விளையாட்டுத்துறைக்கு ஒரு பங்களிப்பு!
திருமணத்திற்கு முன் மூன்று படங்களில் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்த தீபிகா படுகோன், தற்போது "83' என்ற தலைப்பில் உருவாகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வரலாற்று படத்தில் ரன்வ
திருமணத்திற்கு முன் மூன்று படங்களில் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்த தீபிகா படுகோன், தற்போது "83' என்ற தலைப்பில் உருவாகும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வரலாற்று படத்தில் ரன்வீர் சிங்குடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். கபில் தேவாக ரன்வீர் சிங்கும், அவரது மனைவி ரோமி தேவியாக தீபிகா படுகோனும் நடிக்கின்றனர்.
ஏற்கெனவே டெல்லியை சேர்ந்த அமிலவீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மேக்னா குல்சார் இயக்கும் "சப்பக்' என்ற படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோன், இவ்விருபடங்களில் நடிப்பதோடு, இணைத் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் ஏற்றுள்ளார். இந்தப் படங்களில் நடிப்பது பற்றிய தன் அனுபவங்களை தீபிகா இங்கு கூறுகிறார்:
""இந்த இரு படங்களிலும் எனக்குக் கிடைத்திருப்பது வித்தியாசமான பாத்திரங்களாகும். இவை எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பாகும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே அமிலவீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் சம்பவ கதையில் நடிக்கிறேன். இவரைப் போலவே பல பெண்கள் தைரியமாகவும், உறுதியோடும் செயல்பட்ட சம்பவங்கள் இருந்தாலும், இவரது கதை மக்கள் மனதில் பதியும் வகையில் அமைந்திருப்பது பிடித்திருந்தது.
அதே போன்று கபீர்கான் இயக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வரலாற்றை "83' என்ற தலைப்பில் படமாக்கப் போவதாக கூறியபோது, என் பெற்றோர் ஞாபகம்தான் நினைவுக்கு வந்தது. கபில்தேவ் மற்றும் அவரது மனைவி ரோமி தேவியுடன் என் பெற்றோருக்குப் பழக்கம் உண்டு. என் திருமண வரவேற்பு விழாவின்போது வந்திருந்தனர். என் தந்தை பிரகாஷ் படுகோன் டென்னிஸ் விளையாட்டு வீரர் என்பதோடு என் தாத்தாவும் விளையாட்டு வீரர் என்பதால், விளையாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த நான், இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் வரலாற்றில் நடிப்பதைப் பெருமையாக கருதுகிறேன்.
பொதுவாக இன்றைய விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளில் தங்கள் மனைவி அல்லது காதலியை அழைத்துச் செல்லக் கூடாது என்று ஒரு விதிமுறை இருப்பதாக கேள்விப்பட்டேன். மைதானத்தில் அவர்களது கவனம் சிதறுவதாக காரணம் கூறுகின்றனர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய தந்தை விளையாடப் போகும் போதெல்லாம் என்னுடைய அம்மா உஜலா படுகோனும் உடன் செல்வதுண்டு. என் அம்மா, அப்பாவுக்கு உதவியாக இருந்ததோடு, குடும்பத்தையும் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்.
கபில்தேவ் மனைவி ரோமி தேவியாக நடிப்பதால், அவரைப் பற்றி தெரிந்து கொள்ள நான் அவருடன் தங்க விருப்பம் தெரிவித்துள்ளேன். அவரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால் தான் அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாக செய்ய முடியும்.
ரன்வீரும் நானும் ஏற்கெனவே மூன்று வெற்றிப் படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், தற்போது "83' படத்தில் நடிப்பது வித்தியாசமான பாத்திரங்களாகும். தனிப்பட்ட முறையில் நாங்கள் வலிமையாகவும், வித்தியாசமான பர்சனாலிட்டியாகவும் இருந்தாலும் இருவரும் சேரும்போது வெளிப்படுத்தும் திறமை அழகாகவே இருக்கும். உண்மையில் இது எங்களுக்கு ஒரு சவாலான விஷயம்தான். நான் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால் விளையாட்டைப் பற்றி அடிக்கடி நாங்கள் பேசுவதுண்டு. திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன் ரன்வீருக்கு விளையாட்டில் இருந்த தொடர்பு விட்டுவிட்டதால், இப்போது இப்படத்திற்காக மீண்டும் பயிற்சிப் பெற்று சிறப்பாக கிரிக்கெட் ஆட தொடங்கியுள்ளார்.
நான் நடிக்க வருவதற்கு முன் விளையாட்டு என்பது என் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்ததால், நடிப்பதோடு இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்க விரும்புகிறேன். விளையாட்டு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அர்ப்பணிப்பு, நன்னடத்தை, முடிவெடுக்கும் தன்மை, பொறுமை, வெற்றி, தோல்வியை எப்படி எதிர்கொள்வது என்பன போன்றவற்றைத் தீர்மானிக்கவும் உதவுகிறது. இதை என்னுடைய அனுபவத்தில் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் உணர்ந்துள்ளேன். விளையாட்டுத் துறைக்கு "83' படம் எங்கள் பங்களிப்பாகவே இருக்கும்'' என்று கூறினார் தீபிகா படுகோன்.