பெண்ணால் முடியாதது என்ன? இந்தக்கேள்விக்கு "முடியும்' என்பதுதான் பதிலாக இருக்கும். சாதனையாகட்டும்... மனித நேய உதவியாகட்டும். ஆணால் செய்ய முடிவதெல்லாம், பெண்ணாலும் செய்து காட்ட முடியும் என்று நிரூபித்திருப்பவர் சுபாஷிணி மிஸ்திரி. நாற்பத்தைந்தாண்டுகளாக உழைத்து "மனித நேய மருத்துவமனை'யைப் பொது மக்கள் நலனுக்காக உருவாக்கி சாதனை படைத்திருப்பவர் சுபாஷிணி. இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வங்காள மொழியில் திரைப்படம் ஒன்றும் உருவாகிறது. எந்தச் சூழ்நிலை சுபாஷிணியை சமூக நலப் பணியாளராக மாற்றியது? என்று சுபாஷிணியே சொல்கிறார்:
""அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் மருத்துவ வசதிகள் கிடையாது. மருத்துவமனைகளும் இல்லை. அக்கம்பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குப் போய் வர போக்குவரத்து வசதிகள் கிடையாது. இப்போது காலம் மாறிவிட்டாலும், மருத்துவக் கட்டணங்கள், பரிசோதனைக்கு கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மருத்துவச் செலவு செய்ய சாதாரண மக்களிடம் பணமில்லை. அப்படி செலவு செய்ய பணமில்லாததாலும் மருத்துவமனைகள் அருகில் இல்லாததாலும் எனது கணவரை நோய்க்குப் பறிகொடுத்தேன். இருபத்துமூன்று வயதில் விதவையானேன்.
அந்த சம்பவம் என்னைச் சுட்டது. எனக்கு ஏற்பட்ட இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று தீர்மானித்தேன். அதற்கு ஒரே வழி. கிராமத்தில் வசதியுள்ள மருத்துவமனையை நிறுவுவதுதான். ஏழை எளிய மக்கள்மருத்துவமனையைப் பயன்படுத்தும் விதத்தில் மிகக் குறைந்த கட்டணம் அமைய வேண்டும். அந்த லட்சியத்தில் செயல்பட ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு படிப்பில்லை. என்னை நம்பி நான்கு வாரிசுகள். அவர்களுக்கு ஒரு வாய் சோறு கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் எனது லட்சியம் நிறைவேறுமா என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். வருமானத்திற்காக எந்த வேலையையும் செய்யத் தயாரானேன். மூத்த இரண்டு குழந்தைகளை அநாதை விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தேன். சாலை ஓரத்தில் காய்கறி விற்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து சுமார் முப்பத்து மூன்று சென்ட்மனை ஒன்றை வாங்கினேன். 1993 -இல் அங்கே சின்ன தற்காலிக மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினேன். கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உதவினார்கள்.
கொல்கத்தா நகருக்கு அருகில் இருக்கும் எனது கிராமமான ஹன்ஸ்புக்காரில் ஒரு மருத்துவமனை அமைந்ததே பெரிய சாதனைதான். 1996-இல் மருத்துவமனைக்கான கட்டடம் உருவானது. அதற்கு "மனிதநேய மருத்துவமனை' என்று பெயரிட்டேன். எனது கடைசி மகன் அஜய் படித்து அதிர்ஷ்டவசமாக டாக்டரானான். அவனது சேவையும் எனது மருத்துவ மனைக்குக் கிடைத்தது வருகிறது. இப்போது பன்னிரண்டு டாக்டர்கள் மருத்துவமனையில் சேவை புரிகிறார்கள். இங்கு பதிவுக் கட்டணம் பத்து ரூபாய் மட்டுமே. முழுவதும் இலவசச் சிகிச்சை. சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணம் அதிகபட்சம் ஐந்தாயிரம். இதேபோன்று சுந்தர்பன் பகுதியிலும் ஒரு மருத்துவமனையைத் தொடங்கியிருக்கிறேன்'' என்று சொல்லும் சுபாஷிணிக்கு எழுபத்திரண்டு வயதாகிறது. இவரது சமூக சேவையைப் பாராட்டி சென்ற ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.