நாடு கடந்து நடனம்!
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்று சும்மாவா சொன்னார்கள்?
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்று சும்மாவா சொன்னார்கள்? நடனங்களில் பல்வேறு வகைகள் உண்டு. வெளிநாட்டு இசையுடன் எல்லோரும் காண "ராக் ன் ரோல்' (Rock ‘n' Roll), ஸ்பானிஷ் பிளமிங்கோ (Spanish Flamenco), ரஷ்ய நாட்டின் கிராமப்புற நடனம். ஆனால் இன்றைய நிலையில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தரமான ஒரு நடன நிகழ்ச்சியாக மாற்றி அமைத்துள்ளார்கள் ஓர்க்ஹிடேயா (ர்ழ்ந்ட்ண்க்ங்ஹ) நடன குழுவினர். இந்த குழுவில் சுமார் 15 பேர்கள் உள்ளனர். சிறியவர் முதல் பெரியவர் வரை குழுவில் நடனம் ஆடுகிறார்கள். மூன்று வயது சிறிய குழந்தை முதல் 25 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்கள் வரை இந்த குழுவில் நடனம் ஆடுகிறார்கள். அதில் இருந்து சிலர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எல்லோருமே இந்த நடனக் குழுவில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். இவர்களின் தலைவியாக இருப்பவர் எலினா (Ms.Elena Pliukhina Choreographer - Ballet Trainer). தனது குழுவை பற்றி இவர் என்ன சொல்கிறார்:
""நான் இந்த குழுவை ஆரம்பித்தது 1999 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான். நடனம் எல்லாருக்கும் வரும். யாரும் நடனம் ஆடலாம். அவர்களுக்குச் சரியாக சொல்லிக் கொடுத்தால் சிறந்த நடனம் ஆடுபவராக வர முடியும். ஆனால் குழுவாக ஆடும்போது அவர்களது நிலையே வேறு. எல்லாரும் சரிசமமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டு, அவர்களது அசைவுகளை மற்றவர்களும் புரிந்து கொண்டு நடனம் ஆடும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், குழு நடனத்தின் தனித்தன்மையுடனும் இருக்கும். நாங்கள் ஆரம்பித்தது என்னவோ Rostov}on}Don என்ற இடத்தில்தான். அதன் பிறகு பல்வேறு ஊர்களில் எங்கள் குழு, நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பாராட்டுப் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் நாங்கள் புது தில்லியில் ஆரம்பித்து சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், விசாகப்பட்டினம், பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எங்களது குழு நடனம் ஆடி இருக்கிறது. இதில் சிறப்பென்னவென்றால், ஒவ்வோர் ஊரிலும் எங்களது நிகழ்ச்சி நடக்கும்போதும், எல்லோரும் எங்களை பாராட்டும்போதும் உண்மையிலேயே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நான் எதற்காக இந்த குழுவை ஆரம்பித்தேனோ அந்த இலக்கு நிறைவேறுகிறது என்று கூறலாம். நாங்கள் பழமையையும் புதுமையையும் ஒரு சேர இணைத்து நடனம் ஆடி வருகிறோம். அதே சமயம், குழு நடனத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் நாங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கிறோம்'' என்றார்.
இந்தக் குழுவில் உள்ள சிலர் சிறுவர்களாகவும் இருக்கிறார்கள்.அதில் உள்ள ஒருவர் பதினோரு வயதே நிரம்பிய ஓர் இளம் மாணவர். அவரது பெயர் Gorislav Krivsun, இவர் Russian & Ukraine Folk dancer. தனது அனுபவங்களை இவர் கூறுகிறார்:
""என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணம் மிக முக்கியமானது. காரணம், நடனத்தில் நான் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் எங்கள் குழு தலைவி என்னை தனது மகனைப்போல் அரவணைத்து ஒவ்வோர் அசைவையையும் சொல்லிக்கொடுத்து என்னை ஒரு நல்ல நடனக் கலைஞராக மாற்றி வருகிறார். எனக்கு இந்த நாட்டையும் மக்களையும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. மக்கள் எங்களைப் பாராட்டும்போது உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணம் எனக்குப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இவ்வளவு இளம் வயதில் நான் பார்த்ததையும் மக்களின் பாராட்டுதல்களையும் என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி ஆனந்தம் அடைவேன்'' என்கிறார்.
39 வயதான Olga Kuvanova ஒரு சிறந்த நடன மணி. இவர் பல காலம் நடனத்தில் அனுபவம் வாய்ந்தவர். அவர் சொல்கிறார்:
""இந்த குழுவில் நான் இணைந்தவுடன் எனக்கு அதிகமான தோழிகளும் தோழர்களும் சேர்ந்து விட்டனர். குழு நடனத்தில் உள்ள சிறப்பு என்னவென்றால், மற்றவர்களுக்கேற்றவாறு உங்கள் அசைவு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது பார்ப்பதற்கு ரம்மியமானதாக இருக்கும். இந்தியாவிற்கு போகப்போகிறேன் என்று உறுதியானவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் இந்தியா நடனத்திற்குப் புகழ் பெற்ற நாடு. இங்கு பல்வேறு நடனங்கள் உள்ளன. பரத நாட்டியத்தில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விதமான நடனம் இங்கு உண்டு. அப்படிப்பட்ட ஊர்களுக்கு நடனம் ஆடச் செல்கிறோம் என்றவுடன் சந்தோசப் படாமல் எப்படி இருக்க முடியும்? எப்படியாவது பரத நாட்டியத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு நகரத்தில் எங்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் நாங்கள் கிளம்பி விடுகிறோம். ஆனால் இந்தியாவில் நடனம் ஆடினேன் என்று எனது உறவினரிடம் சொல்லிக்கொள்வதில் நான் பெருமை கொள்வேன்'' முகத்தில் மகிழ்ச்சி பொங்க சொல்கிறார்.
இந்த குழுவின் நடனம் சென்னையில் இருநாட்கள் நடக்க இருக்கிறது. ஜூன் 3 ஆம் தேதியும், பின்னர் 10 ஆம் தேதியும் சென்னை ரஷியன் கல்ச்சுரல் சென்டர் (Russian Cultural Centre) அரங்கில் நடக்கிறது.