தினமணி கதிர்

வெளியுலக கதவை திறந்து விட்டவர்!

தூர்தர்ஷன் நடராஜன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட நண்பர் ஏ.நடராஜன், என் நெருக்கமான நண்பர்களில் முதன்மையானவராக இருந்தார்.

நல்லி குப்புசாமி செட்டி

தூர்தர்ஷன் நடராஜன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட நண்பர் ஏ.நடராஜன், என் நெருக்கமான நண்பர்களில் முதன்மையானவராக இருந்தார். எங்கள் இருவரையும் எப்போதும் சேர்ந்தே பார்க்கலாம். இன்று அவரை இழந்து ஒரு தனிமையையும் வெறுமையையும் உணரும் நான் எங்கள் முதல் சந்திப்பைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.

வருடம் 1980, என் மகளின் திருமணத்திற்கு நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று குடும்பத்தினர் விரும்பினார்கள். எனவே அவரைச் சந்திக்க அவரது சொந்த ஊரான சேந்தமங்கலத்திற்குப் போயிருந்தேன். அங்கே மந்திரி ராஜாராம், ஏ.நடராஜன் இருவரையும் சந்தித்தேன். தன் மாப்பிள்ளை நடராஜன் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்ப்பதாக நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார். அன்று தொடங்கிய பழக்கம் அவர் மறையும் வரை தொடர்ந்தது.

எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தாலும் இவர் என்னுடன் சேர்ந்த பிறகு அது அதிகமாகியது. புதிய புத்தகங்கள் வெளிவந்ததும் அவை பற்றிய தகவல்களைத் தெரிவிப்பார். இவரால்தான் எனக்கு நிறைய எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பழக்கமானார்கள். என்னைப் பல விழாக்களில் கலந்துகொண்டு பொதுவாழ்வில் ஈடுபடத் தூண்டியவரும் இவரே. இவர் இல்லையென்றால் நான் உண்டு, என் கடை உண்டு என்று இருந்திருப்பேன். எனக்கு வெளி உலகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டவர் இவரே. இவரால்தான் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அந்த நண்பர்கள் இன்னமும் என் தொடர்பில் இருக்கிறார்கள். நான் நடத்தும் விழாக்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தவர் இவரே. இவரிடம் பொறுப்புக்களைக் கொடுத்துவிட்டால் விழாவுக்குப் போய்வந்தால் போதும் என்ற அளவுக்கு நான் நிம்மதியாக இருக்க முடிந்தது.

என் எழுத்துலக நுழைவும் இவரால்தான் சாத்தியமாயிற்று. அருணோதயம் பதிப்பகம் தனது 30ஆவது ஆண்டு விழாவை 1983-இல் கொண்டாடிய போது வியாபாரி என்ற முறையில் என் அனுபவங்களை எழுதித் தரக் கேட்டுக்கொண்டார் பதிப்பாளர் அருணன். நான் தயங்கினேன். ஏ.நடராஜன் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என் அனுபவங்களைச் சொல்லச் சொல்ல கவிஞர் ஞா.மாணிக்கவாசகம் எழுதிக் கொண்டே வந்தார். இப்படி நான் டிக்டேட் செய்த வாசகங்களை எடிட் செய்து அருமையான புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்தவர் ஏ.நடராஜன். இன்று "வெற்றியின் வரலாறு' என்ற அந்தப் புத்தகம் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. பின்னர் வணிக நூல்களுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளை இரு முறை பெறும் அளவுக்கு எழுத்தாளன் ஆனதும் இவர் தந்த உற்சாகத்தினால் தான்.

என் பொதுவாழ்வின் பெருமைகளுக்குப் பெரிதும் காரணமான இவர், அவற்றைப் பற்றி ரொம்பவும் சந்தோஷப்பட்டார். நான் பாராட்டு பெறும் விழாக்கள் எங்கு நடைபெற்றாலும் தவறாமல் வருவார். குவைத்தில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடந்தபோது கூடவே வந்தார். எங்கும் சேர்ந்தே செல்வதால் நெருக்கமான நண்பர்கள் எங்களை ராம, லஷ்மணர் என்பார்கள், சிலர் இரட்டையர்கள் என்பார்கள்.

ஒரு முறை எம்.எஸ். மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்க நானும் இவரும் போயிருந்தோம். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று மருத்துவமனையினர் சொன்னதால் நான் முதலில் நுழைந்தேன். என்னைப்பார்த்த எம்.எஸ்.. "" ஏன் அவர் வரவில்லையா?'' என்று கேட்க மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லி அவரையும் அழைக்கச் செய்தார் எம்.எஸ்.

என்னைப் பொருத்தவரை இசையில் நடனத்தில் நான் லயிக்கக் காரணமானவர்களில் இவர் முக்கியமானவர். நன்றாகத் தெரிந்த பழைய திரைப்படப் பாடல்களை ஹம்மிங் செய்யச் சொல்லி அது இந்த ராகம், இது அந்த ராகம் என்று சொல்லித் தருவார். அப்படித்தான் பல கர்நாடக சங்கீத ராகங்களை ரசிக்கத் தெரிந்து கொண்டேன். எனவே, என் சங்கீத ஈடுபாடுகளுக்கு இவரே பெருமளவுக்கு உதவினார். தமிழ் சினிமாப் பாடல்களில் கர்நாடக சங்கீதத்தின் சாயல் எப்படி இருந்தது என்பது பற்றி கள்ளப்பிரான் எழுதியிருந்த புத்தகத்தையும் வாங்கிக் கொடுத்தார்.

தொடக்க காலத்தில் விழாக்களில் கலந்து கொள்வதற்கும் பேசுவதற்கும் தயங்கினேன். அவர் என்னை உற்சாகப்படுத்தி ஒரு பேச்சாளராகவும் ஆக்கினார். இவர் மூலமாக கலைத்துறை அல்லாத துறைகளிலும் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் நட்பு இன்றும் தொடர்கிறது. அவர் தந்த உற்சாகத்தினால் முதலில் நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நான், பிறகு வேறு சில சபாக்களின் நிர்வாகப் பொறுப்புக்களையும் ஏற்றேன். அந்தப் பொறுப்புக்களைத் திறம்பட நிறைவேற்றுவதற்கும் அவர் உதவினார்.

தான் சம்பந்தப்பட்ட, சம்பந்தப்படாத எல்லா சபாக்களிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய -சிறப்பு விருந்தினர்களை அழைக்க }விருதுகள் பெறும் கலைஞர்களைப் பாராட்டிப் பேச அழைக்கப்படும் முக்கிய பிரமுகர்களைத் தேர்வு செய்வதும் இவரே. காரணம், இவருக்குக் கலை நுணுக்கங்களும் தெரியும். எல்லாக் கலைஞர்களையும் தெரியும். அந்த வகையில் இவர் ஒரு கலைத்துறைத் தகவல் களஞ்சியம்.

இன்று அவர் இல்லை. ஒரு வெறுமையை உணர்கிறேன். கடைசி சில நாட்கள் மட்டுமே ஓரிரு விழாக்களில் அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. மற்றபடி உற்சாகமாகப் பல விழாக்களில் கலந்து கொண்டார். அவரது மறைவு பலருக்குத் துயரம் தரக்கூடியது.

என் பிறந்த நாளன்று நள்ளிரவில் வரும் முதல் வாழ்த்துச் செய்தி இவருடையது தான். பிறந்த நாளன்று காலையில் முதலில் வந்து சந்திப்பவரும் இவர்தான். என்னைவிட வயதில் ஓரிரு வருடங்கள் மூத்தவர். வயதில் மட்டுமல்லாமல் அனுபவத்திலும் பெரியவர். இன்று இவர் இல்லை. இவரது நினைவுகள் மட்டுமே மனதில் தங்கியிருக்கின்றன.

நிறையச் சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ள இவர், தான் பழகியவர்கள் பற்றி "காற்றினிலே' என்ற புத்தகத்தை எழுதினார். கலைக்கு உழைத்துக் காற்றினிலே கரைந்தவர் இவர். இவரைப் பற்றி எழுத எழுத துக்கம் அதிகமாகிறதே ஒழிய மனதுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT