தினமணி கதிர்

சுயம்வரம்!

DIN

"லதாம்மா. நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கம்மா. அரைநாள் லீவு போட்டுடும்மா.''
 "நாளை கண்டிப்பா முடியாது அப்பா. ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்கப்போகுது. பிள்ளை வீட்டுக்காரங்களை இன்னொருநாள் வரச் சொல்லிடுங்கப்பா.''
 "பிள்ளை வீட்டுக்காரங்க நம்ம இஷ்டப்படி வருவாங்களா? அவங்க சௌகரியப்படிதான் வருவாங்க.''
 "இன்னொரு யோசனைப்பா... அவங்கதான் பொண்ணு பார்க்க வரணும்னு கட்டாயமா?  நாமே ஞாயிற்றுக்கிழமை போய் பையனைப் பார்த்துட்டு வந்துடுவோமே. அம்மாவுக்கும் வர்றவங்களுக்கு ஸ்வீட், காரம், காபி தயாரிக்கிற வேலை மிச்சம்.''
 "யோசனை நல்லாத்தான் இருக்கு. அவங்க அதுக்கு ஒத்துப்பாங்களா தெரியலையே....''
"கேட்டுத்தான் பாருங்களேன். நம்ம லதாவைக் கட்டிக்க அதிர்ஷ்டம் இருந்தா பிள்ளை வீட்டுக்காரங்க இதுக்கு சம்மதிப்பாங்க. சம்மதிக்கலைன்னா அவங்களுக்கு "லக்' இல்லைன்னுதான் சொல்லணும்.''

*********
லதாவின் யோசனைப்படியே லதாவின் தந்தை சாமிநாதன் பிள்ளை வீட்டுக்குப் போன் செய்தார்.
 "புதன்கிழமை பொண்ணு பார்க்க வர்றதாக சொல்லியிருந்தீங்க. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்கப் போறதால அவளால லீவு போட முடியாது. அதனால ஞாயிற்றுக்கிழமை வச்சிக்கலாம்னு சொல்றா.''
 "ஞாயிற்றுக்கிழமைதானே. ரொம்ப சௌகரியமாப் போச்சு. எத்தனை மணிக்கு வரணும்?''
 "ஒரு சின்ன திருத்தம். உங்களை ஏன் சிரமப்
படுத்தணும்? நாமே போய்ப் பார்த்துட்டு வந்துடலாமேன்னு அபிப்ராயப்படறா எம் பொண்ணு. அதனால நீங்க சிரமப்பட வேண்டாம். நாங்களே ஞாயிற்றுக்கிழமை மாலை சரியா நாலரை மணிக்கு உங்க வீட்டுக்கு வந்துடுறோம். நாங்க எங்க பொண்ணு என நாலைஞ்சு பேர் மட்டும்தான் வருவோம்.''
 "நீங்க சொல்றீங்க சரி. எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. ஆனா... வீட்டுல என் மனைவிகிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமே. அவங்க என்ன சொல்வாங்களோ? தெரியலையே...''
 "நீங்க வந்தா என்ன, நாங்க வந்தா என்னா? பையனை பொண்ணு பார்க்கணும், பொண்ணை பையன் பார்க்கணும். அவ்வளவுதான்.''
 "அப்படி சொல்லிட முடியாது ஊர் வழக்கம்னு ஒண்ணு இருக்கே.... பிள்ளை வீட்டுக்காரங்கதான் பெண் பார்க்க வர்றது வழக்கம். பிள்ளையை பெண் குடும்பத்தினர் பார்க்க வந்ததா வழக்கம் இல்லையே....''
 "அதனால என்ன? நாமே புதுசா ஒரு வழக்கத்தை உண்டாக்கிடலாமே.''
 "இல்லைங்க சார்.... எதுக்கும் என் வொய்ஃப் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு உங்களுக்கு போன் பண்றேன். அதுக்கு அப்புறம் முடிவு செய்யலாம். அதுவரை கொஞ்சம் பொறுங்க'' என பிடிகொடுக்காமல் மறுத்துவிட்டார்.

********
பையனின் தந்தை அவர் மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார். அந்த அம்மாள் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.
 "இதென்னா ஊர்ல இல்லாத வழக்கமா இருக்கு. பொண்ணு வந்து பிள்ளையைப் பார்க்கிறதா..? நாம ஒண்ணும் அப்படி குறைஞ்சு போயிடலை. ஆமா பொண்ணு வந்து நம்ம பையனைப் பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டு நம்ம மூஞ்சில கரியைப் பூசணுமா?''
"நாம் இதுவரை எத்தனை வீடுகளுக்கு போய் பொண்ணைப் பார்த்துட்டு பெண் பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்திருக்கோம்.''
 "அதுதான் ஊர் வழக்கம். திடீர்னு முறையை மாத்த முடியுமா?''
 "ஏன் எவ்வளவோ விஷயத்துல மாறிட்டீங்களே. டிரஸ் விஷயத்தையே எடுத்துக்குவோம். சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறிட்டீங்க. நைட் கவுனையே பகல்லயும் போட்டுகிட்டு தெருவுக்கே காய்கறி வாங்க வர்றீங்க. சாப்பாடு, நகை எல்லாத்திலயும் மாறிட்டீங்க. இந்தப் பொண்ணு பார்க்கிற பழக்கத்துல மட்டும் மாறக் கூடாதா? ஒரு தடவை டிரையல்தான் பார்ப்போம்டி.''
 "இதென்ன சினிமாப் படமா? வாழ்க்கைப் பிரச்னைங்க.''
 "வாழ்க்கை சரி... அதென்ன பிரச்னை?''
 "சரி என்ன சொல்றீங்க... பொண்ணு நம்ம வீட்டுக்கு பையனைப் பார்க்க வரணும்னு சொல்றீங்க... அவ்வளவுதானே. உங்கள் இஷ்டம்போலவே செய்யுங்க. வர்றவங்களுக்கு நான் காபி தண்ணிகூடத் தரமாட்டேன்.''
 "அது அவங்க செய்த அதிர்ஷ்டம். உன் காபியை குடிச்சு அவஸ்தைப்படறதிலேர்ந்து தப்பிச்சாங்க.''
 "நான் போடுற காபி அப்படி மோசமாவா 
இருக்கு? மோசமா இருந்திருந்தா இத்தனை வருஷம் வாயைத் திறக்காமல் குடிச்சிட்டிருப்பீங்களா?''
 "உன்கிட்ட வாயைத் திறக்க முடியுமா? அதுக்குப் பயந்துதான் நான் எப்பவும் என் வாயை மூடிக்கிட்டுதானே இருக்கேன்.''
 "அப்படியே இருங்க.''
 "அப்ப வர்ற ஞாயிற்றுக்கிழமை அவங்களை நம்ம பையனைப் பார்க்க வரச் சொல்லலாம்னு சொல்றே. சரி தானே.''
 "சரி வரச் சொல்லுங்க. ஆமா நம்ம பையன்கிட்ட சொல்லிட்டீங்களா? பையன் சம்மதம் கேட்க வேண்டாமா?''
 "அவன்கிட்ட என்ன கேட்கிறது? நீ சொன்னா சரிதான். உன் வார்த்தையை அவன் மீறிடுவானா?''
 "நான் வளர்த்த பிள்ளையாச்சே. உட்காருன்னா உட்காருவான். நில்லுன்னா நிப்பானே.''
 "உன் பிள்ளை மட்டுமல்ல, என்னையும் அந்த லிஸ்ட்லே சேர்த்துக்கலாம்.''
 "போதும் உங்க கேலி.''
 "போச்சு... போச்சு... எல்லாம் போச்சு. பெண் பார்க்கப் போற வீட்டுலே போண்டா, பஜ்ஜி, கேசரின்னு ஒரு பிடி பிடிக்கலாம்ன்னு நினைச்சேன். அதற்கு வழியில்லாம போச்சே.'' - பையனின் தம்பியின் கவலை.
 "ஏன் உங்கம்மாவையே அதையெல்லாம் செய்ய சொல்லேன்.''
