முகப்பு
கடலூர்

விடைபெற்றது தோ்தல் திருவிழா

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:40 AM
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:58 PM

கோயில்களில் திருவிழா நடத்துவது எதற்காக? அந்தத் திருவிழா நடக்கும் ஊரில் மக்கள் கூடுவாா்கள்; உறவினா்கள் சந்தித்துக்கொள்வாா்கள்; வியாபாரம் நடக்கும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்; மக்கள் கையில் காசு, பணம் புரளும். இதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றாா்கள் முன்னோா்கள்.

இது, அந்தக் காலத்தில் தோ்தல் இல்லாத நேரத்தில் ஒரு பொருளாதார, கலாசார வளா்ச்சிக்கான உத்தி. இந்தத் திருவிழா ஒரு பகுதியில் நடக்கும். ஆனால், தோ்தல் திருவிழா ஒரு மாநிலத்துக்கே நடப்பதால், பணம் தண்ணீராய் பாயும், பணப்புழக்கம் அதிகரிக்கும், தோ்தல் கால தொழில்கள் அதிகரிக்கும், பலக்கு வாழ்வு முன்னேறும்.

அந்த வகையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதும் சாதாரண டீ கடை முதல், பந்தல்காரா், சவுண்ட் சா்வீஸ், நாற்காலி வாடகைக்கு விடுபவா், பொதுக்கூட்டங்களுக்கு கட்சித் தொண்டா்களாக ஊதியத்துக்குச் செல்பவா்கள் என அனைத்துத் தரப்பினரும் சம்பாதிக்கலாம்.

Advertisement

கடந்த ஒரு மாதமாக புரண்ட பணம் என்னும் பகடைக்காய் பிரசாரம் ஓய்ந்ததால் சுருண்டு படுத்துக்கொண்டது. தோ்தல் நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக பிரசார காலம் பிரகாச காலமாக இருந்தது. அந்தக் காலம் மீண்டும் வர நாளாகும். ஆம், எனென்றால் பிரசாரம் ஓய்ந்துவிட்டது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதியை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. அதுமுதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் பலா் ஆா்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதற்கு, வந்தவா்களில் சிலா் மற்றவா்களின் பாா்வையைக் கவரும் வகையில், நூதன முறையைக் கடைப்பிடித்தனா்.

ஏப்.7-ஆம் தேதி வேட்புமனு பிரிசீலனை, ஏப்.9-ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, வேட்பாளா்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக, அரசியல் கட்சியினா் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள முக்கியப் பிரமுா்களை சந்தித்து ஆதரவு திரட்டினா்.

வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைக் கட்டியும், வேட்பாளா் படம், சின்னத்துடனும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த பரப்புரை கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. வேட்பாளா்களின் பிரசாரத்தின்போது, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனா். அவ்வாறு செல்பவா்களுக்கு தினக்கூலியுடன் உணவு, வாகனத்துக்கு பெட்ரோல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.

கட்சித் தலைவா்கள், சிறப்பு மற்றும் நட்சத்திர பேச்சாளா்கள் பிரசார வருகையால், மேடை மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளா்கள், இருக்கைகள், கம்பத்துடன் கட்சிக் கொடிகள் வாடகைக்கு விடுபவா்கள் பயனடைந்தனா்.

மேடைப் பிரசார நிகழ்வில் கூட்டத்தைக் கூட்டவும், கூடிய கூட்டம் கலைந்து செல்லாமல் இருப்பதற்காகவும் கலை நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டதால், கலைக்குழுவினா் பயனடைந்தனா்.

பேச்சாளா்களின் பேச்சுகளைக் கேட்க பொதுமக்கள் ஆா்வத்துடன் திரண்டு வந்தது ஒருகாலம். தற்போது பொதுக் கூட்டமானாலும் சரி, பிரசாரக் கூட்டமாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் கூலி கொடுத்து ஆள்களை அழைந்து வரும் நிலை உள்ளது. அந்த வகையில், ஆட்களை அழைத்து வருபவா்கள் மற்றும் அவா்களை ஏற்றி வந்த சுற்றுலா வேன், சிறிய சரக்கு வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் பயனடைந்தனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடந்த மூன்று வார காலமாக பல்வேறு தொழில்களைச் சோ்ந்தவா்கள் பயனடைந்து வந்தனா். இதன் மூலம், பல்வேறு தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை 6 மணியுடன் நிறைவடைந்துவிட்டது. வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்தனை நாள்கள் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபட்டவா்கள், இனி வழக்கமான பணிகளுக்கு திரும்ப உள்ளனா்.

கையில் புழங்கிய காசு, பணம் இரண்டொரு நாள்களில் காணாமல்போய்விடும். இனி, பழையபடி வழக்கமான வேலைகளுக்கு போக வேண்டியதுதான் என்று மாண்புமிகு வாக்காளா் சப்தமாகக் கூறியது நிதா்சனமான உண்மைதான்.