வத்தலகுண்டு என்னும் சிற்றூரில் 4.10.1884 -இல் பிறந்து, 23.7.1925-இல் பாப்பாரப்பட்டி என்னும் கிராமத்தில் பூதவுடல் நீத்துப் புகழுடல் பெற்ற
தியாக சீலர் சுப்பிரமணிய சிவாவின் நினைவு நாள் ஜூலை, 23...
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு பலமுறை சிறையில் தவம் செய்தவர்களின் முன்னணி வரிசையைச் சார்ந்தவர் சுப்பிரமணிய சிவா.
நாட்டுப்பற்றுடன் மொழிப்பற்றும் கொண்டு உழைத்த நாடறிந்த மிகச் சிறந்த பேச்சாளர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண- சுவாமி விவேகானந்தர் இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அம்மகான்கள் குறித்து நூல்கள் பல எழுதிய நூலாசிரியர்.
"ஞானபானு' (1913), "பிரபஞ்ச மித்திரன்' (1916) "இந்திய தேசாந்திரி' (1919) ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி, அவற்றிற்குத் தாமே ஆசிரியராகத் தொழிற்பட்ட பத்திரிகையாளர்.
"தர்ம பரிபாலன சமாஜம்', "சுயராஜ்ய சங்கம்', "தேச பக்த சமாஜம்' ஆகியன போன்ற அமைப்புக்களின் நிறுவனர்.
திருவல்லிக்கேணி கடற்கரைக்குத் "திலகர் கட்டம்' என்பதாகப் பெயரிட்டுக் கூட்டங்கள் நடத்திய பெருமான்.
"திலகர்' என்றால், சுதந்திரம் என்று அகராதியில் பொறிக்கப்பட வேண்டும் என்று முழுக்கமிட்டவர். பாரத மாதாவுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்தவர் சுப்பிரமணிய சிவா. அதுவும் மட்டுமல்ல; பாரதியின் பெயரும், நினைவும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, பாரதி அமரரான பின் 11.9.1924 -இல் சென்னையில் முதன்முதலாகப் பாரதியின் நினைவுநாளைத் திருநாளாகக் கொண்டாடிய பெருமைக்குரியவரும் அவர்தான்.
சென்னை டிராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம், மதுரை ஹார்விமில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகியனவற்றில் பங்கு கொண்டு பெரும்பணி ஆற்றிய தொழிலாளர்களின் தோழர். தமிழகத்தில் தொழிற்சங்க முன்னோடிகளில் சுப்பிரமணிய சிவாவும் ஒருவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. சிவா நாட்டுக்குச் செய்த தியாகமோ மிகப் பெரிது. அதற்காக அவர் அடைந்த துன்பங்களோ ஏராளம்... ஏராளம்.
வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய எண்ணற்ற அரும்பணிகளைத் தன்னலம் கருதாமல் செய்த அந்தத் தியாகச் செம்மல் 1921-ஆம் ஆண்டில் கடுமையான நோய்க்கு ஆளானார். சிவாவுக்கு ஏற்பட்டிருந்த நோய்க்கான சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காகத் தேசபக்தர்கள் நிதி திரட்ட முன் வந்தனர்.
1921- இல் "தேசபக்தன்' ஆசிரியர் பொறுப்பில் இருந்த வ.வே.சு.ஐயர் நிதி திரட்டும் பணியைத் தம் பத்திரிகையிலே தொடங்கி வைத்தார். அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
"ஸ்ரீ சுப்பிரமணிய சிவா நிதி' என்ற தலைப்பெயரில் வ.வே.சு. ஐயரின்அறிக்கை அந்த நாளில் தேசபக்தர்கள் நடத்திய பத்திரிகைகளில் பிரசுரமானது.
"சகோதர சகோதரிகளே!
தமிழ்நாட்டில் ஜனங்களுக்கு சுதந்திர ஊக்கத்தை ஊட்டுதலே தமது வாழ்க்கைப் பயனாகக் கொண்டு உழைத்துவரும் ஸ்ரீமான் சுப்பிரமணிய சிவா அவர்களை அறியாதார் நமது தென்னாட்டில் ஒருவரேனும் இருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.
அவர் தேச கைங்கரியத்தை மேற்கொண்ட நாள் தொட்டு பட்டுவரும் துன்பத்திற்கோர் அளவில்லை. தேசத்தின் மீது தணியாத பக்தி கொண்டு உழைத்த குற்றத்திற்காக இவர் அரசாங்கத்தாரின் கோபத்திற்குப் பாத்திரமானார்.
இவர், குற்றஞ்சாட்டப்பட்டு அரசாங்கத்தாரால் சிறையிலடைக்கப்பட்டிருந்தபோது, இவரைச் சிறைச்சாலையினர் நடத்திய பாடுகளை நினைக்கும் ஒவ்வொரு இந்தியன் மனமும் உருகாமல் இராது.
இவர் சிறைவாசத்திற் பட்ட கஷ்டங்களின் பயனாக பலமான நோய் இவரைப் பிடித்துவிட்டது.
தீராத நோயினால் இவர் படுந் துன்பத்தை இங்கு எடுத்துக்காட்டுவது சாத்தியமல்ல.
இவரைப்போல் தீவிரமாகத் தேச கைங்கரியம் செய்து வருவோர் இந்நாட்டில் அரியர் என்பதை யாவரும் அறிந்திருக்கின்றார்கள். இவர் தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கே அர்ப்பணம் செய்திருக்கிறார்.
ஸ்ரீசிவம் அவர்கள் தீவிரமான தேசாபிமானமும் உடையவரெனினும், பெரும் செல்வம் பெற்றவரல்லர். இவர் இதுகாறும் தமது வாழ்நாட்களைப் பொருளீட்டலிற் செலவிடாமல், சுயநலமற்ற தீவிரமான தேச சேவையிலேயே கழித்து வந்தமையால், தற்பொழுது கொடிய நோய்க்குள்ளாகி வருந்திக் கொண்டிருக்கிறார்.
இச்சமயம், இவருக்குத் தக்க சிகிச்சை செய்து, இவர் சம்ரஷணத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு பொது ஜனங்களைச் சார்ந்து விட்டது.
தற்சமயம் சென்னை இராயப்பேட்டையில் இருக்கும் ஸ்ரீகௌரி ஆயுர்வேத வைத்திய மந்திரத்தின் தலைவரான டாக்டர் வி.ஆர்.சுந்தரம் அவர்கள் இவருக்குத் தக்க சிகிச்சை செய்து வருகிறார்.
தமிழ்நாட்டினரின் நலத்திற்காக இதுகாறும் உழைத்து வரும் இப்பெரியாருக்கு ஆபத்துற்ற காலத்தில் வேண்டிய உதவிகளைச் செய்து வர வேண்டியது தமிழ்நாட்டினரின் கடமையாகும், நமது நாட்டின் ஜனங்களுக்குச் சுதந்திர உணர்ச்சியை ஊட்டிய நன்றியை நாம் மறவாமல் தக்க உதவி செய்தாலன்றி நம் நாட்டின் கௌரவத்தை நாம் காப்பாற்ற முடியாது.
இச்சமயம் ஒவ்வோர் இந்தியரும் தங்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொகை கொடுத்து உதவ விரும்பும் அபிமானிகள் சென்னை தேசபக்தன் பத்திராதிபர் விலாசத்துக்குத் தொகை அனுப்பி வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அனுப்பப்படும் பணங்களின் விவரம் அவ்வப்போது பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்.'
வ.வே.சு. ஐயர் தம் அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தபடி, தொகை அனுப்பியவர்களின் விவரங்கள் "தேசபக்தன்' பத்திரிகையிலே அவ்வப்போது பிரசுரமாயின
வ.வே.சு.ஐயரும் தம் பங்களிப்பாக முதல் தவணையாக பத்து ரூபாய் வழங்கினார். இது தவிர, வசூலான தொகையிலிருந்து வைத்தியச் செலவுக்காக ரூ. 25-8-0. வழங்கினார்.
செட்டிநாட்டில், திரு. சொ. முருகப்பா அவர்களும் வ.வே.சு.ஐயரின் அறிக்கையைத் தம் பத்திரிகையில் வெளியிட்டதுடன், சிவாவின் வைத்தியச் செலவுக்காகப் பதினைந்து ரூபாய் அளித்தார்.
வ.வே.சு.ஐயரின் வழியைப் பின்பற்றி பாரதியும் தம் அளவில், சிவாவின் பெருமையை எடுத்துச் சொல்லி, அவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசர அவசியத்தை வற்புறுத்தித் தாம் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பேசினார், அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் உண்டியல் மூலம் பணம் வசூல் செய்யப்பட்டது.
சிவாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பாரதிவிடுத்த அன்பான வேண்டுகோள் 8.1.1921 -ஆம் தேதியிட்ட சுதேசமித்திரனில் பதிவாகி உள்ளது.
"வந்தே மாதரம் என்று சொல்வதே ராஜத் துரோகமெனக் கருதப்பட்ட நாள் முதல் ஸ்ரீ சுப்பிரமணிய சிவம் ஸ்ரீ பாரத மாதாவுக்கு இடைவிடாது பக்தி செய்து வந்தாலும், தமது உள்ளத்தை ஒளிக்காமல் தீரமாய்ப் பேசி வந்ததாலும் கஷ்டமடைந்திருக்கிறார்.
தேச சேவையில் ஈடுபட்டு, நொந்து மெலிந்திருக்கும் அவ்வீரருக்கு உதவி புரிவது ஸ்ரீபாரத மாதாவுக்குச் செய்த தொண்டாகும்.
இச்சமயத்தில், தேச சேவை செய்யப் பல தொண்டர்கள் வேண்டும். பழைய தொண்டர்களை நீங்கள் ஆதரிக்காவிடில், புதுத் தொண்டர்கள் எங்ஙனம் துணிந்து முன் வருவர்?
இன்னும் ஸ்ரீ சிவத்தின் கைங்கரியம் பாரத மாதாவுக்கு இன்றியமையாதது. அவர் தேறி மீண்டும் தமது கடமையைச் செய்வது உங்களைப் பொறுத்து நிற்கிறது. ஆகவே, சிவத்தை ஆதரித்து, மாதாவை அகமகிழச் செய்யத் தவறாதீர்கள்'
சுப்பிரமணிய சிவா என்கிற, தேச பக்தரான எழுத்தாளருக்குத் தமிழகம் அவருக்குத் தரவேண்டிய மரியாதையையும், கௌரவத்தையும் தராமல் விட்டதுதான் மிகப்பெரிய வேதனை. பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மூவரும் விடுதலை வேள்வியில் மூம்மூர்த்திகளாக தமிழகத்தில் வலம் வந்ததை இன்றைய தலைமுறையினருக்கு யார் எடுத்துச் சொல்வது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.