தினமணி கதிர்

இமயமலைச் சாரலிலே இரட்டைக் காப்பியங்கள்!

இங்கிலாந்து நாட்டு வைசிராய்கள் கல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்டு இந்தியாவை ஆண்ட நேரத்தில், அவர்கள் கோடைவாச ஸ்தலமாக சிம்லாவைத் தேர்ந்தேடுத்தனர்.

தி. இராசகோபாலன்


இங்கிலாந்து நாட்டு வைசிராய்கள் கல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்டு இந்தியாவை ஆண்ட நேரத்தில், அவர்கள் கோடைவாச ஸ்தலமாக சிம்லாவைத் தேர்ந்தேடுத்தனர். சிம்லாவில் இருந்து கொண்டே  ராஜ்ஜிய பரிபாலனம் செய்வதற்கு வசதியாக, அப்போது வைசிராயாக இருந்த லார்டு டப்ஃரின்
(1884-1888) தேக்கு மரங்களைக் கொண்டே, அங்கோர் குபேரபுரியை எழுப்பினார். அதற்கு "வைஸ்ராயின் அரண்மனை' (வைசிராய் பேலஸ்) எனப் பெயரும் சூட்டினார்.

சிம்லா நகருக்கு மின்சாரம் வருவதற்கு முன்பே அங்கிருந்த வைசிராய் அரண்மனைக்கு மின்சாரம் வந்து விட்டது. நிர்வாகம் தடையின்றி நடைபெறுவதற்காக இலண்டனிலிருந்து  நீராவி இயந்திரங்களைக் கொண்டு வந்து, மின்சக்தியைப் பயன்படுத்தினர். ஸ்காட்லாந்திலிருந்து வந்த கட்டடக் கலைஞர்களே, அந்தக் கனவு மாளிகையை வடிவமைத்தனர்.

இம்மாளிகையின்  சித்திர வேலைப்பாடுகளைக் கண்டு அதிசயித்த அப்போதைய நேபாள மன்னர், அம்மாளிகைக்கு எட்டு உலோகங்களால் ஆன ஓர் மணியைப் பரிசாகத் தந்து சென்றிருக்கிறார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு வைஸ்ராய் அரண்மனை, "ராஷ்டிரபதி நிவாஸ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. "கேபினட் செகரட்டரி' எனும் அந்தஸ்திலிருந்த உயர்நிலை அதிகாரிகள், அந்த உல்லாச புரியிலே சுகபோகமாக வாழ்ந்தனர். சர்வபள்ளி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக வந்தவுடன், அந்த உல்லாசபுரியை, ஓங்கி உலகளந்த ஆராய்ச்சிக்கு ஓர் அறிவாலயமாக ஆக்கத் திட்டமிட்டார். 

கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களைப் போல், இந்தியாவிலுள்ள அறிவுஜீவிகளுக்கு ஓர் ஆராய்ச்சிக்கூடமாக அந்த ராஷ்டிரபதி நிவாûஸ மாற்ற வேண்டுமென்பது டாக்டர் இராதாகிருஷ்ணனின் கனவு. எனவே, அதற்கு "இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்  ஸ்டெடிடீஸ்' என்கிற  பெயரைச் சூட்டினார். 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் நாள் நடைபெற்ற விழாவுக்குத் தாமே தலைமை வகித்து, தனது கனவு நிறுவனத்தைத்  தொடங்கி வைத்தனர்.

இன்றைக்கு கன்னியாகுமரியிலிருந்து நேபாளம் வரையிலுள்ள அறிவுப்பட்டறைகள், தங்கள் அறிவுமுனைகளைக் கூர்மைப்படுத்துவதற்கு உலைக்களமாக இயங்கி வருகின்றது அந்நிறுவனம். மொழியியல், சமூகவியல், மானுடவியல் ஆகிய துறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, உலகத்தரம் வாய்ந்த நூல்கள் அனைத்தும் அங்கு வாசம்  செய்கின்றன. டாக்டர் இராதாகிருஷ்ணன் உருவாக்கிய அந்த நிறுவனத்திற்கு மேலும் புதுரத்தம் பாய்ச்ச நினைத்த   மத்திய அரசு, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் கபில் கஃபூரை அந்நிறுவனத்தின் தலைவராக நியமித்தது.

கடந்த  ஐம்பதாண்டுகளில் அந்நிறுவனத்தில் தமிழ்மொழி பற்றியோ, தமிழிலக்கியங்கள் பற்றியோ யாரும் வாய் திறந்ததில்லை. ஆனால், இந்திய இதிகாசங்களையும் இந்திய தத்துவங்களையும் கற்றுத் துறைபோகிய பேராசிரியர் கபில் கஃபூர் பதவியேற்றவுடன், தமிழில் "இரட்டை காப்பியங்கள்' என்று அழைக்கப்படும் "சிலப்பதிகார'மும் "மணிமேகலை'யும் அந்நிறுனத்தில் ஓங்கி ஒலிப்பதற்குப் பச்சைக்கொடி காட்டினார்.  இரட்டைக் காப்பியமான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை பற்றி ஆராய்வதற்கு கடந்த மாதத்தில் இரண்டு நாள்கள் ஒதுக்கப்பட்டன. 

தமிழ்நாட்டிலிருந்து தஞ்சைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் டாக்டர் பழநிஅரங்கசாமி தலைமையில் ஐந்து பேராசிரியர்கள் புறப்படத் தயாராயினர். நிறுவனத் தலைவர் கபில் கஃபூர் தொடக்கவுரையில், இந்திய மண்ணின் காரமும்  சாரமும்  கொப்பளித்தது. ஆய்வரங்கின் மையப்பொருளை  முதன்மைப்படுத்திப் பேசிய பேராசிரியர் பழநி அரங்கசாமியின் நாவில் இரட்டைக்காப்பியங்கள் இரட்டைக் குயில்களாக உருவெடுத்து, ஆங்கில மொழியில்  தாளம் தப்பாது கூவின. 

இரண்டாவது அமர்வுக்குப் பேராசிரியர் ரமேஷ் சந்திரபிரதான்   தலைவராக இருந்தார்.  "சிலப்பதிகாரம் சித்திரிக்கும் பெண்ணியம்'  எனுந்தலைப்பில் கட்டுரை வடிவத்தில்  அமைந்த கருத்தாடலை, ஆங்கிலத்தில் நான் பேசி முடித்தேன். பெண்ணியம் உயர்குடிப்   பெண்களிடம் மட்டுமன்றி புறக்கணிக்கப்பட்ட வகுப்புப் பெண்களிடமும்  சுடர்விட்டுப் பிரகாசித்ததை எடுத்துகாட்டுக்களோடு எடுத்தியம்பினேன். 

மூன்றாவது அமர்வுக்குப் பேராசிரியர் டாம்பருதார் நாத் தலைமை வகித்தார். முதல் ஆய்வுக் கட்டுரையைப் பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் டாக்டர்  வி. சங்கீதா , "காப்பியங்களுக்குள்ளே இரண்டு மாணிக்கங்கள்' எனுந்தலைப்பில் ஆங்கிலோ - அமெரிக்க காப்பியங்களுடன் ஒப்பிட்டு, இரட்டை காப்பியங்களின் தனித்துவத்தை  அற்புதமாக, பிறமொழியாளர்களின் மனங்கொள்ளுமாறு பதிவு செய்தார். 

இரண்டாவது  அமர்வில் அடுத்து இடம்பெறவிருந்தது, டி.என்.இராமச்சந்திரன் தீட்டிய "மணிமேகலைக் காப்பியத்தின் தனித்தன்மைகள்' என்பதாகும். கடைசி  நேரத்தில் டாக்டர் டி.என். இராமச்சந்திரனின்   உடல்நிலை, ஒத்துழைக்காமையினால், டாக்டர்  ஆர்.  சுப்பராயலுவே அக்கட்டுரையை வழங்கினார்.  டி.என். இராமச்சந்திரன்அக்கட்டுரையில்  மணிமேகலையில் சுடர்விடும் ஆளும் தன்மைகளைப் பட்டுக்கத்தரித்தது போல் எடுத்து மொழிந்திருந்தார். 

மூன்றாவது அமர்வுக்குப் பேராசிரியர் ரேகா செளத்ரி தலைமை வகித்தார். பாரதி  பார்வையில் திமிர்ந்த ஞானச் செருக்குடைய பெண்மணி அவர். தஞ்சை சாஸ்த்திரா  பல்கலைக்கழகத்தில்  பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் இராசமாணிக்கம்   "சிலப்பதிகாரம் சுட்டும் கவிதை அறங்கள்' எனுந் தலைப்பில் நேர்த்தியானதொரு கட்டுரை வடித்தார். "தாமஸ் ரைமர்' வரையறுத்த இலக்கிய அறங்கள், சிலப்பதிகாரத்தில் வென்று நிற்பதைச் சிறப்புற எடுத்துரைத்தார். 

நான்காவது அமர்வுக்கு டாக்டர் மனிஷா செளத்திரி தலைமை வகித்தார். திறமையான புலமையுடைய பேராசிரியர் அவர்.  அவருடைய தலைமையில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் பதிவாளராகத் திகழ்ந்த டாக்டர் சுப்பராயலு, மணிமேகலையில் "இயற்கை இறந்த நிகழ்ச்சிகள்' எனும் தலைப்பில் தம் ஆய்வைக் கோடிட்டுக் காட்டினார். மனிதர்கள் தம் முயற்சியால் வெல்ல முடியாத இடங்களில், இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் ஆற்றலோடு எழுந்து தீர்த்து வைப்பதை நுண்மாண் நுழைபுலத்தோடு விளக்கியிருந்தார் ஆய்வாளர். 

அதே அமர்வில், இரண்டாவது கட்டுரையைப் பேராசிரியர், டாக்டர் பழநிஅரங்கசாமி,  "மணிமேகலையில் பன்முகத்தன்மை' எனுந் தலைப்பில் வழங்கியிருந்தார்.  தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஆழங்காற்பட்டவர் பேராசிரியர் என்பதால் மணிமேகலை ஒரு போராளியாகவும், ஞானப்பெண்ணாகவும் விளங்குவதை நடிப்பியலோடு எடுத்துக்காட்டி, அவையினரின் ஒட்டுமொத்த கவனத்தையும் அள்ளிச் சென்றார். 

ஐந்தாவது அமர்வுக்கு பேராசிரியர் முன்டோலினி நாராயணன் தலைமை வகித்தார். பேராசிரியர் பழநி அரங்கசாமி "திறனாய்வுப் பட்டறையில் சிலப்பதிகாரம்' எனுந்தலைப்பில், ஒப்பியல் நோக்கில், இளங்கோவடிகளின் படைப்புப் பரிமாணங்களை விளக்கிப்பேசினார். அவையினர் கண்டறியாதன கண்டதாக வியந்து பாராட்டினர்.

ஆறாவது அமர்வுக்கு  ஆசுதோஷ் பரத்வாஜ் தலைமை வகித்தார். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆய்வியல்  அறிஞர்கள், வைரக்கற்களை ஒன்றோடு  ஒன்று உராய்ந்து மெருகேற்றுவது போல், ஆய்வரங்கத்தை மெருகேற்றினர். தமிழறிஞர்கள் அங்கு விற்றதும் அதிகம்;  பெற்றதும் அதிகம். 
வியப்புக்குரிய  செய்தி என்னவென்றால், நிறுவனத்தலைவர் பேராசிரியர் கபில்  கஃபூர் ஏறத்தாழ  அனைத்து அமர்வுகளுக்கும் வருகை தந்து, ஒவ்வொரு விவாதத்தின் போதும் பங்கேற்றது, தமிழுக்குக் கிடைத்த பரிசாகும். 

இமயமலைச்சாரல் எலும்புக்கும் குளிரையூட்டி நடுங்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. அந்தக்குளிரிலும், சிலப்பதிகாரமும் - மணிமேகலையும் தந்த கதகதப்பு, எங்களை நிமிர்ந்து நிற்கச் செய்தது. அன்னைத்தமிழ் வடக்கே நடமாடுவதற்கு இதுவோர்  ஒத்திகையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT