முகப்பு
நேர்காணல்கள்

விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்

திருவெறும்பூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:40 AM
அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:14 AM

திருவெறும்பூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 10 ஆண்டுகளில் தொகுதிக்கு தான் செய்த சாதனைகளை ஒவ்வொரு பகுதி வாரியாக பட்டியலிட்டு மக்களிடம் வழங்கி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

வழக்கமாக எழும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை தமிழக மக்களிடம் தற்போதைய 2026 பேரவைத் தேர்தலில் காணப்படுகிறதா?

கோடை காரணமாக தமிழகத்தில் காணப்படும் வெப்ப அலையைக் கடந்து, ஸ்டாலின் அலையே தமிழகம் முழுவதும் வீசுகிறது. வீதியில் செல்வோர், வீட்டில் உள்ளோர் என யாராக இருந்தாலும் அவர்களில் ஒருவர், முதல்வர் ஸ்டாலின் அளித்த திட்டத்தால் பயன்பெற்றவர்களாகவே உள்ளனர். எனவே, ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை என்பது வெறும் பிரமை.

Advertisement

திமுக கூட்டணி வேட்பாளர்கள் வீடுதோறும் செல்கையில் அதிருப்தி காணப்படுகிறதா?

மக்களே திமுக கூட்டணி வேட்பாளர்களை முன்னிலைப்படுத்துகின்றனர். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆரத்தி எடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். தன்னெழுச்சியாக திரண்டு வந்து ஆதரவு அளிக்கின்றனர். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் திமுக மீது தமிழக மக்களிடையே உணர்வுப் பூர்வமான எழுச்சி காணப்படுவதை களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. மூன்று முறை தேர்தல் களத்தைப் பார்த்த அனுபவத்தில் இதைக் கூறுகிறேன்.

திமுக கூட்டணியின் பலம் என்று எதையெல்லாம் கருதுகிறீர்கள்?

கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தபோது, எதையும் செய்ய முடியாது. சாத்தியக் கூறுகளே இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என அனைத்தையும் சாத்தியமாக்கினோம். சொன்னால், செய்வார்கள் என்ற நம்பிக்கையைவிட, சொல்லாததையும் செய்திருப்பதை மக்களே பட்டியலிட்டு எங்களிடம் நினைவு கூருகின்றனர்.

திருவெறும்பூர் பேரவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

திருவெறும்பூர் எனது தாய் வீடு என்றாகிவிட்டது. நம்ம பிள்ளை, நம்ம மகேசு நிற்பதாக வீடுதோறும் அழைத்து மகிழ்கின்றனர்.தொகுதி மக்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழக முதல்வர் சென்னைக்கு அடுத்தபடியாக, திட்டங்களை திறக்க திருவெறும்பூருக்கு அதிக முறை வந்துள்ளார். அரசு மாதிரிப் பள்ளி திறப்பு, பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டம் தொடக்கம், முதியோருக்கான அன்புச் சோலை திட்டம் ஆகியவற்றை திருவெறும்பூருக்கு நேரில் வந்து தொடங்கியுள்ளார். மேலும், 5 ஆண்டுகளில் ரூ.450 கோடிக்கும் மேலான திட்டங்கள் திருவெறும்பூருக்கு கிடைத்துள்ளன. எனவே, மூன்றாவது முறையும் வெற்றி பெறுவது உறுதி.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:37 AM

தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் உள்ளோம் என பாஜக தலைமை கூறிய பிறகும், இந்தத் தேர்தல் தில்லி அணிக்கும், தமிழக அணிக்குமானது என கூறி வருவது ஏன்?

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்பதே பாஜக-வின் முகம்தான். மேலும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜல்ஜீவன் திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பேரிடர் நிவாரண நிதியும் கேட்டது கிடைக்கவில்லை. 100 நாள் வேலை திட்ட நாள்களையும் குறைத்து, வேலையே வழங்குவதில்லை. இப்போது, திட்டத்தையே உருக்குலைத்துவிட்டனர். தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரான செயல்பாடுகளையே மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவதாலேயே தில்லி அணியா?, தமிழக அணியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தோல்வியுறச் செய்து நாடாளுமன்றத்திலேயே தில்லி அணியை வீழ்த்தியுள்ளோம். அடுத்து, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் வீழ்த்துவோம்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றனவே?

விஜய் வெற்றி பெற முடியாது. நிச்சயம் திருச்சி கிழக்கில் திமுகவே வெற்றி பெறும். டெல்டாவில் அனைத்து தொகுதிகளையும் இழந்தாலும் திருச்சியை தக்க வைத்துக் கொண்டோம் என்ற வரலாறு திமுகவுக்கு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - 10 முதல் 15 விழுக்காடு வாக்கு வங்கியை பெறும் எனக் கூறப்படுகிறதே?

தவெக தலைவர் விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45 விழுக்காடு நபர்கள் 14 வயது முதல் 17 வயதுடையவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வாக்குகளே கிடையாது. மேலும், கட்சி தொடங்கிய பிறகு பேரவை இடைத்தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட்டியிருந்தால் அக் கட்சியின் வாக்கு வங்கியை கணக்கிட்டு கூற முடியும். எனவே, தவெக பிரிக்கும் வாக்குகள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது.

டெல்டா மண்டலத்தில் கடந்த முறையே 3 தொகுதிகளை கைப்பற்ற முடியவில்லை. இந்த முறை களச் சூழல் எப்படி உள்ளது?

கடந்த முறை கை நழுவிய வேதாரண்யம் தொகுதியில் கூட இப்போது, அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி திமுக முந்துவதாக செய்திகள் வருகின்றன. கடந்த முறை ஒரத்தநாடு தொகுதியில் வென்றவர் இப்போது, திமுக வேட்பாளராகவே களம் காண்கிறார். எனவே, திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகள் உள்பட டெல்டா மண்டலத்தில் உள்ள 41 பேரவைத் தொகுதிகளிலும் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.