 "நம்ம வீட்டுல அம்மா செய்து சாப்பிடுறதுல என்ன புதுமை இருக்கு? அடுத்தவங்க வீட்டுல ஓசியில சாப்பிட்டா அந்த ருசியே தனிதான்.''
 "அதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் அவங்க நீங்க பொண்ணு பார்க்க வர வேண்டாம். நாங்களே பிள்ளை பார்க்க வர்றோம்னு சொல்லிட்டாங்களா?''
 "அப்படி நினைச்சிருந்தாங்கன்னா, அவங்களுக்கு நாம தண்ணி கூட கொடுக்கக் கூடாது அப்பா.''
 "உன் அம்மாவும் இதையே தான் சொன்னாள். உங்க ரெண்டு பேருக்கும் கருத்து ஒற்றுமை இருக்கு.''
 "அண்ணா, உன்னை பொண்ணு பார்க்க வராடா... நல்லா முகத்துக்கு மேக்கப் ஏத்திக்கோ....''
 "நா என்ன ஷோகேஸ் பொம்மையா? நான் இப்படியேதான் இருப்பேன். பார்த்திட்டுப் போகட்டும். பொண்ணு ரொம்ப திமிர் பிடிச்சவளா இருப்பா போல தெரியுது.''
 "பார்க்காமல் எப்படிச் சொல்றே?''
 "என்னை பார்க்க அவ வருவேன்னு சொல்றதுலேயே அவளோட திமிரு தெரியுதே.''
 "உன்னை வந்து பார்த்திட்டு பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவ?''
 "நான் அதுக்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். தப்பிச்சேன்னு சந்தோஷப்படுவேன்.''

*******
இங்கு லதா வீட்டில் மாப்பிள்ளை பார்க்க என்ன வாங்கிக் கொண்டு போவது என்று ஒரே பிரச்னை. கல்யாண காரியமா போறதால ஒரு பந்து மல்லிகைப் பூ மட்டும் வாங்கிக்கொண்டு போவது என்று முடிவு செய்தார்கள். வீட்டு மனிதர்கள் மட்டும் போய்ப் பார்த்தால் போதும். உறவினர்கள் யாரும் வேண்டாம் என்றும் முடிவானது. அவர்கள் புறப்பட்டபோது எல்லாருக்கும் முன்பு அவர்கள் வீட்டு "ஜிம்மி' காரில் ஏறி அமர்ந்து கொண்டது. "அதுவும் வந்து விட்டுப் போகட்டும்... அதுவும் நம் வீட்டில் ஒரு நபர்தானே. அதுவும் மாப்பிள்ளையைப் பார்க்கட்டுமே.''
 காரை விட்டிறங்கிய பெண் வீட்டுக்காரர்களை பையனின் தந்தைதான் வரவேற்றார். பையனின் தாயார் மிஸ்ஸிங். பையன் ஹாலிலேயே சோபாவில் உட்கார்ந்திருந்தான்.
 "அவங்களெல்லாம் வந்துட்டாங்கம்மா'' என்று வேலைக்காரி குரல் கொடுத்த பின்புதான் பையனின் தாயார் வாசலுக்கு வந்தார். சிரமப்பட்டு தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பது பார்க்க நன்றாகத் தெரிந்தது.
 "வாங்க... வாங்க...'' என்று பையனின் தந்தைதான் வாய் மலர்ந்து முகம் மலர வரவேற்றார். அவர் மனைவியோ வாயைத் திறக்கவில்லை. வந்தவர்கள் ஹாலில் சோபாவில் அமர்ந்தார்கள். லதாவின் தாயார் பூப்பந்தை எடுத்து டீபாயின் மீது வைத்தாள்.
  "இதுதான் எங்க பொண்ணு லதா.'' என்று லதாவின் தந்தை சொல்ல லதா எழுந்து நின்று பொதுவாக அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
  "இதுதான் எங்க பையன் ரகுராமன்.'' என்று ரகுவின் தந்தை அறிமுகப்படுத்த ரகுராமன் உட்கார்ந்தபடியே வந்தவர்களுக்கு வணக்கம் செய்தான்.
