மறுபடியுமா?
நாங்கள் சென்னை தி.நகர் பகுதியில் குடியிருந்தோம். அங்கு எல்லா ஊர் காய்கறிகளும் அநேகமாகக் கிடைத்துவிடும்.
நாங்கள் சென்னை தி.நகர் பகுதியில் குடியிருந்தோம். அங்கு எல்லா ஊர் காய்கறிகளும் அநேகமாகக் கிடைத்துவிடும்.
கேரளா பலாமுசு, பெங்களூரு குடமிளகாய், தக்காளி, ஆந்திரா பஜ்ஜி மிளகாய் என எல்லாமே கிடைக்கும். தி.நகர்வாசிகள் ரொம்பக் கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள்.
தஞ்சாவூர் குடமிளகாய் ஒரு வருடம் அத்தி பூத்ததுபோல் வந்தது. அதற்கப்புறம் ஏனோ தெரியவில்லை, இரண்டு, மூன்று வருடங்களாக வரவே இல்லை!
என் மனைவிக்கு தஞ்சாவூர் குடமிளகாய் மீது மசக்கை வந்துவிட்டது.
""உங்கள் நண்பர்தான் தஞ்சாவூரில் இருக்கிறாரே, அவரிடம் சொல்லி கொஞ்சம் குடமிளகாயை வருபவர்களிடம் அனுப்பச் சொல்லுங்களேன்'' என்றாள்.
நான் நண்பனிடம் பேசினேன். சொல்வதற்குக் கூச்சமாகவும், தயக்கமாகவும் இருந்தது.
அவனோ, ""இதென்னடா பெரிய விஷயம். கூடிய சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன்'' என்றான்.
என் மனைவிக்கு அவ்வளவு சந்தோஷம்!
ஐந்தாறு நாள்கள் கழித்து என்னிடம் நண்பன் பேசினான்.
""சென்னை வரும் நண்பரிடம் குடமிளகாய் கொடுத்தனுப்புகிறேன். நீ மாம்பலம் ஸ்டேஷனில் பெற்றுக் கொள்'' என்று கூறியதோடு அவருடைய பெயர், அடையாளம், ரயில் வண்டியின் பெயர், எண், அவர் பயணிக்கும் கோச் எண், மாம்பலம் ஸ்டேஷனுக்கு வரும் நேரம் என்று எல்லா விவரங்களையும் கூறினான். என்னை மாம்பலம் ஸ்டேஷனுக்குச் செல்லும்போது நண்பன் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள பைஜாமா, ஜிப்பா போட்டுக் கொண்டுவரச் சொன்னான்.
செய்தியைக் கேட்டதிலிருந்து மனைவி மிகவும் பரபரப்பாகி விட்டாள். மாம்பலம் ஸ்டேஷனுக்கு ரயில் காலை 6.40க்கு வரும் என்றால் என்னை ஐந்து மணிக்கே எழுப்பி, காபியைக் கொடுத்து வழியனுப்பிவிட்டாள்.
நான் மெதுவாக சைக்கிளை மிதித்து ஸ்டேஷனை அடைந்தபோது மணி ஆறுகூட ஆகவில்லை.
மூணாம் நம்பர் கோச் எங்கு நிற்கும் என்பதை விசாரித்துக் கொண்டு காத்திருந்தேன்.
குடமிளகாய் பற்றி யோசித்ததும் நினைவு பள்ளிக்கூட நாள்களுக்குச் சென்றது.
நான் இன்றைய நாகை மாவட்டம் கீழ்வேளூரில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்த வருடம் தஞ்சாவூருக்கு கல்விச் சுற்றுலா அழைத்துப் போனார்கள். இரண்டு நாள். தஞ்சாவூர் பெரிய கோயிலையும், அரண்மனையையும் முதன்முதலாக அப்பொழுதுதான் பார்த்தேன்.
நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்தது சித்தப்பா வீட்டில். தஞ்சாவூரிலிருந்து திரும்பி வரும்போது குடமிளகாய் வாங்கி வரச் சொல்லி பெரிய துணிப் பையையும், பணத்தையும் தந்திருந்தார்கள்.
என் வகுப்பு சாரிடம் குடமிளகாய் வாங்க வேண்டியது பற்றிக் கூறினேன். ""கவலைப்படாதே, நாம எல்லோருமே வாங்கிக் கொள்ளப் போகிறோம்'' என்றார்.
கிளம்புவதற்கு முன்பு தஞ்சாவூர் குடமிளகாய் விற்பவன் ஒருவனை மடக்கி, விலை பேசி ஆளாளுக்கு இரண்டு வீசை மிளகாய் வாங்கிக் கொண்டோம். பையின் வாயை வாழை நார் கொண்டு கட்டிக் கொடுத்தான். அப்படியும் நெடி பரவி தும்மலை வரவழைத்தது. நான் மட்டுமல்ல, சாரும் தும்மினார். அடுத்தடுத்து நிறையப் பேர்கள் தும்மினார்கள். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் குடமிளகாய் அனுபவம். இப்போது இது இரண்டாவது அனுபவம்.
நான் நிற்கும் இடத்திற்கு அருகில் கோச் வந்து நிற்க வேண்டும் என்று எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டேன். தள்ளி நின்றுவிட்டால் ஓடிச்சென்று அதை எட்டுவதற்குள் வண்டி புறப்பட்டு விட்டால் மிளகாயைக் கொண்டு வந்தவருக்கும் சிரமம். எனக்கும் ஏமாற்றம். நான் வெறும் கையோடு போய் மனைவியை எப்படிச் சமாளிப்பது? மனம் "நமநம'வென்று சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தது!
ஒருவழியாக வண்டி ஸ்டேஷனுள் நுழைந்தது. எனக்கு பி.பி. நிச்சயம் அதிகரித்திருக்கும். அப்படியொரு டென்ஷன்!
மூணாம் எண் கோச் என் எதிரிலேயே வந்து நின்றது. இரண்டு நபர்கள் இறங்கியபின் மூன்றாவது நபர் பெரிய பெட்டியைக் கஷ்டப்பட்டு இறக்கிக் கொண்டிருந்தார். வண்டியினுள் அவர் பின்னால் ஒருவர் அவஸ்தையுறும் முகத்தோடு நின்றிருந்தார்!
""சார் சீக்கிரம்... நான் மூட்டையைக் கீழே இறக்கிவிட்டு மீண்டும் வண்டியில் ஏறிக்கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளுங்கள்'' என்று சற்று கடுமையாகப் பேசியது என் காதுகளில் இலேசாக விழுந்தது.
பெட்டி நடைமேடையில் இறங்கியது. அடுத்து அவஸ்தையுற்ற என் நண்பரின் நண்பர் அவசரம் அவசரமாக ஒரு பெரிய சாக்கு மூட்டையைக் கீழே தள்ளிவிட்டு விட்டு, ""சார், எடுத்துக் கொள்ளுங்கள்... வண்டி புறப்படுகிறது... நண்பருக்குத் தகவல் தந்து விடுங்கள்'' என்று வண்டியின் உள்ளே இருந்துகொண்டே பேசினார். வண்டி புறப்பட்டுவிட்டது.
நான், ""நன்றி'' சொன்னதுகூட அவர் காதில் விழுந்திருக்காது. வண்டி வேகமெடுத்து விட்டது.
சாக்கு மூட்டையை மெதுவாக ஓரம் நகர்த்தினேன். நிச்சயம் பத்துக் கிலோவுக்குக் குறையாது. மிளகாயின் நெடி பயங்கரமாக வீசியது.
"இதை எப்படி வெளியே தூக்கிச் செல்வது, சைக்கிளின் காரியரில் ஏற்றி வைத்தால் நிற்குமா? சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியுமா இல்லை தள்ளிக்கொண்டுதான் போக வேண்டுமா...? இத்தனையையும் மோர் மிளகாய் போட வேண்டுமானால் எவ்வளவு தயிர் வேண்டும். அவ்வளவையும் ஊற வைக்க ஜாடிகளுக்கு எங்கே போவது...?' கவலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன.
நான் மிளகாய் மூட்டையை நகர்த்தும்போது அங்கு வந்த ரயில்வே அதிகாரி ஒருவர், "என்ன சார் மூட்டை?'' என்றார்.
பகீரென்றது!
"என்ன சொல்வது? சொல்வதை எப்படியெடுத்துக் கொள்வார்?' என்று யோசித்தேன்.
நான் பதில் சொல்லாமல் நிற்பதைப் பார்த்து அவர், ""சார், உங்களைத்தான் கேட்கிறேன்... மூட்டையில் என்ன?'' என்றார். வார்த்தைகள் கொஞ்சம் தடித்து வந்தன.
""தஞ்சாவூர் குடமிளகாய்''
அருகில் வந்த அவர் தும்ம ஆரம்பித்து விட்டார்.
""ஓகே... ஓகே... எடை போட்டு ரசீது வாங்கிக்கொண்டு டிராவல் செய்யுங்கள். இல்லாவிட்டால் வழியில் அல்லது இறங்கும்போது பிடித்தால் அபராதமும் சேர்த்து வாங்கி விடுவார்கள்''.
மீண்டும் பகீரென்றது!
அவர் நகர்ந்துவிட்டார்.
போர்ட்டர் ஒருவன் வந்தான். உயிர் வந்தது.
""மூட்டையை சைக்கிள் ஸ்டாண்ட் வரை எடுத்து வரவேண்டும். எவ்வளவு கேட்கிறாய்?'' என்றேன்.
என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ""மூட்டையில் என்னா கீது, சார்?'' என்றான்.
""குடமிளகாய்''
""எங்கேந்து வருது, சார்''
""தஞ்சாவூரிலிருந்து''
""டிக்கெட் பத்திரமா வெச்சிருக்கியா... இன்னிக்கு இஸ்குவார்டு சுத்துது... உஷாரா இருக்கணும்''
என்னிடம் இருப்பது பிளாட்பார்ம் டிக்கெட்டுதான்.
என்ன சோதனை?
அவனிடம் மெல்லிய குரலில் அதைச் சொன்னேன்.
""என்னா சார்... வில்லங்கமான பார்ட்டியாகீறியே... சரி சமாளிச்சு இஸ்துகிணுபோய் வெளியே தள்ளிடறேன்.... துட்டை மட்டும் பிசிறாம வெட்டிடு, நைனா''
என் விதி. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேன்.
அவன் தலையில் மூட்டையைத் தூக்கி வைத்தேன்.
எனக்குத் தும்மல் வந்தது. அவனும் தும்மினான்.
""என்ன பேஜாருப்பா...''
எப்படியோ அவன் சைக்கிள் ஸ்டாண்டு வரை வந்து விட்டான்.
""போய் சைக்கிளை தள்ளிகினு வருவியா. சும்மாகாட்டியும் நிக்கறே...'' என்பதற்குள் இரண்டு மூன்று தடவைகள் தும்மி விட்டான்.
""என்ன மொளகாயோ... என்ன கசமாலமோ... ரொம்பப் பேஜார் படுத்துது''
சைக்கிள் காரியரில் மூட்டையை வைத்து அங்கங்கே இருந்த துண்டுக் கயிறுகளைப் பொறுக்கி வந்து நன்றாகக் கட்டினான். வேலையில் கெட்டி.
""சரி, துட்டை வெட்டு சார்''
நான் கொடுத்த தொகை அவனுக்குப் போதவில்லை போலும்!
""இன்னா சார், ஒனக்குக் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா...? எவ்வளவு ரிஸ்க்கு எடுத்து காரியத்தைக் கச்சிதமா முடிச்சிருக்கேன்.. பேஜாரு படுத்துறியே நைனா''
நான் நொந்துகொண்டு அவன் கேட்ட தொகையைத் தந்துவிட்டு நகர்ந்தேன்.
சைக்கிளில் ஏறி உட்கார்ந்து ஓட்ட முடியவில்லை. தள்ளிக் கொண்டே போய்விடலாம் எனத் தீர்மானித்தேன். வழியில் பஞ்சர் வேறு. பஞ்சர் ஒட்டிக்கொண்டு வீட்டை அடையும்போது மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது.
மனைவிக்கு அவ்வளவு பெரிய மூட்டையில் குடமிளகாயைப் பார்த்ததும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது!
""உங்க நண்பருக்கு பெரிய மனசு''
""ஆமாம்... ஆமாம்... ரொம்ப ரொம்ப பெரிய மனசு... நான் பட்ட அவஸ்தை கொஞ்சமா நஞ்சமா?'' என்று முணுமுணுத்துக் கொண்டே மின்விசிறியைச் சுழலவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.
தும்மல் அடுக்குத் தும்மலாக வந்தது.
""ஒண்ணு ஃபேனை ஆஃப் பண்ணுங்கள்... இல்லே மிளகாய் மூட்டையை ஸ்டோர் ரூமில் தள்ளி வையுங்க... ஃபேன் காத்துக்கு நெடி கிளம்பும்... தும்மல் வரும்'' மனைவி சமையலறையிலிருந்து கத்தினாள்.
மூட்டையை ஸ்டோர் ரூமில் வைத்து கதவையும் மூடிவிட்டேன்.
மனைவி சுடச்சுட காபி தந்தாள். குடித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தேன். டென்ஷன் ஓரளவு இறங்கியது.
சற்றுநேரம் கழித்து மனைவி அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். நான் நண்பனைத் தொடர்புகொண்டு நன்றி கூறினேன்.
""நீ கேட்ட தஞ்சாவூர் குடமிளகாய் ஒரு மூட்டை வந்துவிட்டது. என்ன செய்யப் போவதாக உத்தேசம்?''
""மோர் மிளகாயாகப் போட வேண்டியதுதான். அதை வேறென்ன செய்ய முடியும்?''
""அதற்கு இல்லே... அத்தனை குடமிளகாய்க்கும் தயிர் உப்புப் போட்டு ஊற வைக்க எத்தனை பீங்கான் ஜாடிகள் தேவைப்படும் என்பதை யோசிச்சியா?''
அவள் என்னைப் பார்த்து பெரிதாகச் சிரித்தாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
""இத்தனையையும் மோர்மிளகாய் போட்டு நாமென்ன வியாபாரமா செய்யப் போகிறோம்?''
""அப்ப எப்படி?''
""நமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு விட்டு மீதியை என் தங்கைக்கு அதான் உங்க மச்சினிக்கு, உங்க தங்கைக்கு, அப்புறம் இந்த ஃப்ளாட்ல இருக்கிற என் சிநேகிதி மாலதிக்கு என்று ஆளுக்குக் கொஞ்சமா கொடுத்துட்டாப் போறது... நாம போய் பெரிய பெரிய பீங்கான் ஜாடிகளை எதுக்கு வாங்கணும்?''
அதைக் கேட்டதும் எனக்கு முழு டென்ஷனுமே போய்விட்ட மாதிரி இருந்தது. எவ்வளவு சுலபமாக தீர்வு கண்டுவிட்டாள்?
ஆனால் அடுத்த நொடியே மிளகாயைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் தந்துவிட்டு வரவேண்டியதை நினைத்து நொந்து போனேன்!
மனைவி தரையில் குடமிளகாயைப் பரப்பி அதிலிருந்த பழுத்திருந்த, அழுகிப் போயிருந்த ஒருசில மிளகாய்களை அப்புறப்படுத்தினாள். மிளகாய் செடியின் காம்பு, இலைகள் என்று கிடந்தவற்றையும் பொறுக்கி எடுத்தாள்.
தனக்கு வேண்டியதை முதலில் எடுத்து வைத்துவிட்டு மீதியிருந்த குடமிளகாயை மூன்று துணிப் பைகளில் குடும்பத்திற்குத் தகுந்த மாதிரி கூடுதலாகவும், குறைவாகவும் எடுத்து வைத்தாள். ஒரு மூட்டை குடமிளகாயும் பாகப்பிரிவினையாகி விட்டது.
ஓய்வுக்காக சற்று படுத்து உறங்குவேன். அன்று அதில் மண் விழுந்தது. பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு குடமிளகாய்ப் பைகளோடு கிளம்பினேன். ஒரு பையை தண்டையார்பேட்டையில் சேர்க்க வேண்டும். இன்னொன்றை அம்பத்தூரில் சேர்க்க வேண்டும். என் இடத்திலிருந்து இரண்டுமே வெகுதூரம்தான்.
"நீட்டி முழக்கிக் கொண்டு போய் வெறும் நெடியும், காரமும் கொண்ட தஞ்சாவூர் குடமிளகாயை அவர்களிடம் நீட்டினால் நன்றாக இருக்குமா?' - மனம் யோசித்தது.
பூ, பழம், ஸ்வீட் இரண்டு செட் வாங்கிக் கொண்டேன். முதலில் தண்டையார்பேட்டை போனேன். தங்கையின் வீடு அங்குதான்.
