எனக்கு வயது 46. கடந்த ஆறு வருடங்களாக முழங்கால் மூட்டில் ஊசியால் குத்துவது போன்ற வலியும், எரிச்சலும், வீக்கமும் ஏற்பட்டு மிகவும் அவதிப்படுகிறேன். முழங்கால் மூட்டை நீட்டி மடக்க முடியவில்லை. நடந்தால் மூட்டு தானாகவே மடங்கி விழுவது போல நடை தள்ளாடுகிறது. கறுப்பும், சிவப்புமாக வட்ட வட்ட தடிப்புகள் மூட்டுப் பகுதிகளில் ஏற்படுகின்றன. இந்த உபாதை நீங்குவதற்கான ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா?
விசாலாட்சி, பெங்களூரு.
ஆயுர்வேத புத்தகமாகிய ஸூச்ருத ஸம்ஹிதையில் இரத்தம் மனித உடலில் கெட்டுப் போவதற்கான காரணங்களைக் குறிப்பிடுகையில் எளிதில் செரிக்காத சூடான வீரியம் கொண்ட உணவுகளைச் சாப்பிடுவதும், முன் உண்ட உணவு செரிக்காத நிலையில் அடுத்த உணவை உட்கொள்வது போன்றவற்றை முக்கியமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த கெட்டுப் போன இரத்தமானது பல காரணங்களால் சீற்றமுற்ற வாயுவினுடைய வழிப்பாதையை அடைப்பதால் அவ்விரண்டும் சேர்ந்து வாத ரத்தம் எனும் உபாதையைத் தோற்றுவிக்கிறது. கை அல்லது கால்களில் தொடங்கும் இந்த உபாதை உடல் முழுவதும் உள்ள மூட்டுகளில் வேகமாகப் பரவக் கூடியது. முழங்கால் மூட்டில் முக்கியமாகத் தாக்கக் கூடிய இந்த உபாதையில் நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகள் அதிகமாகத் தென்படும். பொதுவாக இந்த வாத ரத்தம் எனும் உபாதையானது மிருதுவான உடல்தன்மை கொண்டவர்களுக்கும், தவறான உணவின் சேர்க்கை மற்றும் வாயு, இரத்தம் ஆகியவற்றைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், உடல் பருமன் உடையவர்களுக்கும், சுகமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கும் எளிதில் தாக்கும் என்று மேலும் ஒரு குறிப்பு காணப்படுகிறது.
கால் கட்டைவிரல் மற்றும் அதற்கடுத்த விரல் நடுப்பகுதியில் க்ஷிப்ரம் என்ற ஒரு மர்ம ஸ்தானம் இருக்கிறது. அதிலிருந்து இரண்டு அங்குலம் மேல் பகுதியில் அதாவது காலினுடைய மேற்புறத்தில் செல்லக் கூடிய காரி இரத்தக் குழாயைக் கீறி, அங்கிருந்து சிறிது சிறிதாக இரத்தத்தை வெளியேற்றக்கூடிய ஒரு சிகிச்சையை நம் முன்னோர் கையாண்டு கெட்டுப் போன இரத்தத்தை வெளியேற்றினர். குடல் சுத்திமுறைகளாகிய வாந்தி மற்றும் பேதி சிகிச்சைகளை அதன் பிறகு செய்து மிகவும் பழமையான நெய்யை குடிக்கச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதியில் தசமூலம் எனும் பத்து மூலிகை வேர்களை பாலுடன் காய்ச்சி தெளித்துவிடுவதும் ஒரு சிகிச்சைமுறையாகக் கையாண்டனர். பார்லி, அதிமதுரம், ஆமணக்குவேர், எள்ளு, மூக்கரட்டைவேர் ஆகியவற்றை விழுதாக அரைத்து மூட்டுகளில் பற்றுப் போடுவதும் ஒரு சிறந்த சிகிச்சைமுறையே. அதுபோலவே பார்லி, கோதுமை, எள்ளு, பச்சைப்பயறு மற்றும் கறுப்பு உளுந்து ஆகியவற்றை விழுதாக அரைத்து மூட்டின் மீது பற்றிட ஒரு வலிநிவாரணியாகச் செயல்படும்.
மூலிகை எண்ணெய்களைக் கொண்டு செய்யப்படும் எண்ணெய் எனிமா மற்றும் கஷாய எனிமாக்கள் எட்டு நாட்கள் செய்யப்பட்டு, அன்றைய தினம் நெய்ப்பான உணவை உண்டு ஒன்பதாவது நாளன்று பழைய நெய்யைப் பருகச் செய்வதன் மூலமாகவும் இந்த உபாதைகள் குறைய வாய்ப்புள்ளது. சீந்திற்கொடி, திரிபலை போன்ற மருந்துகளால் கஷாயம் உள்ளுக்குச் சாப்பிடுவதினால் இரத்தத்தில் ஏற்படும் காந்தல் நன்கு குறைந்து மூட்டுகளில் ஏற்படும் சூட்டினை நன்றாகக் குறைக்கும். வீக்கத்தையும் நன்றாக வடித்துவிடும். நூறுமுறை தண்ணீரில் கழுவி எடுக்கப்பட்ட சததெளதக்ருதம் எனும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தை முட்டியில் தடவித் தேய்த்துவிடுவதினால் வீக்கம், எரிச்சல், விரைப்புத்தன்மை, அங்கு ஏற்பட்டுள்ள செம்மை மற்றும் கருமையான நிற மாற்றம் ஆகியவை மட்டுப்படும்.
மூட்டுகளைத் தாக்கக் கூடிய வாத இரத்த உபாதைக்குக் கடுக்காய்த் தூளை வெல்லத்துடன் கலந்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. வர்த்தமான பிப்பலி எனும் ஒரு சிகிச்சைமுறை இந்த உபாதையின்போது, நன்கு பயன்படும். ஐந்து திப்பிலிகளை பாலுடன் அரைத்து முதல் நாள் சாப்பிடுவர். தினந்தோறும் ஐந்தைந்து திப்பிலிகளைச் சேர்த்து அதிகப்படுத்திக் கொண்டே வந்து பத்து நாட்கள் சாப்பிடுவதும், அதன் பிறகு இதே அளவில் குறைத்துக் கொண்டு வருவதும் இந்த இருபது நாட்களும் புழுங்கலரிசி சாதத்துடன் பால் கலந்து சாப்பிடும் இந்த பிரயோகமானது வாத ரத்தம் எனும் நீங்கள் குறிப்பிடும் உபாதை, விட்டு விட்டு வரும் முறைக்காய்ச்சல், ருசியின்மை, சோகை உபாதை, மண்ணீரல் வீக்கம், மூலம், மூச்சிரைப்பு, உடல்வீக்கம், காசநோய், பசியின்மை, இதய உபாதை மற்றும் மஹோதரம் ஆகிய நோய்களையும் குணப்படுத்தக்கூடியது. ஆயுர்வேதமருந்தாகிய பிண்டதைலம் ஒரு சிறந்த வலிநிவாரணி. வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.