ஊர் கண்
"அப்பாடா' என கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தான் கோபி. ஷிப்ட் முடிந்து விட்டது. பண்டிகை நாள். அதனால் ரெகுலர் புத்தகத்துடன் இலவசமாய் இன்னொரு புத்தகம் இந்த வாரம்.
தினமணி கதிர்ஊர் கண்
"அப்பாடா' என கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தான் கோபி. ஷிப்ட் முடிந்து விட்டது. பண்டிகை நாள். அதனால் ரெகுலர் புத்தகத்துடன் இலவசமாய் இன்னொரு புத்தகம் இந்த வாரம்.
"அப்பாடா' என கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தான் கோபி. ஷிப்ட் முடிந்து விட்டது. பண்டிகை நாள். அதனால் ரெகுலர் புத்தகத்துடன் இலவசமாய் இன்னொரு புத்தகம் இந்த வாரம். வேலை அதிகம்தான் இன்னும் இரண்டு மணி நேரம் தான் தூங்க முடியும். மறுபடியும் வேலையை ஆரம்பிக்க வேண்டும். ஒரு நீண்ட பெருமூச்சுடன் கீழே கிடந்த பெரிய பெரிய தாள்களை ஒன்றாய் தரையில் இணைத்துப் போட்டு கை,கால்களை சோம்பல் முறித்து ஹாயாய் படுத்தவனுக்கு வீட்டின் ஞாபகம் வந்தது. உடம்பு வலியை விட மனது அதிகமாக வலித்தது.
"ஊர் சொல்லட்டும் தன்னை கஞ்சன் என்று, ஆனால் கட்டிய மனைவி அப்படி சொல்லலாமா?'
பொண்டாட்டி குழந்தைகளுக்கு வாங்கித் தர மனசில்லாமலா பணத்தைச் சிக்கனமாய் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறான்? இன்னிக்கு பணத்தை அள்ளி விட்டால் நாளை என்ன மிஞ்சும்? ஊர் கண்ணு மகா பொல்லாத கண்ணுன்னு சொன்னா இந்த பொம்பளைக்கு எங்கே புரியுது? இப்படி அப்படின்னு கொஞ்சம் வசதியாய் இருக்கோம்னு தெரிஞ்சா போதும். அக்கம் பக்கம் கடன் அது இதுன்னு தலையை சொறிஞ்சுக்கிட்டு வந்திடமாட்டாங்க... அதுக்கு மேலே இந்த சொந்தக்காரங்க குடும்பத்தோட வந்து டேரா போட்டுட மாட்டாங்க....
கல்யாணம் ஆன இந்த ஒன்பது வருடமாய், கஞ்சன் கஞ்சன் என எந்நேரமும் முணுமுணுத்துக் கொண்டிருந்தவள்தான், ஆனா முந்தா நாள் ஒரு திருடனால், ஒரு திருட்டால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. எல்லா வீட்டிலேயும் திருட்டு போனா பிரச்னை என்றால், இங்கு திருட்டு போகவில்லை என்று பிரச்னை. "நல்ல பொண்டாட்டிடா சாமி' என தலையில் பட்டென அடித்துக் கொண்டான் கோபி.
ஏழு வீடுகள் கொண்ட காம்பவுண்டு வீடு அவர்களுடையது, ரகசியம் ரகசியம் என ஒன்றும் அங்கே கிடையாது, முந்தா நாள் நைட் ஷிப்ட் முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தவன், திடீரென "என் பேண்டைக் காணோம், என் ஷர்ட்டைக் காணோம்' என்ற பரபரப்புப் பேச்சுக் குரலால் கலைந்து எழுந்தான். மாடியில் காயப் போட்டிருந்த துணிகளை எவனோ சுருட்டிக் கொண்டது தெரிய வந்தது.
"அடடா, நம்ம வீட்டு துணிங்க கூட மாடியில தானே காயப் போட்டிருக்கோம்' என பதறி எழுந்தவன், ""உமா, உமா..'' என உள்ளே வந்தான். அங்கே மூலையில் அழுதுகொண்டிருக்கும் உமாவைப் பார்த்து, ஆறுதலாய், ""போகட்டும் உமா துணிதானே காணாமப் போச்சு, அதுக்கு ஏன் இப்படி அழற? போகட்டும் விடு'' என்றான்.
