முகப்பு
தினமணி கதிர்

யாரும் எதிர்பார்க்காத தென்றல்!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்களைப் பற்றி நிறைய கற்பனைகள் உள்ளன. சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்களைப் பற்றி நிறைய கற்பனைகள் உள்ளன. சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். வேலை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள். இப்படி நிறைய. ஆனால் உண்மை என்பதென்னவோ நேர் எதிராகத்தான் இருக்கிறது.

ஒரு புராஜெக்ட்டை முடிக்க இரவு, பகல் பாராமல், விடுமுறை எடுக்காமல், ஒரு நாளைக்கு 15 மணி நேரம் கூட வேலை செய்பவர்களும் உண்டு. சம்பள உயர்வு, பதவி உயர்வு இவற்றுக்காக அப்ரைசல் அகழிகளைக் கடக்க முடியாமல் திண்டாடுபவர்களும் உண்டு.

 பல வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்களுக்காக பல வேலைகளைச் செய்து தரும் தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களின் இன்னொரு முகம், வித்தியாசமானது. அதை  எடுத்துக்காட்டும்விதமாக ஒரு நிகழ்வு அண்மையில் சென்னையில் நடந்திருக்கிறது.

 சென்னை சிறுசேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சிலர், "பிள்ளைப்பா' என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

 25 குழந்தைப் பாடல்கள் அடங்கிய அந்த வண்ணப் புத்தகம், அந்தப் பாடல்களுக்கு இசையமைத்துப் பதிவு செய்த ஒரு சிடி... இவற்றைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். "தமிழ்மொழி தழைக்க உரமிடும்' செயல் இது என நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகம், சிடி தயாரிப்புக் குழுவில் உள்ள பாலா சிவசங்கரன் என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியனிடம் இது பற்றிக் கேட்டோம்:

""தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் நாங்கள், குழந்தைகளுக்காக தமிழில் பாடல்கள் எழுதி, அவற்றைப் பாடி, இசையமைத்து, புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிட்டிருக்கிறோம் என்பதைக் கேட்ட உடனே எல்லாருமே ஆச்சரியப்படுகிறார்கள்.

 நீங்கள் வேலை செய்ய வெளிநாடுகளுக்குப் போய்விடுவீர்கள்? வேலை செய்வதும் ஆங்கிலத்தில்தான். இங்கிருந்து வேலை செய்தாலும் அது வெளிநாட்டு நிறுவனங்களுக்காகத்தான். அப்படியிருக்கும்போது தமிழில் குழந்தைப் பாடல்களை எழுத வேண்டும்? என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது? ஆச்சரியமாக இருக்கிறதே? என்று கேட்கிறார்கள்.

 வெளிநாட்டுக்கு வேலை செய்ய நாங்கள் போனதுதான், இந்தக் குழந்தைப் பாடல்களை வெளியிடக் காரணம். ஆமாம். நாங்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும்போது அந்த நாடுகளில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு அந்நாட்டினர் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தோம். குழந்தைகளின் வயதுக்கேற்ப நிறைய புத்தகங்களை அவர்களுடைய தாய்மொழியான ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள். அவர்களுடைய நாட்டின் வளம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு அவர்கள் கற்றுத் தருகிறார்கள்.

 நயாகரா அருவியைப் பற்றிக் கூட நிறையப் புத்தகங்கள் குழந்தைகளுக்காக உள்ளன. ஆனால் நமது நாட்டில் நிலை என்ன?

 தமிழ் வழியில் படிக்க வேண்டாம். தமிழை ஒரு பாடமாகக் கூடப் படிக்க வேண்டாம். பிரெஞ்ச் படித்தால் நிறைய மார்க் எடுக்கலாம். ஆங்கில வழியில் படிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதனால் நமது குழந்தைகளுக்கு நமது நாட்டின் பண்பாடு, நமது மொழி, நமது வளம், நமது சிறப்பு எதுவுமே தெரியாமல் போய்விடுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வெளிநாடுகளில் வேலை செய்யும்போது இயல்பாகவே எங்களுக்குள் வேர் ஊன்றிவிட்டது.

 வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்து, இப்போது சென்னையில் வேலை செய்யும்போது கூட அந்த எண்ணம் எங்களைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருந்தது.

