நட்சத்திரங்களுக்குத்தான் நஷ்டம்!
சினிமாத் துறையில் நுழைந்தாலே பிரபலமாகிவிடலாம் என்று இருக்கும் நிலையில், பிரபலமான சில நட்சத்திரங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுக்கிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள்.
சினிமாத் துறையில் நுழைந்தாலே பிரபலமாகிவிடலாம் என்று இருக்கும் நிலையில், பிரபலமான சில நட்சத்திரங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுக்கிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள். காரணங்கள் பல என்றாலும் இது ஆரோக்கியமான ஒன்றா? என்று கேட்டால், "இல்லை' என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியும். சினிமா உலகம் எப்பொழுதுமே வெற்றியின் பின்னால் ஓடக் கூடியது. காரணம், பணம் அதிகமாக புழங்கும் இடம். இந்தத் துறையில் எல்லாரும் அதிகமாக விரும்புவது பணத்தை மட்டும்தான். அதைச் சம்பாதிக்க எடுக்கும் முயற்சியில், ஒரு சதவிகிதம் கூட மற்ற விஷங்களில் கவனம் செலுத்துவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் பத்திரிகையில் தங்களது பெயர், புகைப்படம் வர, சிறு நட்சத்திரம் முதல் பெரிய நட்சத்திரம் வரை எல்லாரும் விரும்புவார்கள் என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார், நயன்தாரா, நகைச்சுவை நடிகர் கவுண்டமணி என பலரும் பத்திரிகையாளர்களைக் கண்டால் பேட்டி இல்லை என்கிறார்கள்; ஒதுங்குகிறார்கள். நடிகர்கள் நான்கு பேரில் மூன்று பேர் சில ஆண்டுகளுக்கு முன் வரை பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் தான்.
சூப்பர் ஸ்டாரின் முதல் பேட்டி அடியேனால் தான் எடுக்கப் பட்டது. அப்பொழுது அவர் மியூசிக் அகாதெமியின் பின்னால் உள்ள ஒரு சிறு அறையில் வசித்து வந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேட்டி என்று சொன்னவுடன், ""என்னையா?'' என்று இரண்டு முறை கேட்டபிறகு தன்னைப் பற்றி கூறி, என் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பின்னர் அவரை பலமுறை நான் பேட்டி கண்டிருக்கிறேன். அவரது துணைவியார் லதா ரஜினிகாந்த்தின் முதல் பேட்டி எடுத்தது நான் தான் என்று நினைக்கிறேன். அப்பொழுது அவர் எத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். தன் தோழிகள் மூவருடன் ஒரு சிறு குழு அமைத்து பாடிவந்தார். இது தெரிந்து நான் அவரையும் அவரது தோழிகளில் ஒருவரையும் சந்தித்து பேட்டி கண்டு பத்திரிகையில் வெளியிட்டேன். ஆக அவர்களிருவரையும் முதல் பேட்டி எடுத்த பத்திரிகையாளர் என்று என்னை கூறிக் கொள்ளலாம்.
அஜித் குமாரை பலமுறை பேட்டி எடுத்திருந்தாலும், இன்று அவரைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. முன்பெல்லாம் தனது படம் வெளியான பின் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின் திடீர் என்று அந்த சந்திப்பை தவிர்க்க ஆரம்பித்தார். அதன் பின் பேட்டியும் தருவதில்லை.
ஆரம்ப நாட்களில் நயன்தாரா முக்கியமான பத்திரிகையாளர்களை தனது பொது ஜன தொடர்பாளர் மூலம் அழைத்து பேட்டி அளித்துள்ளார். பின்னர் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளினால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஏன் நாம் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதனால் பத்திரிகையாளர்களைத் தவிர்க்கிறார் போலும்.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூட பத்திரிகையாளர்களை ஆரம்பத்தில் இருந்தே பார்ப்பதில்லை. வந்த புதிதில் ஒன்று அல்லது இரண்டு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கலாம். அதற்கு பிறகு இன்று வரை பலமுறை நாசூக்காக மறுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் தங்களது ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விட்டு, தாங்கள் உயர்ந்த பிறகு அவர்களை ஒதுக்குகின்றனர்.
ஆனால் இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தனது முதல் படம் வெளியான போதே இவர் பத்திரிகையாளர்களின் பேட்டி என்றால் தவிர்த்து வந்தார். காரணம் தெரியாத சில டிவி நிருபர்கள் இவரிடம் வர, "இன்று என் தொண்டை சரியில்லை' என்று சைகையில் சொல்ல, அவர்களும் ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால் அன்று மேடையில் சிறப்பாக பேசியதே இவர்தான். ஆக பத்திரிகையாளர்களை ஏன் இவர் தவிர்க்கிறார் என்றுதான் புரியவில்லை. சந்தோஷ் நாராயணன் கடந்த வாரம்தான் ஒரு பத்திரிகையாளரிடம் பேசியிருக்கிறார்.
இதில் இன்னோர் பிரச்னையும் இருக்கிறது. பேட்டி இல்லை என்று சொல்லும் நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தின் செய்திகள் அதிகமாக பத்திரிகைகளில் வெளியாகின்றன. இதற்கு காரணம், அதன் தயாரிப்பாளர்களின் முயற்சிதான்.
""ஏன் பேட்டி கொடுக்கத் தயங்குகிறீர்கள்?'' என்று சில கதாநாயகர்களிடமும், கதாநாயகிகளிடமும் கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொல்வார்கள். காரணங்கள் சரியா, தவறா என்று ஆராய்வதற்கு முன், இதே போன்று மற்ற கதாநாயகர்களும் இந்த நிலை எடுத்தால்?
விஜய் இதே வழியில் செல்ல நினைத்துள்ளதாக காதில் விழும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசியல் ஆர்வம் உள்ள அவர் அப்படி எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்று நம்பலாம்.
இன்றைய நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து விட்டார். எப்படி பத்திரிகைகளையோ அல்லது நிருபர்களையோ பார்க்காமல் அவரால் இருக்க முடியும்? இல்லை twitter மூலம் மட்டுமே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கப் போகிறாரா என்று தெரியவில்லை. அரசியலுக்கு வந்துள்ள கமல்ஹாசனை பொருத்த அளவில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர் ஆரம்பத்தில் இருந்தே பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்துள்ளார். பேட்டி கொடுக்கவும் அவர் என்றுமே தயங்கியதில்லை.
விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, த்ரிஷா என்ற பலரும் பேட்டி இல்லை என்று சொன்னால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. காரணம் இதை விட அரசியலில் பல்வேறு ருசிகரமான காட்சிகள் நடை பெற்று வருகின்றன. சினிமா என்றாலே கவர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் தமிழ் படங்களில் அன்று தொட்டு இன்றுவரை அது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் இதழ்களுக்கும் சரி, சின்னத்திரைகளுக்கும் சரி விஷயங்களுக்குப் பஞ்சமில்லை. ஆக நஷ்டம் இந்த நட்சத்திரங்களுக்கு தானே ஒழிய, பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் நல்லது.