கடைசி வரைக்கும்
அது ஒரு முதியோர் இல்லம். அதிகாலை நேரம். சண்முகமும் சரவணனும் உள்ளிருந்து வந்தார்கள். வாசலுக்கு இரண்டு பக்கமும் இருந்த பவளமல்லி குறுமரங்களிலிருந்து கீழே விழுந்து கிடந்த மலர்கள் வானத்து நட்சத்திரங்கள் கீழே விழுந்து விட்டனவோ போலக் காட்சியளித்தன.
அது ஒரு முதியோர் இல்லம். அதிகாலை நேரம். சண்முகமும் சரவணனும் உள்ளிருந்து வந்தார்கள். வாசலுக்கு இரண்டு பக்கமும் இருந்த பவளமல்லி குறுமரங்களிலிருந்து கீழே விழுந்து கிடந்த மலர்கள் வானத்து நட்சத்திரங்கள் கீழே விழுந்து விட்டனவோ போலக் காட்சியளித்தன.
"கம்'மென்று வீசும் மணத்தை அனுபவித்தவாறு அவர்கள் பேசிக்கொண்டு வந்தனர். இருவரும் பூவாளிகளை எடுத்துக் கொண்டு சுற்றிலுமுள்ள மலர்ச் செடிகளுக்கு தொட்டியிலிருந்த தண்ணீரை எடுத்து நிரம்பவே தெளித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பையன் வந்து விழுந்து கிடந்த பவளமல்லி மலர்களை பூஜைக்கு எடுத்துச் சென்றான்.
பாட்டுச் சத்தம் கேட்டது.
இருவரும் உள்ளே சென்றனர்.
பெண்கள் இருக்கும் ஹாலின் ஜன்னலை பாட்டு நேரம் மட்டும் திறந்து வைத்துக் கொள்ள இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடவுள் வாழ்த்துப் பாடல் முடிந்ததும்
""எந்தரோ மஹானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு''
""சரவணா கேட்டியா இந்த வயசுலயும் அந்தம்மா குரலை; ஸ்ரீ ராகத்துல தியாகய்யரின் இந்த பாட்டைப் பாடும்போது பவளமல்லிப் பூக்களை கூடை கூடையா என் தலையில கொட்டுற மாதிரியிருக்குயா'' மகிழ்வோடு கூறினார் சண்முகம்.
""அதென்ன அந்தம்மா ஒரே தெலுங்குப் பாட்டாவே பாடுறாங்கய்யா''
""அவங்க படிச்சது அதுமட்டுமாக இருக்கலாம்'' நேத்து "நினு ஜுசி தன்தன்யுடைதி' பாட்டை பாடும்போது அவங்க முகமலர்ச்சி பார்க்கணுமே யாரையும் கவர்ந்துவிடும் குரலப்பா அவங்களுக்கு. சுத்த பங்காள ராகத்துல "ராமபக்தி சாம்ராஜ்யம்' பாட்டை ஒரு நா பாடுனாங்க தியாகராஜரே கேட்டாலும் சந்தோஷப்பட்டிருப்பாரு.''
""இவ்வளவு அழகா சங்கீதம் படிக்கிறவங்க எதுக்கு முதியோர் இல்லம் வந்தாங்க''
""நீயும் நானும் எப்படி வந்தோம். ஒரே மகனைப் பெத்தவங்களுக்கு இதுதான் கதின்னு இந்த நாட்டு பண்பாடே இப்படி மாறிடிச்சோ என்னமோ''
""நீங்க எப்படி இந்த தெலுங்குப் பாட்டுகளை ரசிக்கிறீங்க''
""அப்பா ராகம், ஓசை, தாளம், ரிதம் இதுல மூழ்கிட்டா வார்த்தைகள் எதுவாயிருந்தா என்ன? நா நெல்லை மாவட்டம் கரிவலம் அருகே சென்னிகுளத்துல பிறந்தவன். எங்க ஊர்க்காரங்க எல்லாருக்குமே தமிழிசைன்னா உசுரு, காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஊரது. காவடிச் சிந்துன்னு புதிய சந்தத்தை தமிழுக்கே அறிமுகம் செய்தவரு, அவருக்கு முன்னயும் யாரும் இப்படி பாடலை, பின்னாலயும் முயற்சி பண்ணவங்களாலயும் முடியல, அண்ணாமலை ரெட்டியார் சந்தச் சிகரம். எங்க ஊர்ல சங்கீதம் தெரியாதவங்க கூட காவடிச் சிந்து பாடல்களைப் பாடுவாங்க. "பாடுறவன் பாடிட்டா பசுமாடே தலையாட்டுமுன்னு விளாத்தி
குளம் சுவாமிகள் ஒரு தடவை சொன்னாரு. காவடிச் சிந்தை தெரிஞ்சவன் பாடிட்டா ஆனந்தக் குளத்திலேயே மூழ்கிய மாதிரி இசைச்சாரல் எல்லாத்தையுமே நனச்சிடும்பா''
""ஐயா காவடிச் சிந்து பாடலை நீங்க பாடுவீங்களா?''
