முகப்பு
தினமணி கதிர்

உலக சாதனையை இருமுறை நிகழ்த்திய கோயில்!

""சாதனை என்பது மற்றவர்களை விட சிறப்பாக அல்லது தனித்துவமாகச் செய்வதுதான். ஆனால் அவையெல்லாம் தனிப்பட்ட ஒருவருக்குத்தான்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:25 PM
பகிர்:

""சாதனை என்பது மற்றவர்களை விட சிறப்பாக அல்லது தனித்துவமாகச் செய்வதுதான். ஆனால் அவையெல்லாம் தனிப்பட்ட ஒருவருக்குத்தான். ஒரு நகரமே ஒரு கோயிலுக்காக ஒன்று கூடுவதும், விழாக்கோலம் பூணுவதும் உலக அளவில் தெரிந்தது மட்டுமல்லாமல், அதற்கு அங்கீகாரமும் கிடைத்தது மிகவும் சந்தோசமானதும், மனநிறைவை தந்ததும் தான்'' என்கிறார் ராதாகிருஷ்ணன். இவர் தான் ஆட்டுக்கல் பகவதி கோயிலின் அறங்காவலர் குழுவின் நிர்வாகி. தங்களது கோயில் உலகப் புகழ் பெற்ற விஷயத்தை நம்முடன் பகிர்த்து கொள்கிறார்:

""ஆட்டுக்கல் பகவதி கோயில் என்பது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உள்ள புகழ் பெற்ற கோயில். இங்குள்ள பத்மநாபசாமி திருக்கோயிலை யாரும் பார்க்காமல் போக மாட்டார்கள். ஏனென்றால் இரண்டுமே சில கிலோ மீட்டர்கள் தூரத்தில்தான் அமைத்துள்ளன. இந்தக் கோயிலுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. சிலப்பதிகாரத்தில் உள்ள கண்ணகியின் உருவம் இந்த கோயிலின் கோபுரத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரையை எரித்த பிறகு கண்ணகி, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் வந்திருக்கிறார். கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகிலேதான் கரமணா மற்றும் கில்லியர் என்ற பெயரில் இரு நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. கண்ணகி கொடுங்கல்லூர் செல்லும் வழியில் இங்குதான் தன் இருகால்களையும் கில்லியர் நதியில் நனைத்தாராம். அதனால் இந்த இடத்துக்கு ஆற்றுக்கால் (கால்களை ஆற்றில் நனைத்ததால்) என்றும், இங்குள்ள தெய்வத்துக்கு ஆற்றுக்கால் பகவதி என்றும், பின்னர் அது மருவி ஆட்டுக்கல் என்று பெயர் பெற்றது என்றும் கூறுவார்கள்.

இந்தக் கோயிலில் உள்ள கர்ப்பகிரகத்தில் இரண்டு பகவதி அம்மன்கள் உள்ளன. இரண்டுமே ஒரே இடத்தில், ஒன்றின் பக்கத்தில் ஒன்று உள்ளது. ஒன்று மரத்தினால் ஆனது. அது தங்க ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதில் 24/25 சாலக்ராமம் உள்ளது. சாலக்ராமம் விஷ்ணுவை குறிக்கும். ஆக பகவதி அம்மனுள் விஷ்ணுவும் இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

இந்த கோயிலில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், சில வழிபாடுகள், அதாவது சந்தன காப்பு, அம்மனுக்கு 2034 வருடம் வரை மக்கள் முன் பணம் கட்டி உள்ளனர். அதே போல் கலபாபிஷேகம் பத்து வருடங்கள் வரை புக் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கோயில்தான் உலக சாதனையான கின்னஸ் புத்தகத்தில் இருமுறை வந்த கோயில் என்று பெருமையையும் பெற்றது. இந்த கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவர். ஆண்களுக்கு எப்படி சபரிமலையோ அதுபோல் பெண்களுக்கு இந்த கோயில். அப்படி பொங்கல் வைத்து கொண்டாடினால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும், ஐஸ்வரியம் பெருகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் ஆறு மாதத்திற்கு முன்பே, அடுத்த வருடத்தின் பத்து நாள் பண்டிகையின் தேதியை அறிவித்து விடுவார்கள். அதில் உள்ள ஒன்பதாவது நாள் தான் இந்த பொங்கல் வைக்கும் திருவிழா.

அந்த குறிப்பிட்ட நாளில் நம் நாட்டின் பல பகுதியிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் மக்கள் இங்கு கூடிவிடுவார்கள். இன்னும் சொல்லப் போனால், அன்று இந்த கோயிலில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே இருக்கும். கோவிலைச் சுற்றி 10 கிலோ மீட்டருக்கும் மேல் போக்குவரத்து நிறுத்தப்படும். கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் பொங்கல் வைக்க தயார் நிலையில் இருப்பார்கள்.

அவரவர்கள் வீட்டின் வாசலில் அவர்கள் பொங்கல் வைக்க, வெளியூரிலிருந்து வந்தவர்கள் கிடைக்கும் இடத்தில் பொங்கல் வைக்க, பொங்கலின் மணம் அந்த நகரையே மணக்க வைக்கும். இப்படி லட்சக் கணக்கானவர்கள் கூடும் கூட்டத்தை பார்த்த பலர், கின்னஸ் புத்தகத்தில் தங்களது கோயில் வர விரும்பினர். அதற்கு உதவினார் ஜெர்மன் நாட்டு பெண்மணி டயானா ஜேனெட் (ஈஹண்ஹய்ஹ ஒங்ய்ய்ங்ற்). அவர் இங்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து பிரமித்து, அறங்காவலர் குழுவிடம் கேட்டு, விவரங்களைச் சேகரித்து கின்னஸ் அமைப்பிற்கு எழுத, அவர்கள் ஒருவரை அனுப்பி பல்வேறு விஷயங்களை நேரில் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டார்களாம். பின்னர் தங்களது புத்தகத்தில் சேர்த்தார்கள். ஒன்றரைக் கோடி மக்கள் அன்று பொங்கல் வைத்தார்களாம். இது நடந்தது 1997}ஆம் ஆண்டு. இது தெரிந்தவுடன் மக்கள் இன்னும் நிறைய வர, கூட்டம் அதிகமாகிவிட்டது. 2009}ஆம் ஆண்டு இந்த கூட்டம் இரண்டு மடங்காகப் பெருக, திரும்பவும் இதே கோயில்தான் இரண்டாவது முறையும் கின்னஸ் புத்தகத்தில் வந்தது. ஆனால் இந்த முறை இரண்டரைக் கோடி மக்கள் பொங்கல் வைத்தார்கள் என்று வந்தது. எங்கள் ஆட்டுக்கால் பகவதி அம்மன் தான், தன் சாதனையை தானே முறியடித்து கொண்டாள்'' என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன். இந்த இரண்டு கின்னஸ் ரெகார்ட் அத்தாட்சியையும் ஓர் ஆள் உயரத்திற்கு படம் எடுத்து உள் பிரகாரத்திலேயே மக்கள் பார்க்கும் வண்ணம் வைத்துள்ளார்கள். இவரது படத்தைப் பத்திரிகையில் போடக் கேட்டால், ""அம்மாவின் படத்தை மட்டும் போடுங்கள் போதும்'' என்று மனநிறைவோடு கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.