 "பொண்ணு படிச்சு வேலை பார்க்கிறது சரி... சமைக்கத் தெரியுமா?'' பையனின் தாயார் அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டார்.
 "எங்க வீட்டுல சமையல்காரி இருக்கா. அதனால லதா சமையலறை பக்கமே போனது இல்லை. காபி மட்டும் நல்லா போடுவா.''
 "சின்ன வயசுல என் பையனுக்கு நான் நல்லா சமைக்கக் கத்துக் கொடுத்திருக்கேன். என் பையன் என்னைவிட நல்லா சமைப்பான். என் பையன்கிட்டதான் எங்க வீட்டுக்காரரே சமைக்கக் கத்துக்கிட்டார்.''
 "அப்போ எங்க லதா கொடுத்து வச்சவதான். அவளுக்கு சமைக்கத் தெரியலைன்னாலும் கவலையில்லை.''
 "லதா கொடுத்துவச்சவ  சரி. எங்களுக்கு லதா சமையலை சாப்பிடக் கொடுத்து வைக்காமப் போயிடுமே.''
 "லதா, பையனை நல்லா பார்த்திட்டியா? பிடிச்சிருக்கா? மேற்கொண்டு பேசலாமா?''
 "பிடிச்சிருக்கு பிடிக்கலைங்கிறதை விட முக்கியமான ஒரு விஷயம் பேசணும். இங்கயே பேசலாமா? இல்ல தனியா கூட்டிட்டுப் போய் பேசிட்டு வரலாமா?''
 "எங்களுக்குத் தெரியாத ரகசியம் என்ன பேசப் போறே? விஷயத்தை இங்கயே பேசு. நாங்களும் தெரிஞ்சுக்கலாமே.'' ரகுராமனின் தாய் குறுக்கிட்டாள்.
 "அதுவும் நல்லதுதான். ஒன்றும் பெரிய விஷயமில்லை. இவ்வளவு வருஷமா எங்க அப்பா, அம்மா கூடவே வாழ்ந்திட்டேன். கல்யாணமான பிறகு புதுசா ஒரு இடத்துல வாழப் பழக்கப்படுத்திக்கிறது கஷ்டமாயிருக்கும். அதனால கல்யாணத்துக்குப் பின்னால் உங்க பையன் மிஸ்டர் ரகுராமன் எங்க வீட்டுக்கே வந்திட்டா, எனக்குப் பிரச்னையில்லை. இதைத்தான் கேட்கணும்னு நினைச்சேன்.''
 "என் பையனை உங்க வீட்டு மாப்பிள்ளையாக்கப் பாக்குறீங்களா? அது நிச்சயம் நடக்காது. நான் அதற்கு சம்மதிக்கவும் மாட்டேன்.'' - ரகுராமனின் தாயார் வெடித்தாள்.
 "அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. இந்த இடத்தை நாங்க டிராப் பண்ணிடுவோம். அப்பா கிளம்பலாமா?'' - லதா எழுந்து நின்றாள்.
 "இதுக்குதான் நாம் பொண்ணு பார்க்கப் போகலாம்னு சொன்னது. நாம போயிருந்தா நாம பெண்ணை பிடிக்கலைன்னு சொல்லிட்டு வரலாம் இல்லையா? இப்ப என்னடான்னா பொண்ணே இந்த இடம் வேண்டாம்னு சொல்லிட்டுப் போறாளே... நம்ம இடத்துக்கு வந்து நம்மையே அவமானப்படுத்துறதா? இதை நாம சும்மா விடக்கூடாதுடா? நீ இவளைத்தான் கட்டிக்கணும். இவளை நான் இஷ்டம்போல் ஆட்டி வைக்கணும். நான் யார்னு காட்டணும். மாமியார்னா அவங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்.''
 "எனக்காகத்தான் நான் கல்யாணம் செய்துக்கணும். உங்க இஷ்டத்துக்கு நான் கல்யாணம் செய்துக்க முடியுமா அம்மா?'' - ரகுராமன் தனது தாய்க்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தான்.
 "என்னடா என்னையே எதிர்த்தா பேசுறே? நான் யாரைக் காட்டினாலும் அவ கழுத்துல நீ தாலியைக் கட்டியே தீரணும் தெரியுமா?'' ரகுராமனின் தாய் மீண்டும் ரகுராமனிடம் பாய்ந்தாள். 
 "உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? சொல்லுங்க... உங்க அம்மாவைப் பத்தி கவலைப்படாதீங்க. சமாளிச்சுக்கலாம்.'' என லதா நேரடியாகவே ரகுராமனிடம் கேட்டாள்.
 "என்னைச் சமாளிக்க உன்னால முடியவே முடியாது. நீதான் ஏமாந்து போவே தெரிஞ்சிக்க.'' மீண்டும் லதாவிடம் பாய்ந்தாள் ரகுவின் தாய்.
 "அத்தை, இந்த சண்டையை எல்லாம் கல்யாணத்துக்கு பின்னால் வச்சிக்கலாமே. கல்யாணத்துக்கு முன்னாடியே சண்டை போட்டுட்டா பின்னால சண்டை போட்டுக்க வழியில்லாமப் போயிடுமே.'' லதா அந்த நேரத்திலும் ஜோக்கடித்தாள்.
 "இதுவும் நல்ல யோசனைதான்... இவள்தான் என் மருமகள். உடனே முகூர்த்த தேதியைப் பாருங்க... கல்யாணம் நடக்கட்டும். உன் புருஷனை உன் கூடவே மகராசியா கூட்டிக்கிட்டுப் போம்மா... ஆனா, ஒண்ணு பிள்ளையைப் பிரிஞ்சு என்னால ஒருநாள் கூட இருக்க முடியாது. அதனால பிள்ளைக்கு துணையா நானும் உங்க வீட்டுக்கு வந்துடுவேன்... தெரிஞ்சுக்கோ....''
 "அப்போ என் கதி?'' ரகுராமனின் தந்தை திடுக்கிட்டார்.
 "வெளியூருக்கா போறோம்? உள்ளூர்தானே. போன்ல பேசிக்கிட்டாப் போவுது.''
 "பெண் எங்க வீட்டிலேயே இருக்கப் போறதால நகை நட்டு, சீர்வரிசை, வரதட்சணை பற்றிய பேச்சுக்கு இடமில்லை. ஊரைக் கூட்டி ஆடம்பரமா மூன்று நாள் கல்யாணம் செய்யறதுல எங்களுக்கு இஷ்டம் இல்லை. அதனால பதிவுத் திருமணம்தான். அதன் பின்னர் சிம்பிளா ஒரு வரவேற்பு மட்டும்தான் வைப்போம்.'' லதாவின் தந்தை திருமணத்தை நடத்தும் விதம் பற்றிய பேச்சை எடுத்து விட்டார்.
 "நீங்க என்ன சொன்னாலும் சரி... என்ன செய்தாலும் சரி... நான் எல்லாவற்றுக்கும் சம்மதிக்கிறேன். இந்தக் கல்யாணம் நடந்தே தீரணும். அவ்வளவுதான்.'' என்று ரகுவின் தாய் பச்சைக்கொடி காட்ட கல்யாணம் பதிவுத் திருமண அலுவலகத்தில் இனிதாக நடந்தது.

*****
பாவம் ரகுராமனின் தாயின் ஆசைதான் நிறைவேறவில்லை. லதாவும், ரகுராமனும் முன்பே வெளிநாட்டு வேலைக்குப் போக முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் வெளிநாட்டு வேலை கிடைத்து, இருவரும் அமெரிக்காவிற்குப் பறந்தார்கள். தன் மருமகளை ஆட்டி வைக்க வழியில்லாமல் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டாளே என்று வருத்தம்தான். இருந்தாலும் பையனிடம் டிக்கெட் அனுப்பச் சொல்லி அமெரிக்கா சென்று அங்கு மருமகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைச் சமாதானம் செய்துகொண்டு காத்துக் கொண்டிருக்கிறாள்.
 ஆசை நிறைவேறுமா?

தீபம் எஸ். திருமலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT