முகப்பு
தினமணி கதிர்

நூல் அறிமுகம்: அண்ணாந்து பார்க்க வைக்கும் அண்ணாவின் அறிவுக் கொடை!

ஒரு படைப்பாளியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுத்து முழுத் தொகுப்புகளாகப் பல நூல்கள் தமிழில் வெளிவந்து இருக்கின்றன.  அதிலும் ஒரு படைப்பாளி கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல வடிவங்களில்

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:38 PM
பகிர்:

ஒரு படைப்பாளியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுத்து முழுத் தொகுப்புகளாகப் பல நூல்கள் தமிழில் வெளிவந்து இருக்கின்றன. அதிலும் ஒரு படைப்பாளி கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல வடிவங்களில் இலக்கிய உலகில் தன்னைப் பதித்துக் கொண்டிருந்தார் எனில் அவருடைய கவிதை நூல்கள் முழுத் தொகுப்பாகவும், நாவல்கள் அனைத்தும் இன்னொரு தொகுப்பாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

110 தொகுதிகள் வெளிவரக் கூடிய அளவுக்கு தனது எழுத்தாலும் பேச்சாலும் முத்திரை பதித்த அண்ணாவின் சிந்தனைகள் இப்போது முதன்முறையாக தமிழில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை தியாகராய நகரில் கோ.இளவழகன் நடத்தும் தமிழ்மண் பதிப்பகம், முதல் கட்டமாக அண்ணாவின் 64 தொகுதிகளை "அண்ணா அறிவுக்கொடை' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. இன்னும் 46 தொகுதிகளைக் கொண்டு வரும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

வெளியிடப்பட்டுள்ள இந்த 64 தொகுதிகளில் முதல் 20 தொகுதிகளில் அண்ணா "தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 21 முதல் 46 தொகுதிகள் வரை அண்ணா எழுதிய தலையங்கங்கள் - ஆசிரியருரைகள் - தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. சிறந்த மேடைப் பேச்சாளராக அறியப்பட்ட அண்ணாவின் மேடைப் பேச்சுகள் 47 முதல் 60 வரையிலுள்ள தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. அண்ணா சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 61 -64 வரையுள்ள தொகுதிகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

திராவிட நாடு இதழில் 8.5.1955 - இதழில் "தம்பிக்கு' என அண்ணா கடிதங்களை எழுதத் தொடங்கினார் என்றாலும், கடித வடிவில் கட்டுரைகளை அவர் 1938 முதற்கொண்டே "விடுதலை' , "திராவிடநாடு' இதழ்களில் எழுதியிருக்கிறார். 1962 - இன் பிற்பகுதியில் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது வெளிவராத "தம்பிக்கு கடிதங்கள்' 1964 - இல் "காஞ்சி' வார இதழில்வெளிவரத் தொடங்கின.

அண்ணா "தம்பிக்கு' எழுதிய கடிதங்களில் வெளியுலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. "திராவிடநாடு திராவிடர்க்கே' என்ற முழக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த அண்ணா, பிரிவினைத் தடைச் சட்டம் வந்த பின்பு தனது நிலையை மாற்றிக் கொண்டார். எனவே பிரிவினைத் தடைச்சட்டம் வருவதற்கு முன்பு அவர் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் பலநாட்டு விடுதலை வீரர்களையும், தலைவர்களையும் பற்றிய செய்திகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. திராவிட நாடு விடுதலைக் கொள்கையை ஆதரிக்கும் கருத்துகள் மிகுந்திருக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு எழுதப்பட்ட கடிதங்களில் பொருளாதாரச் சிந்தனைகள், சனநாயகக் கருத்துகள் அதிகம் இடம் பெற்று இருக்கின்றன.

அண்ணாவின் கட்சியைச் சேர்ந்தவர்களை "கண்ணீர்த் துளிகள்' என்று பெரியாரும், திராவிடக்கழகத்தினரும் அழைத்தனர். 9.7.1947 - இல் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொள்வதைக் கண்டித்து "திராவிட நாடு' இதழுக்குப் பலர் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்கள் வெளியிடப்பட்டபோது அண்ணா அதற்கு அளித்த தலைப்புதான் "கண்ணீர்த்துளிகள்'. பின்னர் அதுவே கட்சித் தொண்டர்களை விமர்சிக்கும் சொல்லாக ஆகிவிட்டிருக்கிறது.

இப்போது எல்லாராலும் நன்கறியப்பட்டதாக "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற தொடர் உள்ளது. இது 8.5.1966 - இல் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் முதன்முதலாக அண்ணா பயன்படுத்திய தொடராகும். இதுபோன்று, "எதையும் தாங்கும் இதயம்' என்ற தொடரும் "தூய்மை, வாய்மை, நேர்மை, எளிமை' என்ற தொடரும், "தெளிவு, துணிவு, கனிவு' என்ற தொடரும் அண்ணாவின் கடிதங்களில் பிறந்து வெளிவந்திருக்கின்றன.

அண்ணா எழுதிய 1146 ஆசிரியருரைகள் 26 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1948 ஏப்ரல் மாதம் 4 - ஆம் தேதி "திராவிடநாடு' இதழில் அண்ணா எழுதிய "காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்' என்ற ஆசிரியருரையும், 18.4.1948 -இல் எழுதிய "வெள்ளி முளைக்க எட்டு ஆண்டுகள்' ஆசிரியருரையும் தண்டனைக்குரியவையாக அறிவிக்கப்பட்டன. ரூ.3000 ஜாமீன் தொகையாகக் கட்ட வேண்டும் என்று அன்றைய அரசு அறிவித்தது. 1948 - இல் ரூ.3000 என்பது மிகப் பெரிய தொகை. அதற்காக நிதி திரட்டப்பட்ட போது ரூ.3000 -க்கும் அதிகமான தொகை நன்கொடையாகக் கிடைத்தது. எனினும் ஜாமீன் தொகை கட்ட வேண்டும் என்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டில் ஜாமீன் தொகை கட்ட வேண்டாம் என்று தீர்ப்பு வந்தது. நன்கொடையாளர்களுக்கு அவர்களுடைய பணம் "நன்றி'யுடன் திருப்பித் தரப்பட்டது. இவ்வாறான பல சுவையான தகவல்களை இத்தொகுதிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

1938 -ஆம் ஆண்டிலிருந்து அண்ணாவின் மேடைப் பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். 1943 - இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "நதிக்கரை நாகரிகங்கள்' பற்றி அவர் ஆற்றிய "ஆற்றோரம்' என்ற உரை குறிப்பிடத்தக்கது. இந்தத் தலைப்பு மேடையில் அமர்ந்த பிறகே அவருக்குத் தரப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. 1.10.1945 -இல் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு விழாவின்போது அண்ணா ஆற்றிய உரை "ஏ தாழ்ந்த தமிழகமே' என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. "தீ பரவட்டும்' என்ற நூலும் அண்ணாவின் சொற்பொழிவுகளின் தொகுப்பே. அண்ணாவின் சொற்பொழிவுகளைத் தொகுத்து 14 தொகுதிகளாக இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

29.4.1957 -அன்று அண்ணா நிகழ்த்திய சட்டமன்ற உரை முதல் 1968 -ஆம் ஆண்டு வரை தமிழகச் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் 61 முதல் 64 - வரை நான்கு தொகுதிகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

1967 - இல் கொண்டு வரப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் ஆகியவை பற்றி அண்ணா தமிழகச் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

இத்தொகுதிகளின் வாயிலாக 1938 -முதல் அண்ணாவின் மறைவு வரை கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தமிழக, இந்திய அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், அந்த மாற்றங்களின்போது அண்ணா எடுத்த அரசியல் நிலைப்பாடுகள், எதிரணியினரின் செயல்கள், பேச்சுகள் என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள இத்தொகுப்புகள் உதவுகின்றன.

தமிழக, தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத தனித்துவமிக்க ஆளுமையாக வலம் வந்து, திராவிட இயக்கத்தை அசைக்க முடியாத ஆலமரமாக வேரூன்றச் செய்த பெருமைக்குரியவர் அண்ணா. அவரது எழுத்தும், செயலும் காலத்தால் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் முயற்சியாக அமைந்திருக்கிறது "தமிழ்மண்' பதிப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கும் "அண்ணா அறிவுக்கொடை' என்கிற தொகுப்பு, முதல் 64 தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அடுத்த 46 தொகுதிகளைத் "தமிழ்மண்' பதிப்பகம் வெளிக்கொணரும் நாளை எதிர்பார்த்து "தமிழ்மண்' காத்திருக்கிறது.

அண்ணா அறிவுக் கொடை - 64 தொகுதிகள்
தொகுப்பாசிரியர்: செந்தலை ந.கவுதமன்
1 முதல் 20 தொகுதிகள் - மடல் இலக்கியம்.
21 முதல் 46 தொகுதிகள் - ஆசிரியவுரை
47 முதல் 60 தொகுதிகள் - மேடை இலக்கியம்
61 முதல் 64 தொகுதிகள் - சட்டமன்ற உரைகள்
64 தொகுதிகளின் மொத்த விலை ரூ.32, 500
31.12.2019-க்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு
சலுகை விலை ரூ.16.000.
தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17; தொடர்புக்கு: 044- 2433 9030.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.