள் எனப்படும் புடைப்போவியங்கள் வரைவதில் நடனம் சமர்த்தர். எல்லோரும் பத்திரிகைகளில் மட்டுமே வரைந்து கொண்டிருந்த போது, நடனம் ம்யூரல்களில் சிறப்பான புகழ் பெற்று விளங்கினார்.
அவருடைய ம்யூரல்கள் பல எஞ்சினீயரிங் கல்லூரிகளிலும், ஹோட்டல்களிலும், விமான நிலயத்திலும் நிறையவே இடம் பெற்றிருக்கின்றன. வந்தவாசி அருகே ஹரிதாஸ் கிரி சுவாமிகள் நிறுவிய பாண்டுரங்கன் கோயிலில் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் பைபர் கிளாஸ் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். எல்லாமே கிருஷ்ண லீலைகள். இப்படி பைபர் கிளாûஸப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலிலும் இவர் உருவாக்கியிருக்கும் ம்யூரல்கள் அற்புதமானவை.
நடனம் வாழ்க்கையை ரசிப்பவர். வெகு இயல்பான நகைச்சுவை அவரிடமிருந்து வெளிப்படும். அவரை கௌரவித்த ஒரு விழாவில் அவர் சொன்னது அவர் தன்னம்பிக்கையைக் காட்டியது:
""சகோதரியின் திருமணச் செலவுக்காக மூன்று ஓவியங்கள் ஸ்பெஷலாக வரைந்து எடுத்துக் கொண்டு ஒரு செல்வந்தரிடம் போனேன். கொண்டு வரச் சொன்னவருக்கு மூட் அவுட் ஆகிவிட்டதோ என்னவோ, ஓவியங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். ஆனால் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு பிரபல தொழிலதிபர், ""நான் இவற்றை எடுத்துக் கொள்கிறேன். சாயந்திரம் வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போங்கள்'' என்றார். அதே மாதிரி நான் மாலை அவர் வீட்டுக்குப் போனதும், அவர் பணத்தை எடுத்துக் கொடுத்தார். எனக்கு ஒரே மகிழ்ச்சி''
நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு நடனத்தின் ஓவியங்கள் உறுதுணையாக இருந்தன. எழுதுகிறவர், தம் எழுத்தில் பாதி நகைச்சுவையைக் கொண்டு வந்தால் போதும். மீதி நடனத்தின் படம் வாசகரைப் படிக்க வைத்துவிடும்.
ஜோக்குகள் ஆகட்டும், நகைச்சுவைக் கட்டுரைகள் ஆகட்டும், நகைச் சுவைக் கதைகள் ஆகட்டும், நடனத்தின் சித்திரங்கள் இருந்துவிட்டால் போதும். சீரியஸ் கதைகளை விட்டுவிட்டு, அவர் படம் போட்ட கதை-கட்டுரைகளைப் படிக்க அவை நம்மை நிச்சயம் தூண்டிவிடும்.
தேவன் நூல்கள், சோ எழுதிய புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் நடனம் வரைந்த அட்டைச் சித்திரங்கள் கவர்ச்சிகரமானவை. ஜே.எஸ். ராகவனின் வாராந்தரக் கட்டுரைகளுக்குத் தொடர்ந்து ஓவியம் வரைந்து அழகு சேர்த்திருக்கிறார்.
தீபாவளி மலர்களில் அவர் கைவண்ணம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
""மலர் ûஸஸ் பெரிசா இருக்கிறதால, படங்களையும் பெரிசா வரையலாம். நம்ம திறமையைக் காட்டலாம்'' என்பார் நடனம். ஏதோ ம்யூரல்கள், பத்திரிகைச் சித்திரங்களோடு நடனத்தின் திறமை அடங்கிவிடவில்லை. காஞ்சிப்பெரியவர் பற்றிய "கடவுளோடு வாழ்ந்த காலம்' என்ற நூலுக்கு அவர் வரைந்த ஓவியம், காஞ்சி முனிவரை நேரில் பார்ப்பது போல் அத்தனை தத்ரூபமாக இருந்தது. அசல் ஓவியத்தை அழகான சட்டமிட்டு, நூலை வெளியிட்ட நல்லி செட்டியாருக்குப் பரிசாக வழங்க வேண்டினார்.
சமீபத்தில் "டெவலப்பர்ஸ் இந்தியா' என்ற மனித நேய அமைப்பின் தலைவர் ஹர்பஜன் சிங், தமிழக ஆளுநர் ரோசய்யா தலைமையில், நடனம் "வைப்ரன்ட் இன்டியன்' என்று கௌரவிக்கப்பட்டார்.
சுஜாதா "முதல்வன்' படத்துக்குக் கதை வசனம் எழுதிய போது, அர்ஜுனின் தந்தையாக நடிக்க நடனத்தை சிபாரிசு செய்தார். நடனமும் அதில் நடித்தார். ஓவியரான தந்தையாக!
நடனம் சர்க்கரை நோயாளி. தினசரி நிறைய மருந்துகள், இன்சுலின் ஊசி, உடல் உபாதை என்று பல தொந்தரவுகள். ஆனாலும் எப்போதும் சிரித்த முகத்துடன், ஜோக் அடித்துக் கொண்டு வாழ்க்கையை ரசித்தவர்.
இத்தனை திறமைகள் ஒரு சேர அமைந்த ஓர் ஓவியரை இனி எப்போது காண்போம்?
""கரிச்சான் குஞ்சு சென்னைக்கு அழைத்து வந்தார்!''
சென்னை வாழ் பஞ்சாப் மாநில மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து "டெவலப்பர்ஸ் இந்தியா' என்று ஓர் அமைப்பினை நிறுவி ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் ஒரு பிரமுகரை கெளரவிக்கின்றனர். இந்து ஆசிரியர் என்.ரவி, தொழிலதிபர் நா.மகாலிங்கம், பின்னணிப்பாடகி வாணி ஜெயராம், பத்திரிகையாளர் குல்திப் நய்யார், ஆவணப்படங்களை உருவாக்கும் கிருஷ்ணசுவாமி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி என்று இதற்கு முன்னர் கெளரவம் பெற்ற பெருமக்களின் வரிசையில் ஓவியர் நடனமும் இடம் பெற்றுவிட்டார். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் ஓவியக்கலையில் புகழ் பெற்று விளங்குபவர் என்ற முறையில் Vibrant Indian என்ற விருதினை தமிழக ஆளுநரிடம் பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது ஓவியர் நடனத்துடன் ஒரு சிறு சந்திப்பு:
உங்களின் தொடக்கம்?
ஐந்து வயதில் விளையாட்டாக ஓவியம் வரைய ஆரம்பித்த என்னை பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சென்னைக்கு அழைத்து வந்து அவரது நண்பரான எழுத்தாளர் தி.ஜானகிராமனின் இல்லத்தில் தங்க வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தது இப்படித்தான். ""சிறகு முளைத்து பறக்கும் வரையில் இங்கேயே தங்கிக்கோ'' என்று சாப்பாடும் போட்டு அடைக்கலம் கொடுத்த தி.ஜானகிராமனைத் தினமும் நினைத்துக் கொள்கிறேன். ஓவியர் சாகரிடம் பயிற்சி. பிறகு கல்கி இதழில் துணுக்குகளுக்கான படங்கள். ஆர்.வி தந்த முதல் வாய்ப்பு கலைமகள் குழுமத்திலிருந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்த "கண்ணன்' இதழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன.
மியூரல்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் புடைப்போவியங்கள் உருவாக்க ஆரம்பித்தது எப்போது?
கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில்தான் எனக்கு முதலில் "மியூரல்கள்' எனப்படும் புடைப்போவியங்களை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மரம், உலோகம், செராமிக், ஃபைபர் கிளாஸ் என இப்படி பலவிதப் பொருள்களையும் கலந்து உருவாக்கப்படும் மிகப்பெரிய ஓவியங்களை மியூரல்கள் என்றழைக்கிறார்கள். ஏர் இந்தியா, லார்சன் டூப்ரோ, பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களின் வரவேற்பரையை எனது மியூரல்கள் அலங்கரிக்கின்றன. சென்னை தி.நகரில் ராஜ் பேலஸ், ஓட்டல் சவேரா போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட எனது பெரிய அளவு மியூரல்களைப் பார்த்து வெளி நாட்டு இந்தியர் ஒருவர் தனது அமெரிக்க உணவகத்தின் சுவரை ஓவியங்கள் கொண்டு அலங்கரிக்கச் செய்தார். தவிர தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கர் ருக்மாயி ஆலயம், திருப்பதியில் இஸ்கான் ஆலயம், கும்பகோணத்திற்கருகில் உள்ள கோவிந்தபுரத்தில் உள்ள ஆலயம் ஆகிய இடங்களிலும் ஆன்மீகம் சார்ந்த புடைப்போவியங்களை அமைக்கும் பணி எனக்குக் கிடைத்தது.
பெற்ற பரிசுகள்?
தேவன் அறக்கட்டளையினர் அளித்த கெளரவம், எழுத்தாள ஆர்.வி. அறக்கட்டளையினர் அளித்த பணமுடிப்பு, சாவி அவர்கள் நடத்திய ஞானபாரதி டிரஸ்டின் கெளரவம், அப்புசாமி சீதாப்பாட்டி அறக்கட்டளையினர் நடத்திய விழாவில் எனது குருநாதர் கோபுலுவின் கரங்களினால் கிடைத்த பாராட்டு பத்திரம் என இப்படி பல விருதுகள் கிடைத்துள்ளன. ஒரு பிரபல வார இதழ் குழுமத்தினர் மகாராஷ்டிராவில் வீசிய தானே புயல் நிவாரணத்துக்காக எல்லா ஓவியர்களையும் படங்கள் வரைய வைத்து கண் காட்சி நடத்தினார்கள். அதில் நான் வரைந்த ஓவியம்தான் முதலில் விற்பனையாயிற்று. அதனை வாங்கியவர்: பிரபல நடிகர் சசிகுமார். அதில் கிடைத்த ஒரு லட்சரூபாய் புயல் நிவாரண உதவிக்குத் தரப்பட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சமீபத்தில் கிடைத்த விருது
சமீபத்தில் "வைப்ரண்ட் இந்தியா' என்ற விருதுக்கு என்னையும் சேர்த்து கெளரவித்தபோது பெருமிதமாக இருந்தது. இந்த கெளரவத்தினை தமிழக ஆளுநரிடம் இருந்து பெற்ற போது நான் இன்றிருக்கும் நிலைக்குக் காரணமாக இருக்கும் அனைத்து பெருமக்களையும் மனதுக்குள் நினைத்து நன்றி சொன்னேன்.
க்ளிக் ரவி