வேகமான நவீன வாழ்க்கையில் 40 வயது இளைஞர்களிடையேயும் மிக அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இதைக் குணப்படுத்த ஆங்கில மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளைச் சிபாரிசு செய்கிறார்கள். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் கைகொடுக்குமா?
சுப்ர.அனந்தராமன், பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தி.
மனதைப் பாதிக்கக் கூடிய ரஜஸ் மற்றும் தமோ தோஷங்களின் ஆதிக்கமானது அலுவல் மற்றும் வீட்டில் உண்டாகும் பிரச்னைகளால் அதிகரித்து அதுவே இரத்த அழுத்த உபாதைக்கு வித்திடலாம். மனதைச் சாந்தப்படுத்தக்
கூடியதும், திடமான திட்டங்களைத் தீட்டி தன்னிறைவை உண்டாக்கக் கூடியதுமான சத்வம் எனும் மனோகுணத்தை வளர்க்கக் கூடிய உணவு மற்றும் தியானம், மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம், கபாலபாதி, யோகப்பயிற்சி ஆகியவற்றைத் தற்காலத்திய இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு திறமையான குருவினுடைய மேற்பார்வையில் மட்டுமே இதை அனைத்தையும் கற்றுக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். பகவத்கீதையில் கண்ணன் ராஜஸிக, தாமஸிக குணங்களை அதிகப்படுத்தும் உணவினுடைய மற்றும் செயல்களின் காரணங்களை வெகு சிறப்பாக விளக்குகிறார். உணவில் அதிகமாகச் சேர்க்கக் கூடிய காரம், புளி, உப்புச் சுவை, அதிக சூடு, கரம் மசாலா, பட்டை சோம்பு, வறட்சி, உட்புற எரிச்சலை அதிகப்படுத்தும் புலால் உணவு, துக்கம், சோகம் போன்ற நிலைகளில் உணவை உட்கொள்வதாலும், கெட்டுப் பதனழிந்து போன ஓர் இரவு தங்கிய உணவு, துர்நாற்றம் மற்றும் பிறருடன் சேர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவதும் மனதிற்குப் பிடிக்காத உணவு, கூக்குரல் சாப்பாடு, பொது இடங்களில் வழங்கப்படும் உணவு போன்றவை மனதின் உயர்ந்த சத்வகுணத்தை குறைத்து ரஜஸ் மற்றும் தமோ தோஷங்களை மனதளவில் அதிகப்படுத்தி அதன் மூலம் இரத்தஅழுத்த உபாதைக்குக் காரணமாகின்றன.
மேலும், ஆயுர்வேதம் உயர் இரத்த அழுத்த காரணங்களை விளக்குகையில், வியானன் எனும் இதயத்தைச் சார்ந்த வாயுவினுடைய சீற்றமானது உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணமாகலாம் என்று கூறுகிறது. சுஸ்ருதர் எனும் முனிவர் தான் இயற்றிய "சுஸ்ருத ஸம்ஹிதை'யில் உடலில் வாயுவை அதிகரிக்கக் கூடிய காரணங்களை கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார் - தன்னைவிட வலுவானவர்களுடன் வலுக்கட்டாயமாக சண்டை போடுதல், சக்திக்கு மீறி உடற்பயிற்சி செய்தல், உடலில் காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல், பட்டினி இருத்தல், அதிகமாக நீந்துதல், இரவில் உறங்காமல் கண்விழித்தல், அளவுக்கதிகமாக சுமைகளைத் தலையில் சுமத்தல், வாகனங்களில் அதிக தூரம் சவாரி செய்தல், நீர்ப்பசையற்ற காய்கறிகளை வறண்ட நிலையில் உண்ணுதல், பச்சைப்பயறு, கொண்டைக்கடலை போன்றவற்றை சூடு ஆறிய நிலையில் உட்கொள்தல், குடல் வாயு, சிறுநீர், மலம், விந்து, வாந்தி, தும்மல், ஏப்பம், கண்ணீர் போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல் ஆகியவை - வியான வாயுவினுடைய சஞ்சாரமானது இரத்தக் குழாய்களின் உட்புற சவ்வுகளில் வேகமாக இரத்தத்தை எடுத்துச் செல்லும் நிலையில் அதனுடைய இயற்கைத் தன்மையாகிய குழாய்களின் இரப்பர் போன்ற தன்மையைக் குறைத்து வறட்சியை ஏற்படுத்தி அவற்றை விரைப்புறச் செய்வதால் அதுவே இரத்த அழுத்த உபாதைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
அலுவலகத்தில் வேலை செய்யும் நேரங்களில் இளைஞர்களின் மனப்போக்கானது அந்த வேலையை விரைவாக முடிக்க வேண்டும், மேலதிகாரிகளிடம் நல்ல பெயரெடுத்து அந்த வேலையைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் மேலும் தன் வருமானத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்ற ஒரு மனநிலையும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாகலாம். அதனால் செய்யும் வேலையில் ஆர்வம் தேவைதான். இருப்பினும் மன சமாதானம், மற்றவர்களுடன் ஏற்படும் காரசாரமான விவாதங்களில் தன் வெளிப்பாடு ஆவேசமாக இருப்பினும் மனதில் அமைதியை நிலைநிறுத்துதல், அலுவலகத்தின் வேலைப்பளுவின் நடுவே உடலையும் மனதையும் சூடுபடுத்தும் டீ, காபி போன்ற பானங்களை தவிர்த்தல், அவற்றிற்கு மாற்றாக மனதைக் குளிர்விக்கும் இனிப்பான பழங்களை உட்கொள்ளுதல், சக அலுவலர்களுடன் மகிழ்ச்சியான பேச்சு போன்றவை என்றென்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தாதவை. ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய சந்தனாதி தைலம், சந்தன பலாலாக்ஷôதி தைலம், ஹிமஸôகர தைலம் போன்றவற்றில் ஒன்றைத் தலையில் சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது. சளி, ஜலதோஷம், தலைபாரம் போன்ற உபாதைகளுக்கு அஸனவில்வாதி, ஏலாதி, மரிசாதி போன்ற தைலங்களைப் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.