அழுகையை விடாத உமா தன்னை முறைத்துக் கொண்டு மேலும் சத்தமாய் அழுவதைப் பார்த்து, ""போகட்டும் உமா...எல்லாம் கொஞ்சம் பழசாய்ப் போனது தானே...'' என்றான்.
""போனது துணியில்லங்க நம்ம மானம்''
குழப்பத்துடன், ""என்ன உமா சொல்ற?'' என்றான் கோபி.
""ம்... வந்த திருடன், எதிர் வீட்டுக்காரர் பேன்ட், பக்கத்து வீட்டுக்காரர் சர்ட், ஏன் கோடி வீட்டுக்காரர் பனியனைக் கூட எடுத்துட்டுப் போயிருக்கான். ஆனா நம்ம வீட்டு துணிங்க மட்டும் போட்டது போட்ட படியே இருக்கு, எல்லாரும் என்னங்க உங்க வீட்டு துணி பத்திரமாய் இருக்கா... பத்திரமாய் இருக்கா... என நமுட்டுச் சிரிப்புடன் கேக்குறாங்க.. மானம் போறது... ஆமாம் கொஞ்சம் பழசாய்த்தான் போயிடிச்சு'' என்றான் கோபி தயக்கத்துடன்.
""ஆமாம் திருடன் கூட திரும்பிப் பார்க்காத அளவுக்கு இருக்கு உங்க ட்ரெஸ், பிச்சைக்காரனிடம் குடுங்க, முகத்திலே திருப்பி அடிப்பான்'' என்றாள் உமா.
""என்னடி வாய் ரொம்ப நீளுது? ஒரு துணிகூட இல்லாமலேயா உன்னை நிக்க வைச்சிருக்கேன்?''
""இல்லீங்க பீரோவே ரொம்பி வழியுது. வைக்கத்தான் இடமில்லை'' - உமா.
""எதுக்கு ரொம்பி வழியணும்? வீட்டுல இருக்கிற பொம்பளைக்கு கட்டிக்க நாலு புடவை போதாதா? என்ன... ஏன் எங்கிட்ட மட்டும் என்ன இருக்கு? ஏழோ, எட்டோ... அவ்வளவுதான். கிழிசலும் கந்தலுமாவா உன்னை நிக்க வெச்சிருக்கேன்? என்ன கொஞ்சம் சாயம் போயிருக்கு.. ஓரமெல்லாம் லைட்டா சுருங்கி இருக்கு அவ்வளவுதானே?"" - கோபி.
""எதுக்குங்க இப்படி பிச்சைக்காரத்தனம் பண்றீங்க? கட்டிக்க, ஆசையா நல்லதா துணிமணிங்க கூட இல்லாம?''
""இதப்பாரு ரொம்பப் பேசின, பல்ல பேத்துருவேன்... ஆமாம்...எவ்வளவு தரம்டி சொல்லுவேன்? ஊர் கண்ணு படற மாதிரி இருக்கக் கூடாதுன்னு. வயித்தெரிச்சல் காரனுங்க'' என்றான்.
தினமும் பாடும் பல்லவிதான் என்ற அலுப்புடன், மெüனமாய் தலைக்குனிந்து உட்கார்ந்திருந்தாள் உமா. ஆனால் முகம் மட்டும் அவமானத்தால் சிறுத்துப் போயிருந்தது.
அன்று முழுவதும் மெüனத்தாலேயே கரைந்தது. மறுநாள் காலை இவன் ஆபீஸ் கிளம்பும்பொழுது, தானும் பிள்ளைகளுடன் கிளம்பியவள், சுவரைப் பார்த்துக் கொண்டே, ""நான் எங்க அம்மா வீட்டுக்குப் போய் நாலு நாள் இருந்துட்டு வரேன்'' என்றாள்.
"" சரி... நான் ஆபீஸ் போற வழிதானே? வா சைக்கிளிலே கொண்டு விடுகிறேன்'' என்றான் கோபி.
""ம்...'' என்று ஏற இறங்க இளக்காரமாய் அவனைப் பார்த்தவள், சைக்கிளைத் பார்த்தாள். சைக்கிள் என்பதற்கு ஆதாரமாய் இரண்டு சக்கரங்கள் மட்டும் ஒழுங்காக இருந்தது. அது இல்லாவிட்டால் ஓடாதே, அதில் பெல்லும் ப்ரேக்கும் இருந்ததாய் அவளுக்கு ஞாபகமே இல்லை, சீட்டு கிழிந்து போய் கம்பி நீட்டிக் கொண்டிருக்கும். கேரியரில் புடவை கிழியாமல் உட்கார உமாவுக்கு மட்டுமே தெரியும். ஸ்டாண்டு ஒரு பக்கமாய் உடைந்து சுவரில் சாய்த்து தான் வைக்க வேண்டும்.
ஒன்றும் பேசாத உமா இரு கைகளிலும் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு மெüனமாய் நடக்க ஆரம்பித்தாள். கோபமாய் நடக்கும் மனைவியின் பின்னாலேயே சைக்கிளை உருட்டிக் கொண்டே அவளை சமாதானப்படுத்திக் கொண்டே வந்தான்.
"ஏதுடா, புருஷன் கூடவே கெஞ்சிக்கிட்டு வரானே' என்ற உணர்வே இல்லாமல், உமா தன் அம்மா வீடு வந்ததும் திரும்பிக்கூடப் பார்க்காமல் உள்ளே சென்றாள். திரும்பிப் பார்த்து "டா... டா' சொன்ன மகனை பொட்டேன தலையில் அடித்து உள்ளே இழுத்துச் சென்றாள்.
கோபிக்கு தலையை வலித்தது. சரி, எழுந்து போய் ஒரு டீ குடித்து விட்டு வரலாம், இன்னிக்கு தூக்கம் அவ்வளவுதான் என்ற எண்ணத்துடன் வெளியே வந்தவனுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, தன் சைக்கிளை தன் நண்பன் கிருஷ்ணன் வாங்கிக் கொண்டு போனது.
"சரி நடந்துதான் போய் வரலாமே' என்ற தீர்மானத்துடன் இரவின் அமைதியான காற்றை அனுபவித்து நடந்தான். நடந்து சென்றவன் சட்டென நின்றான். தூரத்தில் சுவரில் சாய்த்து நிற்க வைத்திருப்பது தன் சைக்கிள் தானே? சந்தேகமே இல்லை. அவனுடையதுதான். இதைக் காலையிலே எடுத்துக்கிட்டுப் போன கிருஷ்ணன் எங்கே? ஷிப்டுக்கு அவன் வரும் நேரம் தான். எங்கேயாவது அவன் இருக்கானா? சுற்று முற்றும் பார்த்தான். அவன் இல்லை. ஒரு வித ஆச்சரியத்துடன் சைக்கிளை எடுத்துக்கொண்டான். பூட்டும் சாவியும் தான் அதற்குக் கிடையாதே?
டீ கூடக் குடிக்காமல் சைக்கிளை மிதித்துக் கொண்டு ஆபீஸ் திரும்பியவன், அங்கே கிருஷ்ணனைப் பார்த்தவன் ஏதும் கேட்காமல் தயக்கத்துடன் நின்றான்.
கோபியைக் கண்ட கிருஷ்ணன் உற்சாகமாய், கையசைத்தான், .
"" என்ன கோபி இந்த சைக்கிளை நீ எப்படி ஓட்ற? ஒரு மிதிதான் மிதிச்சேன். ம்கூம் முடியாதுன்னு, திரும்பி உங்கிட்டேயே கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தா, நீ நாயர் கடைல போன் பேசிக்கிட்டு இருந்தே......சரின்னு உங்கிட்டே சொல்லிட்டு பஸ்ûஸ பிடித்து வீட்டுக்கு போயிட்டேன்''
இவன் எப்ப எங்கிட்ட சொன்னான்? கேட்ட கோபிக்கு மிக அவமானமாக இருந்தது. அவ்வளவு பிஸி ரோடில் தன் சைக்கிள் கேட்பாரின்றி காலையிலிருந்து இரவு வரை இருந்திருக்கிறது என்றால்... தன் மனைவியின் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. மெல்ல கிருஷ்ணனிடம் அவன் புதிதாய் வாங்கியிருக்கும் ஹீரோ ஹோண்டாவைப் பற்றி விசாரிக்கலானான். "நாளைக்கே நல்ல காற்றோட்டமான வீடாகப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
சிக்கனமாக இருப்பது வேறே... கஞ்சத்தனமாக இருப்பது வேறேன்னு எனக்கு இவ்வளவு நாளாத் தெரியாமப் போச்சேன்னு நெற்றியில் அடித்துக் கொண்டான்.