கூந்தலைத் துறந்த சிறுமி!
கிரிக்கெட்டில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது அழகான கூந்தலை தியாகம் செய்தார் இளம் சிறுமி ஷஃபாலி வர்மா.
கிரிக்கெட்டில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது அழகான கூந்தலை தியாகம் செய்தார் இளம் சிறுமி ஷஃபாலி வர்மா.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் ஆட்டமாக உள்ள கிரிக்கெட். இதில் ஆடவர் அணிகள் மோதும் ஆட்டங்களுக்கு பெருத்த வரவேற்பு உள்ளது. ஆடவரைப் போலவே மகளிரும் தற்போது கிரிக்கெட்டில் கொடி நாட்டி வருகின்றனர்.
இந்திய மகளிர் அணி 1976-இல் முதல் டெஸ்ட் ஆட்டத்திலும், 1978 உலகக் கோப்பையில் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றது.
2 முறை உலகக் கோப்பை இறுதி வரை சென்றது. டி20 உலகக் கோப்பையிலும் 3 முறை அரையிறுதி வரை சென்றது.
டயானா எடுல்ஜி, சாந்தா ரங்கசாமி , பூர்ணிமா ராவ், மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கெளர், ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜுலன் கோஸ்வாமி, நீது டேவிட், ஷுபாங்கி குல்கர்னி, அன்ஜும் சோப்ரா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, உள்ளிட்டோர் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பிரபலமான நட்சத்திரங்கள் ஆவர்.
மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் டி20 ஆட்டத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே நீடித்து வருகிறார். இதனால் டி20 இந்திய அணிக்கு புதிய வீராங்கனை தேவைப்பட்ட நிலையில், இளம் சிறுமி ஷஃபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஹரியாணா மாநிலத்தின் ரோதக் நகரில் கடந்த 28.1.2004-இல் பிறந்தார் ஷஃபாலி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூரத்தில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 15 வயதில் அறிமுகமானார் அவர்.
கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அங்கு பெண்கள் பயிற்சி பெற ஒரு கிரிக்கெட் அகாதெமி கூட இல்லாத நிலையில், சிறுவர்களுக்கு மட்டுமே பயிற்சி அகாதெமி இயங்கி வந்தது. இதனால் சிறுவன் போல் தோற்றம் அடைவதற்காக ஷஃபாலி தனது அழகான கூந்தலை இழந்தார். பின்னர் சிறுவன் போல் உருமாறி அங்கு ஏனைய சிறுவர்களுடன் கிரிக்கெட்டில் தீவிர பயிற்சி பெற்றார்.
நகை வியாபாரியான ஷஃபாலியின் தந்தை சஞ்சீவ் வர்மா கூறியதாவது:
""ஹரியாணா மாநிலத்தில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு போதிய வாய்ப்புகள் இல்லை. ஷஃபாலியை சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியமாகும். தொடக்க காலங்களில் மிகவும் பிரச்னைகள் எழுந்தன. பல அகாதெமிகளுக்கு எனது பெண்ணை அழைத்துச் சென்றால் அவர்கள் சேர்க்க மறுத்தனர்.
இதனால் ஷஃபாலியின் கூந்தலை சிறுவன் போல் வெட்ட முடிவு செய்தேன். மேலும் பெயரையும் சிறுவன் போல் மாற்றி அகாதெமியில் சேர்த்தோம். இதனால் ஏனைய சிறுவர்களுடன் நன்றாகப் பயிற்சி பெற்ற ஷஃபாலி தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். கடவுளுக்கு எங்கள் மேல் கருணை உள்ளது. இந்திய அணியில் ஷஃபாலி நீண்ட நாள் இடம் பெறுவார் என நம்புகிறேன்'' என்றார்.
கடந்த 2018-இல் மகளிர் சேலஞ்சர் டி20 போட்டியில் வெலாசிட்டி அணியில் இடம் பெற்று ஆடினார். அதில் அவரது சிறந்த ஆட்டத்தை அடுத்து தேசிய அணியில் இடம் பெற்றார்.
கடந்த 2018-19-இல் சீசனில் சீனியர் டி20 ஆட்டத்தில் ஹரியாணா சார்பில் ஆடிய அவர் 56 பந்துகளில் 128 ரன்கள் உள்பட 186 ரன்களை குவித்தார்.
தென்னாப்பிரிக்க தொடரில் முதல் ஆட்டத்தில் டக் அவுட்டான ஷஃபாலி, இரண்டாவது ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 46 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
தனது கிரிக்கெட் பயணம் குறித்து ஷஃபாலி கூறியதாவது:
""நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய போது, பெண்களுக்கு அதில் எதிர்காலமில்லை என விமர்சித்தனர். ஆனால் எனது தந்தை இதில் இருந்து பாதுகாத்து, இந்த நிலைக்கு உயர உதவினார். கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கூறினார். கடந்த 2013-இல் ரஞ்சி கோப்பைக்காக ஜாம்பவான் டெண்டுல்கர் ரோதக் வந்தபோது தான் எனது உள்ளத்தில் கிரிக்கெட் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அவரது ஆட்டத்தைக் காண பலர் வந்தது போல், எனது ஆட்டத்தைக் காண வருவார்களா என
தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் கடினமாக உழைத்தால் எதுவும் சாத்தியம் என உற்சாகமூட்டினார். இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். மேலும் ஒருநாள் அணியிலும் இடம் பெறுவேன்'' என நம்பிக்கையுடன் கூறினார் ஷஃபாலி.
வெலாசிட்டி அணியில் அற்புதமான ஆட்டத்தைப் பார்த்த இங்கிலாந்தின் உலகக் கோப்பை வென்ற கேப்டன் டேனியல் வயாட் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஷஃபாலியை மனதாரப் பாராட்டியுள்ளார்.