 இந்நிலையில் அலுவலகத்தில் உள்ள சமூக வலைத்தளத்தில் தமிழில் கதை, கவிதை, பாடல், கட்டுரை என எழுதத் தெரிந்தவர்கள், ஆர்வமுள்ளவர்கள் எழுத ஆரம்பித்தனர். இது நாங்கள் செய்யும் கடினமான அலுவலக வேலைகளில் இருந்து சற்று ரிலாக்ஸ் செய்வதாகவும் இருந்தது.

 இப்படி எழுதுவதில் பயிற்சியும், திறமையும் உள்ளவர்களில் சிலர் சேர்ந்து, "பிள்ளைப்பா' என்ற ஒரு குழுவை உருவாக்கினோம். அதில் தமிழில் எழுதத் தெரிந்த எல்லாரும் எழுதினோம். அப்போதுதான் நமது குழந்தைகளுக்காக நாம் ஏன் பாடல்களை எழுதக் கூடாது என்று எங்களுக்குத் தோன்றியது.

 நிறைய குழந்தைப் பாடல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. "தஅஐச... தஅஐச எஞ அரஅவ' என்று மழை பெய்யாத நமதுநாட்டில் நமது சூழ்நிலைக்குப் பொருந்தாத ஆங்கிலப் பாடல்களை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.  எனவே ஆங்கிலப் பாடல்களை அப்படியே நேரடியாக மொழிபெயர்க்காமல், அவற்றின் கருத்தை எடுத்துக் கொண்டு தமிழில் பாடல்களை எழுத வேண்டும் என்று நினைத்தோம். திட்டமிட்டோம்.

 அப்படி எழுதிய பாடல்களைத் தொகுத்துதான் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். புத்தகத்தை எத்தனை குழந்தைகள் படிப்பார்கள்? படிக்க விரும்பாத குழந்தைகளுக்குப் புத்தகம் சென்று சேர்வது எப்படி? இப்படி ஒரு சந்தேகமும் எழுந்தது. புத்தகத்தில் உள்ள பாடல்களுக்கு இசையமைத்துப் பாடி, சிடியாகவும் வெளியிட்டால் குழந்தைகள் அதைக் கேட்பார்களே என்பதால், சிடியாகவும் தயாரித்து வெளியிட்டிருக்கிறோம்.

 பாடல் எழுதினோம்; இசை அமைத்தோம். புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிட்டோம் என்று எளிதாகச் சொல்லிவிட்டேனே தவிர, இதற்காக நாங்கள் உழைத்தது அதிகம்.

 "பிள்ளைப்பா' செயற்குழுவில் 19 பேரும், பாடகர்கள் - இசை அமைப்பாளர் 6 பேரும் மொத்தம் 25 பேர் அடங்கிய குழுதான் எங்களுடையது. இதில் சென்னையில் எங்களுடன் வேலை செய்த ராஜராஜன், இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார். டயனா, லாவண்யா, ரேவதி, வித்யாலட்சுமி ராஜேஸ்வரி ஆகிய பெண்கள் உட்பட எல்லாரும் புத்தகத்தை வெளிக் கொண்டு வருவதில் ஆர்வமாக இருந்தார்கள்.

 குழந்தைகளுக்கான பாடல் புத்தகம் என்பதால் வண்ணப் படங்களை வரைந்து தர ஹரி கிருஷ்ணனும், முத்துவும் முன்வந்தார்கள்.

 புத்தகம் உருவாகத் தொடங்கியது. வேலையையும் பார்த்துக் கொண்டு, புத்தகத்தையும் உருவாக்க வேண்டும். புத்தகத்தை வடிவமைப்புச் செய்த அருண்குமார் ஒவ்வொரு நாளும் இரவு 2 - 3 மணி வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. புத்தக அட்டையில் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் புகைப்படங்களே இடம் பெற்றன.

  நாங்கள் எழுதிய பாடல்களை லாவண்யா, சாய்சத்யா, டயனா, பெமில் ஜில்ட்டா, ரேவதி, கெüதமன், அஞ்சலி ஆகியோரே பாடினார்கள். அரவிந்த்குமார் இசை அமைத்தார்.

 இப்படி நாங்களே உருவாக்கிய இந்தப் புத்தகம், சிடி ஆகியவற்றின் அடக்க விலை ரூ.125. ஆனால் ரூ.150 தான் விலை வைத்திருக்கிறோம். அதிக விலை வைத்தால் புத்தகத்தை யாரும் வாங்கமாட்டார்களே என்று நினைத்ததால், இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, குறைந்த விலைக்கே விற்பனை செய்யலாம் என்று நினைத்தோம்.

 இப்போது புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் காலத்தில் "யாமறி அறக்கட்டளை' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி மேலும் தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →