மனம் உள்ளவர்கள் உதவ வேண்டும்!
கரோனா வைரஸ் தாக்குதலால் உருவாகியுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு யார் உதவுவார்கள்?
கரோனா வைரஸ் தாக்குதலால் உருவாகியுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு யார் உதவுவார்கள்? அவற்றின் பசியை யார் தணிப்பார்கள்? இந்த பிராணிகளுக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து அதற்காகவே உருவாகிய ஓர் அமைப்பு தான் புளூ கிராஸ்.
இந்த அமைப்பைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் டாக்டர்.சின்னி கிருஷ்ணாவும், அவரது மனைவி நந்திதா கிருஷ்ணாவும். சின்னி கிருஷ்ணாவின் தந்தைதான் இந்த "புளூ க்ராஸ்' அமைப்பைத் தொடங்கியவர்.
இந்த அமைப்பு ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்சம் 1000 வீட்டுப் பிராணிகளுக்கு உணவளித்து வருகிறது.
நந்திதா கிருஷ்ணா ஓர் எழுத்தாளர், சுற்று சூழல் ஆய்வாளர். இந்த "புளூ க்ராஸ்' அமைப்பின் ஆளும் குழுவின் ஓர் உறுப்பினர். சி.பி.ராமஸ்வாமி ஐய்யர் ஃபவுண்டேஷன் இயக்குநர். இவர் "புளூ க்ராஸ்' அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறார். அவரிடம் கரோனாவின் தாக்கம் இந்த அமைப்பை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்று கேட்டோம்:
""கரோனா நோயினால் உலகமே வெறிச்சோடிக் கிடக்கிறது. நாமெல்லாம் வீட்டில் இருந்து கொண்டு உணவு சமைத்து சாப்பிடுகிறோம். நம்மையே நம்பி இருக்கும் தெரு நாய்கள், பூனைகள் போன்றவற்றுக்கு யார் உணவு தருவார்கள்? எங்கள் அமைப்பான புளூ கிராஸ் பாதிக்கப்பட்ட பிராணிகளுக்கு உதவுகிற அமைப்பாக பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக ஒரு மாடு கிணற்றில் விழுந்து விட்டால், எங்கள் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தால், நாங்கள் உடனே வந்து அந்த மாட்டை கிணற்றிலிருந்து பாதுகாப்பாக தூக்கி, அவற்றை நாங்கள் முடிந்தவரை பராமரித்து வருகிறோம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் ஒரு நாளைக்கு ஒரு பிராணியாவது இந்த மாதிரி ஏதாவது ஒரு இக்கட்டிலிருக்கும். அந்த செய்தி கேள்விப்பட்டவுடன் நாங்கள் அந்த பிராணியை உடனடியாக காப்பாற்றி எங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து பராமரிக்கிறோம்.
அப்படி எங்களிடம் உள்ள 800 நாய்கள், 100 மாடுகள், 70 பூனைகள், 30 பன்றிகள், மற்றும் முயல்கள் சுமார் 150, இதை தவிர பறவைகள் இருக்கின்றன. இவற்றை நாங்கள் பராமரிக்கிறோம்.
எங்களிடம் உள்ள தன்னார்வலர்கள் சுமார் 150 பேர்இருக்கிறார்கள். அவர்கள் சென்னையில் உள்ள ஆதரவற்ற நாய்களுக்கு நாங்கள் சமைத்துத் தரும் உணவைக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். கிரீன் பார்க் ஹோட்டல் தலைமை நிர்வாகி சுதீப் சென்குப்தா, இந்த நாய்களுக்கான உணவினை வழங்க முன் வந்தார். அவரது ஓட்டலிலேயே அரிசி, பருப்பு, நெய், சோயா, மஞ்சள் ஆகியவற்றைக் கலந்து இந்த நாய்களுக்கான உணவைத் தயாரித்து எங்களுக்கு அளிக்க, அதை நாங்கள் எங்கள் சொந்த கார்களையும், எங்கள் சொந்த ஓட்டுநர்களையும் கொண்டு நகரின் சில பகுதிகளுக்கு எடுத்து செல்கிறோம்.
அதன் மூலம் நகரத்தின் சில பகுதிகளில் உள்ள நாய்களுக்கு உணவளித்து வருகிறோம்.
ஒரு கார் ஆற்காடு ரோட்டில் உள்ள நாய்கள் மற்றும் பல ஜீவராசிகளுக்கு இந்த உணவினை வழங்குகிறது. அங்குள்ள எங்கள் தன்னார்வத் தொண்டர்களிடம் இந்த உணவினை கொடுத்தால் போதும். அவர்கள் நாய்களின் பசியாற்றுவார்கள். அது போன்று ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கும் பீச், ராயபுரம், வியாசர்பாடி ஆகியவற்றுக்கும் எங்கள் கார்கள் தினமும் வாயில்லா ஜீவராசிகளுக்காக உணவை சுமந்து செல்கின்றன.
இந்த மாதிரி நாங்கள் கொண்டு போகும் இந்த உணவை சுமார் 20,000 நாய்கள் சாப்பிடுகின்றன. எங்களிடம் உள்ள பிராணிகளுக்கும் உணவு கொடுக்கிறோம்.
எங்களிடம் அதிகமாகப் பணம் இருந்தால், நாங்கள் இன்னும் பல ஆயிரம் நாய்கள் மற்றும் பிராணிகளுக்கும் உணவளிப்போம். மனம் உள்ளவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும்'' என்கிறார் நந்திதா கிருஷ்ணா.