தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குங்கிலியத்தின் மருத்துவ குணங்கள்!

குங்கிலியம் எனும் மருந்து மூட்டுவலிக்கு நல்லது என்று என் தாயார் கூற கேட்டிருக்கிறேன். அது உண்மையா? மூட்டுவலியால் அவதிப்படும் எனக்கு அது எவ்வாறு பயன்படும்? அதற்கு வேறு ஏதேனும் மருத்துவப் பயன்கள் உள்ளனவா?

த.ரங்கசாமி

குங்கிலியம் எனும் மருந்து மூட்டுவலிக்கு நல்லது என்று என் தாயார் கூற கேட்டிருக்கிறேன். அது உண்மையா? மூட்டுவலியால் அவதிப்படும் எனக்கு அது எவ்வாறு பயன்படும்? அதற்கு வேறு ஏதேனும் மருத்துவப் பயன்கள் உள்ளனவா?

குங்கிலியம் பற்றி தங்கள் தாயார் கூறியது சரியே. அதனுடைய தாவரவியல் விளக்கம். Shorea robusta  என்பது அதனுடைய Latin பெயர். வடஇந்தியாவின் இமயமலை அடிவாரத்திலுள்ள காடுகளிலும், தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்திலுள்ள காடுகளிலும் விளையக் கூடிய கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம் என அழைக்கப்படுகிறது. நாட்டு மருந்துக்கடைகளில் காய்ந்த நிலையில் குங்கிலியம் கிடைக்கிறது. குக்கில், குக்கிலியம் என்ற மாற்றுப் பெயர்களும் குங்கிலியத்திற்கு உண்டு.

குங்கிலியம் கசப்பான சுவையை உடையது. சூடான வீரியம் கொண்டது. உள்ளுக்குச் சாப்பிட்டால் உடலில் சூட்டை அதிகப்படுத்தும். மார்பு மற்றும் மூச்சுக் குழாய்ப் பகுதிகளிலுள்ள கோழையை நீர்க்கச் செய்துவிடும். சிறுநீர் தடங்கல் உள்ளவர்களுக்கு குங்கிலியத்தைச் சாப்பிட்டால் சிறுநீரைப் பெருக்கும். எலும்பு உபாதைகள், கீல்வாதம், விஷக்கடி, நகச் சுற்று, சீழ்ப் புண் போன்ற உபாதைகளைக் குணமாக்கும். குங்கிலிய தைலம், பற்பம், குங்கிலிய வெண்ணெய் போன்றவை தயாரிக்கப்பட்டு ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்கின்றனர். அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தி குணம் பெறலாம். சர்க்கரை உபாதையில் ஏற்படக் கூடிய புண், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் குங்கிலியம் நன்றாகப் பயன்படும்.

அரை லிட்டர் நல்லெண்ணெய்யில் 50 கிராம் குங்கிலியத்தைப் பொடித்துக் கலந்து நன்றாகக் காய்ச்சி வெதுவெதுப்பாக மூட்டுகளில் பூசி வர, மூட்டுவலி நன்றாகக் குறையும். மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சையைக் கூட சில காலங்களுக்கு தள்ளிப் போடலாம். அதனுடைய வேறு சில மருத்துவகுணங்கள் :

10 கிராம் குங்கிலியத்தை பசு நெய்விட்டுப் பொரித்து அதில் சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் குழைத்து காலை, மாலை உணவிற்கு முன் உள்ளுக்குச் சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். சுமார் 3 மாதங்கள் வரை இதைப் பயன்படுத்தலாம்.

300 மில்லி லிட்டர் சூடான பாலில் குங்கிலியத்தை 2 அல்லது 3 கிராம் தூள் செய்து கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க இரத்தமூலம் நன்கு கட்டுப்படும். வறட்டு இருமல் நன்கு குணமாகும்.

சில குழந்தைகளுக்கு திடீரென்று ஏற்படும் சீதபேதி குணமாக சிறிதளவு சர்க்கரையுடன் ஒரு கிராம் குங்கிலியப் பொடி கலந்து உள்ளுக்குக் கொடுக்க பேதி குணமாகும்.

350 மில்லி லிட்டர் நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, மெழுகு மற்றும் குங்கிலியம் வகைக்கு 100 கிராம் சேர்த்து, சிறு தீயில் அது உருகும்வரை கிளறி, எண்ணெய் சூடாக இருக்கும்போதே வடிகட்டி வெள்ளைத் துணியில் தடவி உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள் மீது வைத்துக்கட்ட புண்கள் விரைவில் ஆறும். இதற்கு குங்கிலியக் களிம்பு என்று பெயர்.

மூன்று வகையான குங்கிலிய வகைகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெள்ளைக் குங்கிலியம், சிவப்புக் குங்கிலியம் மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என்று பெயர். மூன்று வகை இருந்தாலும் மருத்துவ குணங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவைதான். தனித்தனியான சிறப்பான மருத்துவ குணங்களும் அவற்றிற்கு இருக்கின்றன. அதில் வெள்ளை குங்கிலியம் நிறம் குன்றி இருக்கும். மூட்டுவலிக்கு சிறப்பான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பெண்களுக்கு மாதவிலக்கைச் சீராக்கும். உள்மூலத்தால் கஷ்டப்படும் நபர்களுக்கு நல்லதொரு நிவாரணத்தை அது ஏற்படுத்தித் தரும். சிவப்பு குங்கிலியம் பழுப்பு, வெள்ளை, பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கக் கூடியது. 300 மில்லி லிட்டர் சூடான பாலில் இந்த குங்கிலியத்தைப் பொடித்து 2 கிராம் கலந்து காலையில் மட்டும் குடித்து வர கட்டிகள், காயங்கள் போன்றவை குணமாகும். பூச்சி மற்றும் பிற பிராணிகளால் ஏற்படும் விஷக்கடியை மாற்ற இது சிறப்பான மருந்தாகப் பயன்படும். பூனைக்கண் குங்கிலியம் தங்கநிறம் போன்றும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். உருண்டையான வடிவத்தை உடையவை. பார்ப்பதற்கு பூனையின் கண் போன்று இருக்கும். உடல் வீக்கத்தைக் கரைக்க இதிலிருந்து தைலம் தயாரிக்கப்படுகிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தலைமை காவலரை தாக்கியவா் கைது

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT