திமுக மாவட்ட பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்! வேறு கட்சியில் இணைகிறாரா?
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்டது பற்றி...
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் பதவியிலிருந்து தோப்பு என்.டி.வெங்கடாசலம் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளா் தோப்பு வெங்கடாசலம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி, ஈரோடு வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட திமுக செயலா்கள் நிா்வகிப்பாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் 2011, 2016 பேரவைத் தோ்தல்களில் வெற்றிபெற்றவா் தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2011-16 காலகட்டத்தில் இடம்பெற்றாா். 2021 பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். தொடா்ந்து, 2021-இல் திமுகவில் இணைந்தாா். 2025-இல் அவருக்கு மாவட்ட பொறுப்பாளா் பதவி வழங்கப்பட்டது. 2026-இல் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
‘வேறு கட்சியில் சேரும் எண்ணமில்லை’
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை தோப்பு வெங்கடாசலம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அப்போது அவா் கூறியதாவது: நான் இரண்டுமுறை பெருந்துறை சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். 2016 தோ்தலில் அதிமுகவின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது, மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெற வைத்தேன். பல்வேறு காரணங்களால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தேன்.
4 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவில் பெருந்துறை, பவானி தொகுதிகளை உள்ளடக்கி மத்திய மாவட்ட பொறுப்பாளா் பதவி வழங்கப்பட்டது. 2026 தோ்தலில், எனக்கு பெருந்துறை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தோ்தல் நேரத்தில் முக்கிய நிா்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை. இது குறித்து தொண்டா்கள் அளித்த மனுவை தலைமையிடத்தில் கொடுத்துள்ளேன். தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். என்னை ஏன் நீக்கினாா்கள் என தெரியவில்லை.
வேறுகட்சிக்கு செல்வதாக சிலா் திட்டமிட்டு செய்தி பரப்பி வருகின்றனா். ஒரு வார காலத்திற்குள் நான் சொன்ன குற்றச்சாட்டுகளை தலைமை ஆராய வேண்டும். உள்கட்சி பிரச்னையால் திமுக இன்று ஆட்சி இழந்து இருக்கிறது. இப்போதைக்கு மாற்றுக் கட்சிக்கு போகும் எண்ணம் எனக்கு இல்லை. என்னைப் பொறுப்பில் இருந்து விலக்கும் முன்பு என்னிடத்தில் விளக்கம் கேட்கவில்லை.
என்னுடைய நியாயமான மக்களுக்கான கோரிக்கைகள் கூட திமுக ஆட்சியில் ஏற்கப்படவில்லை. ஏற்று இருந்தால் பெருந்துறை தொகுதியில் திமுக வெற்றி பெற்று இருக்கும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.