""சரவணா நானும் பாடுவேன்... ஆனா எனக்கு குரல் வளம் இல்லையே, அதை நெனச்சா வருத்தமாயிருக்கு. எனது பாட்டி ராட்டை நூக்க பஞ்சுல திரி செய்ய வில்லால பஞ்சை அடிப்பாங்க. பஞ்சு அப்ப துகள்துகளா பறக்கும். மத்தவங்க பாடும்போது எம் மனசும் அப்படி பறக்கும்.
தன்னன்ன னானன்ன தான. தான
நானன்ன னானன்ன தானன்ன னான
இதே தாளத்துல காவடிச் சிந்து பாடலாம்
சில பேரு செஞ்சுரூட்டியிலயும் சிலர் ஆனந்த பைரவியிலயும் பாடுவாங்க''.
""சரிய்யா உங்களுக்கு இந்த இசை ஆர்வம் எப்படி வந்தது?''
""ஒன்னு காவடிச் சிந்து ஊர்ல எல்லாரும் பாடக் கேட்டு, அடுத்து நான் ராஜபாளையம் ஊர்ல தமிழாசிரியர் வேலை பார்த்தேன். கலைமன்றத்துல மாதாமாதம் இசை நிகழ்ச்சிகள் நடக்கும். அரியக்குடி, செம்மங்குடி ஜிஎன்பி, மதுரை சோமு இப்படி எல்லாருடைய இசை நிகழ்ச்சிகளும் கேட்டிருக்கேன். அப்படி வந்ததுதான் இசையார்வம். இந்த குப்பைப் பயலும் அங்கதானே கெடச்சான்''.
""ஐயா என்ன சொல்றீங்க''
""அடடா! அதப் பத்திக் கேக்காதே, எப்படியோ வாய் தவறி உளறிட்டேன். தயவு செஞ்சி அது பத்தி கேக்காதே...''
""சரிய்யா உங்க பையன் இந்த மாதம் பணங்கட்ட வந்தானா, உங்கள பாத்தானா''
""முந்தா நா வந்தாப்புல போல, முதியோர் இல்லக் கட்டணம் நாலாயிரமும், என் சிலவுக்கு ஆயிரமும் கட்டிட்டு போயிட்டானாம்''.
""வந்தவன் ஏன் உங்களப் பாக்க வரல்லே''.
""அவனுக்கு என்ன வேலயோ? அவன் மனைவிக்குப் போயி நடந்ததைச் சொல்லணும், என்னை எதுக்குப் பாக்கணும்? போறான் போ''
மதிய உணவு முடித்துவிட்டு சிறிது ஓய்வும் எடுத்துவிட்டு வழக்கம்போல் அவர்கள் வராண்டாவில் வந்து அமர்ந்தனர். அப்போது ஒரு பையன் அலுவலகத்திலிருந்து வந்து சண்முகத்திடம்,
""இந்தாங்க ஐயா... ஆயிரம் ரூபாய் உங்ககிட்ட தரச் சொன்னாங்க'' என்று தந்துவிட்டுப் போனான். சரவணன் இவரிடம் மெல்லப் பேசினான்.
""ஐயா உங்க ஓய்வூதியம் வருமில்ல... ஏடிஎம்ல நீங்களே பணம் எடுக்கலாமில்லே''
""எப்பா ஏடிஎம் கார்டும் அவங்ககிட்ட யில்லே இருக்கு. பதினைந்தாயிரம் ரூபாய் எடுத்து ஐயாயிரம் மட்டும் எனக்குத் தரான், எனக்கு போதுமில்லேன்னு. நானும் கண்டுக்கிறதில்லை.
""என்ன இது அநியாயமா இல்லே இருக்கு''.
""இந்தா பாரு வீடு, நிலம் எல்லாமே அவனுக்கு தானே? இந்த பத்தாயிரம் வச்சி நான் என்ன செய்ய போறேன், சரிதான் போன்னு விட்டுட்டேன்''
""சரிய்யா காலயில ஏதோ சொல்லிட்டு அப்புறம் மறச்சிட்டீங்க? ஒரு விஷயத்தை யாருகிட்டயும் சொல்லல்லேன்னாலும் மனசுல பாரமாத்தானே இருக்கும். அதனால என்கிட்ட சொல்லலாமில்லே''.
