ஈரோட்டில் ஜெய்சத்தியம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார் சண்முககாந்தி. ஈரோட்டுக் காந்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவரது வயது 80. ஆனால் இன்றும் 16 வயது இளைஞரைப் போல அவரது செயல்பாடுகள் உள்ளன. வலது கையில் நீண்ட கைத்தடி, இடது கையில் மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், பாதி உடலைப் போர்த்திய நிலையில் வெள்ளைத்துண்டு, வெள்ளை நிற கதர் வேட்டி, மூக்குக் கண்ணாடி ஆகியன அணிந்திருந்த அவர் மகாத்மா காந்தியே நேரில் வருவதைப் போல நடந்து வந்தார்.
கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாளன்று ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த அந்த காந்தித் தாத்தாவை சந்தித்து பேசினோம்:
""எனக்கு 9 வயது இருக்கும் தம்பி, நான் 3 வது படித்துக் கொண்டிந்தபோது மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்துக்கு மக்களைச் சேர்த்து ஒன்று திரட்ட தமிழகம் வந்த போது அவரை நேரில் பார்த்தேன். அந்தச் சின்ன வயதிலிருந்தே அவரைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மீது பிரியப்பட்டு அவரது லட்சியங்களையும், கொள்கைகளையும் மனதில் சுமந்து வந்தேன். ஆனால் அப்போது அவரது கொள்கைகளை என்னால் முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் முழுமையான காந்தியவாதியாகவே மாறி, காந்திய வாழ்க்கை முறையையே இப்போது பின்பற்றி வருகிறேன். மதுவால் பல குடும்பங்கள் சீரழிவதை உணர்ந்து தற்போது மது ஒழிப்புப் பிரச்சாரத்தை முக்கியப் பிரச்னையாக கையில் எடுத்துள்ளேன்.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, குடும்பத்தை கெடுக்கும் குடியை விட்டு விடுங்கள் என நான் போகும் இடங்களில் எல்லாம் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களைச் சந்தித்து, ""சாதாரண மனிதராக இருந்த கலாம் குடியரசுத்தலைவர் பதவி வரை உயர அவரது எண்ணங்களே காரணம். எனவே குழந்தைகளே நீங்களும் உங்கள் எண்ணங்களை உயர்வானதாக, வலிமையானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' எனக் கூறி வருகிறேன்.
நான் மகாத்மா காந்தி போல இருப்பதால் குழந்தைகளும் எனது பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். அவர்கள் மனதில் நான் கூறும் கருத்துக்கள் ஆழமாகவும் பதிகின்றன'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.