ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பழக்கம்!
பல வகையான உணவுப் பொருட்களையெல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடிய இந்நாட்களில், ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளனவா? அவை பற்றிய விவரங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறதா?
பல வகையான உணவுப் பொருட்களையெல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடிய இந்நாட்களில், ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ள
னவா? அவை பற்றிய விவரங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறதா?
-ஆனந்த், பெங்களூர்.
உடலுக்கு நன்மை செய்யக் கூடிய இரு உணவுப் பொருட்களின் சேர்க்கையினால், குடலில் விஷத் தன்மையானது உருவாகிறது. அதற்குக் காரணம், அவற்றிலிலுள்ள குணங்களின் மாறுபாடேயாகும். உதாரணமாக, புளிப்பான பழங்களைச்
Advertisement
சாப்பிட்ட பிறகு, மேலே பால் அருந்தினால் அது விஷத் தன்மையை குடலில் உருவாக்குகிறது. மோருடன் வாழைப்பழமும், தேன், நெய், எண்ணெய், தண்ணீர் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டோ, மூன்றோ, அனைத்துமேயோ, ஒரே அளவில் சாப்பிட்டால் விஷத் தன்மையை அடைகிறது. நன்மை செய்யக் கூடிய உளுந்தும், முள்ளங்கியும் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். இவை போன்ற எண்ணற்ற உணவுச் சேர்க்கையை நாம் அறியாமலேயே சேர்த்து உண்ணுவதால் வைசூரி, உடல் வீக்கம், வெறி, பெரியகட்டிகள், குன்மம், எலும்புருக்கி நோய், உடல் ஒளி, வலிமை, நினைவாற்றல், அறிவுப்புலன், மனோபலம் ஆகியவற்றின் அழிவு, காய்ச்சல், இரத்தக் கசிவு,
எண்வகை பெரு நோய்களான வாதநோய், மூலம், குஷ்டம், நீரிழிவு, பவுத்திரம், நீர்ப்பீலிகை, க்ரஹணி, நீரடைப்பு ஆகியவையும் ஏற்படுகின்றன.
இவை போன்ற உணவுப் பொருட்களின் வரவால், உடலிலுள்ள தோஷங்களாகிய வாத பித்த கபங்கள் அவை இருக்கும் இடத்திலிருந்து நெகிழ்ந்து கிளறிவிடப்பட்டு, அவற்றை முற்றிலும் வெளிப்படுத்தாமல் உடலினுள்ளேயே தேக்கி வைக்கும் பொருட்களே பகைப் பொருட்களாகும். உடல் உட்புற தாதுக்களாகிய ரஸம் - ரத்தம் - மாம்ஸம் - மேதஸ் - எலும்பு - மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு எதிராக நின்று அவற்றிற்கு பெரும் இடையூறாக மாறுகின்றன.
அவை விட்டுச் செல்லும் நோய்களை நீக்குவதற்கு தக்க மருந்துகளைப் பயன்படுத்தி வாந்தி செய்வித்தல், பேதிக்கு மருந்து சாப்பிடுதல் போன்றவை விரைவில் செய்ய வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது அல்லது அது போன்ற பகைமைப் பொருட்களுக்கு எதிரிடையான பொருட்களால் நோயைத் தீர்க்க வேண்டும்.
"மனம் போன படி உணவு சாப்பிடுபவர்கள் பலர் இருக்கிறார்களே, அவர்களுக்கு எந்த உபாதையும் ஏற்படுவதில்லையே?' என்று நீங்கள் கேட்கலாம். பகைப் பொருட்களும் சிலருக்குத் தீமையை உண்டு பண்ணுவதில்லை.
உடற்பயிற்சி செய்பவர்கள், எண்ணெய்ப் பசையுண்டாக்கும் எண்ணெய்க்குளியல், நெய் சாப்பிடுவது, பசித்தீ நன்கு வேலை செய்கின்ற நிலையிலுள்ளவர்கள், இளைஞர்கள், நல்ல உடல் வலிமை பெற்றவர்கள் இவர்கள் விஷயத்தில் ஒவ்வாமை உணவுகள் தீங்கை விளைவிப்பதில்லை. இவற்றை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய அளவில் செயல்பாடுகள் அமைந்தால், நோய் எதிர்ப்பு சக்தியானது வளரக் கூடும்.
சிலரால் தீங்கிழைக்கும் இயல்புள்ள பொருட்களை எளிதில் விட முடியாது. அவற்றிலுள்ள கெடுதல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கச் செய்து, அதற்கு பதிலாக நன்மை பயக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது ஊடகங்களின் வாயிலாக நாம் அறியக் கூடிய உணவுக் கலப்படம், நச்சுத்தன்மை போன்ற விவரங்களை குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்வதன் மூலமாகவும் நாம் பல வகையான உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம்.
உணவின் மூலமாக மட்டுமல்லாமல், சில செயல் முறை குற்றங்களாலும் நாம் "அலர்ஜி' உபாதைகளைக் காண முடிகிறது . வெயிலில் அலைந்துவிட்டு வந்த பின் திடீரென்று குளிர்ந்த நீரில் நீராடுவது கண்களுக்கும் தோலுக்கும்
கெடுதல்களை விளைவிக்கும். நாவறட்சியைத் தோற்றுவிக்கும். அதே நிலையில் பாலைக் குடித்தால் ரத்தக்கசிவு உபாதையைத் தோற்றுவிக்கும். கடுமையான வேலையை முடித்தவுடன் ஏற்படும் களைப்பின் போது உணவருந்தினால் வாந்தி, குன்மம் என்ற உபாதைக்குக் காரணமாகும். அதிகம் பேசியதால் ஏற்படும் களைப்பு நீங்குவதற்கு முன் சாப்பிட்டால் குரலைக் கெடுக்கும். அதனால் உணவிலும் செயலிலும் கவனமாயிருப்பது அவசியம் என்கிறது ஆயுர்வேதம்.
(தொடரும்)