அடுத்து அம்பத்தூர். மனைவியின் தங்கை வசிக்குமிடம். ஒவ்வொருவர் வீட்டிலும் தஞ்சாவூரிலிருந்து குடமிளகாய் வந்தது பற்றிக் கூறினேன். பிறகு பூ, பழம், ஸ்வீட்டைக் கொடுத்துவிட்டு கடைசியில் குடமிளகாய் பையைக் கீழே வைத்து எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.
வீடு திரும்பும்போது இரவு பத்து மணியாகி விட்டது. நல்ல காலம். மாடியில் உள்ள மாலதிக்கு மனைவி தருவதாகக் கூறிவிட்டாள்.
""என்ன இரண்டு வீட்டிற்கும் கொடுத்து விட்டீர்களா? என்ன சொன்னார்கள்?''
""கொடுத்துவிட்டேன். உன் தங்கைக்கு அப்படியொரு சந்தோஷம்''
""ஏன் உங்க தங்கைக்கு மட்டும் சந்தோஷமில்லையா?''
""அவளுக்கு கொள்ளை சந்தோஷம்''
""அதுதானே பார்த்தேன்''
""குடமிளகாயை மட்டும் தந்தால் நன்றாக இருக்காதென்று பூ, பழம், ஸ்வீட் வாங்கி அதோடு சேர்த்துக் கொடுத்தேன்''
""ரொம்ப விவரம்''
""சும்மா வந்த குடமிளகாய்க்கு ஏக அலைச்சல், செலவு, ஒருநாள் பொழுது அம்பேல்''
""நமக்குக் கிடைத்திருக்கிற சந்தோஷமும், திருப்தியும்தான் முக்கியம்''
""அது சரி''
""மாடி வீட்டு மாலதிக்கு அப்படியொரு ஆனந்தம். நான் ஃபோன் செய்த அடுத்த நிமிஷம் கீழே வந்துட்டா. மாமாவுக்கு மோர் மிளகாய் என்றால் அவ்வளவு இஷ்டமாம். ஒரு சாக்லெட்டோடு மிளகாய் பையை அவளிடம் கொடுத்துவிட்டேன். அவள் என்னிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து, "காரம், புளி, உப்பு, கசப்பு இதெல்லாம் சும்மா வாங்கிக் கொண்டு போகக் கூடாது. அதுக்காகத்தான் இது' என்று சொன்னாள். வேடிக்கையாக இருந்தது. பாட்டியிடமிருந்து அவள் நிறைய தெரிந்து கொண்டிருக்கிறாள்''
கெட்டி மோரிலும், உப்பிலும் ஊறி, வெயிலில் காய்ந்துவிட்ட மோர்மிளகாயை ஒரு மாதம் கழித்து எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள போட்டாள் மனைவி. அவ்வளவு நன்றாக இருந்தது. ஆனாலும் குடமிளகாயின் அனுபவம் எப்பொழுது நினைவிற்கு வந்தாலும் நான் பட்ட பாட்டை நினைத்து நொந்து போவேன்!
கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது. குடமிளகாய் அனுபவம் ஓரளவு மறந்துவிட்டது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. நானும் அவளும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மாடி வீட்டு மாலதி வந்தாள்.
""நீங்க கொடுத்த குடமிளகாயில் போட்ட மோர் மிளகாய் நேத்தியோடு தீர்ந்து போச்சு... உங்க கிட்ட இருந்தால் கொஞ்சம் தாருங்கள்... இன்று மதியம் மோர்க்களி செய்யப் போகிறேன். அதற்கு மோர் மிளகாய் தாளித்தால்தான் சுவையா இருக்கும்'' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பினாள்.
""உங்க தஞ்சாவூர் நண்பர் இந்த வருஷமும் குடமிளகாய் அனுப்புவார் இல்லையா...? என்னை மறந்துவிட வேண்டாம்... இந்த முறை எனக்கு நிறைய வேண்டும்... பணம் தந்து வாங்கிக்கிறேன்... இந்த ஊர்லதான் காசு கொடுத்தாலும் கிடைக்கவில்லையே'' என்றாள்.
நான் அவளுடைய பேச்சைக் கேட்டு உடைந்து போனேன்.
""மறுபடியுமா?''