""அப்ப எனக்கு சென்னிகுளத்துலயே கல்யாணம் ஆயிடிச்சி, பத்து வருசம் பிள்ளையில்லே. ராஜபாளையத்துல வேல பாத்துக்கிட்டிருந்தேன். வேலை நேரம் போக கலைமன்ற நூலகத்துல படிச்சிட்டிருப்பேன். அங்க ரெம்ப பேர் வருவாங்க. எனக்கு பலரும் நல்ல பழக்கம். நூலகத்துல கூட்டி தெளிக்கிற அம்மாவும் பழக்கம். பாக்குற நேரம் "ஐயா ஐயா'ன்னு மரியாதையா பேசுவாங்க''
அப்போது காற்று பயங்கரமா வீச, இலைதழை தூசுகள் எங்கும் பரவ அவர்கள் எழுந்து உள்ளே சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வந்த அவர்கள் வராண்டாவை துப்புரவு செய்துவிட்டு அமர்ந்தனர். சண்முகம் பேசினார்.
""ஒருநாள் அதிகாலையில் அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்தேன். நூலகம் முன்பு ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று விசாரித்தேன். நூலகம் முன்பு குப்பைத்தொட்டியில் ஒரு அழகான, சிறிது நேரத்திற்கு முன்புதான் பிறந்த ஒரு ஆண் குழந்தை இருந்ததாகவும் நூலகத்தில் துப்புரவு செய்யும் பெண் அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டு போய் வீட்டுக் கதவை மூடிக் கொண்டதாகவும் சொன்னார்கள்.
நான் சிறிது நேரம் கழித்து கூட்டம் கலைந்து
சென்றபின் அந்த வீட்டுக் கதவைத் தட்டினேன்.
அந்த அம்மாள் வந்து கதவைத் திறந்தார்கள்.
""ஐயா... வாங்க... உள்ளே வாங்க'' என்று அழைத்து நான் உள்ளே சென்றதும் கதவை மூடிக் கொண்டார்கள்.
""ஐயா என்ன விஷயம் எதுக்கு வந்தீங்க'' என்று கேட்டார்கள்.
""அம்மா இப்ப ஒன்று கேள்விப்பட்டேன். எனக்கு பத்து வருசமா குழந்தை இல்லே. அந்தக் குழந்தையைக் கொடுத்தீங்கன்னா நானே நல்லா வளர்த்துக்கிடுவேன். குழந்தைக்கு உங்க பேரையே வச்சிக்கிடுவேன் என்று கூறினேன். அப்ப என்னையறியாமலே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது''.
உடனே அந்தம்மா, ""ஐயா ஐயா இதுக்குப் போயி நீங்க கண்ணீர் விடலாமா, நான் என் அக்கா பொண்ணுக்கு குழந்தையில்லே அவளுக்குத் தரலாமுன்னுதான் எடுத்து வந்தேன். நீங்க பெரிய ஆளு, படிச்சவங்க நீங்க கண்ணீர் விட்டதப் பார்த்ததும் குழந்தையை உங்களுக்கே தரலாமுன்னு நினைக்கிறேன்'' என்று கூறி உள்ளே சென்று குழந்தையை எடுத்து வந்து என்னிடம் தந்தார்கள். அந்த அம்மாவுக்கு நன்றி கூறி ஆயிரம் ரூபாய் எடுத்துத் தந்தேன்.
அவர்கள் அதை வாங்க மறுத்துவிட்டார்கள். இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது. சொந்தக் குழந்தைபோல வளர்க்கனுமுன்னு நெனச்சி ஊரு மாத்தி மதுரைக்கே வந்துட்டோம். இது எம்புள்ளக்கோ வேறு யாருக்கோ இதுவரைக்கும் தெரியாது.
அவன பொறியாளராப் படிக்க வச்சு கல்யாணமும் செஞ்சு வச்சேன். கொஞ்ச நாள்ல என் மனைவியும் காலமாயிட்டா. ஆறு மாசத்துல என்ன மருமகளுக்குப் பிடிக்கல்லே. முடிவு இந்த முதியோர் இல்லம்'' அவர் பெருமூச்சு விட்டார்.
கேட்டுக் கொண்டிருந்த சரவணனுக்கு ஆத்திரமாக வந்தது.
""அடப்பாவிப் பய மவனே... குப்பையிலே கிடந்த பயலுக்கு திமிரப் பாரேன்''
""ஏய்... ஏய்... என்னையும் வய்யிரே... அவனையும் வய்யிரே... எதனாலயும் அவன வைய்யக்கூடாது''
""ஆமா இன்னும் தோள்ல தூக்கி கொண்டாடுங்க, நா நாளயே போயி அவன் ஆபீசுல அவனப் பாத்து நடந்ததைச் சொல்லப் போறேன்''.
""இந்தா பாரு இதுக்குத்தான் நான் இதுவரைக்கு யாருகிட்டயும் சொல்லல்லே, காலயில எப்படியோ வாய் தவறி வந்திரிச்சி. இத நீ அவன்கிட்டச் சொன்னா என்னைக் கொன்ன மாதிரிதான் நான் நினைப்பேன். கடைசி வரைக்கும் இது அவனுக்குத் தெரியவே கூடாது சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு''
சண்முகம் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக வடிந்தது.
சரவணனுக்குந்தான்.