எனக்கு வயது 55. சுமார் 5 வருடங்களாக தும்மல், கொட்டாவி மற்றும் பெருமூச்சுவிடும்போது கடுமையான நெஞ்சுவலி ஏற்படுகிறது. படுக்கும்போது நேராக படுத்துவிட்டு ஒருக்களித்து படுக்கத் திரும்பும்போது, பின்புற முதுகு மற்றும் நெஞ்சு பகுதியிலும் அதிக வலி வருகிறது. சிடி ஸ்கேனில் நுரையீரல் அழற்சி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பல மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குறையவில்லை. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
கே.சந்தோஷ், குலசேகரம்.
தாங்கள் அனுப்பியுள்ள சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டில் நுரையீரல் பகுதியில் நிறையப் பாதிப்புகள் உள்ளதைக் காண முடிகிறது. இதுபோன்ற நுரையீரல் உபாதைக்கான சிகிச்சைமுறை, மற்ற மருத்துவச் சிகிச்சை முறைகளிலிருந்து முற்றிலும் ஆயுர்வேதத்தில் மாறுபடுகிறது.
தேகராஜ தைலம் எனும் மூலிகைத் தைலத்தை மார்பு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வெதுவெதுப்பாகத் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, இதயப் பகுதியைத் தவிர்த்து மற்ற தைலம் தடவிய பகுதிகளில் வியர்வையை நன்கு வெளிப்படுத்தும் வகையில் நீராவிக் குளியல் சிகிச்சையைச் செய்வதன் வாயிலாக, நுரையீரல் பகுதியில் தங்கியுள்ள தேவையற்ற அழுக்குப் பகுதிகள் உருகிவிடும். அதை வெளிக்கொணர்வதற்காக, வாந்தியை ஏற்படுத்தும் மூலிகைக் கஷாயங்களும், பேதியை ஏற்படுத்தும் கஷாயங்களும் தரப்பட்டு, நரையீரல் நன்கு சுத்தமாகும் வகையில் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் அங்குள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவலையிருப்பதால், பாலுடனோ, மாமிச சூப்புடனோ, பழ ரசங்களுடனோ, நெய்யும் சாதம் வடித்த கஞ்சியும் சேர்த்து வாந்தியை ஏற்படுத்தும் மறுக்காரைப் பழம் கலந்து கொடுத்து சுகமான விதத்தில் வாந்தியை ஏற்படுத்துவது வழக்கத்திலிருந்தது.
அதுபோலவே சர்க்கரை தேன், நெய், பால், நெல் பொரிக்கஞ்சி, மாமிச சூப்பு ஆகியவற்றில் ஒன்றிரண்டுடன் கலக்கப்பட்ட உலர் திராட்சை, சிவதை வேர், சரக்கொன்றைப்பட்டைத் தூள் ஆகியவற்றினால் நன்கு மலம் கழியும்படி பேதியை ஏற்படுத்தி, உடல் உட்புறக் குழாய்களைச் சுத்தம் செய்வதும் நடப்பிலிருந்தது.
அதன் பிறகு, உடலைப் புஷ்டிப்படுத்தவும், பசியைத் தூண்டிவிடும் விதத்திலும் உணவும், பானமும் மனதிற்குக் களிப்பூட்டுபவையும், வாயுவைக் கட்டுப்படுத்துவதாகவும், எளிதில் செரிக்கக் கூடியதுமான, ஓராண்டுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட கார அரிசி, அறுபதாம் குறுவை, கோதுமை, பார்லி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஆட்டின் பால், நெய், ஆட்டுக்கால் சூப்பு போன்றவை ஒன்றாக வேக வைக்கப்பட்டு உணவாகத் தரப்படும். பானகமாகத் தயாரிக்கப்பட்டு, குடிக்கவும் பயன்படுத்துவதன் மூலமாகவும் நுரையீரல் நன்கு வலுப்படும். முள்ளங்கியும் கொள்ளும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கஞ்சியில், நெய் தாளித்துச் சேர்த்து, இந்துப்புடன் காலையில் சாப்பிடுவது, நுரையீரல் உபாதைகளைக் குறைக்கும் ஒரு யுக்தியாகும்.
திப்பிலி, பார்லி, கொள்ளு, சுக்கு, மாதுளம் பழத்தின் மணிகள், நெல்லிக்காய், நெய், ஆட்டின் மாமிசச் சூப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வேக வைத்து, அதைக் குடிப்பதனால், மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தோள்பட்டை எலும்பு, தலை, குரல்வளைப் பகுதிகளில் ஏற்படும் வலி போன்றவை நன்றாகக் குணமாகிவிடும்.
தனியாவும், சுக்கும் வகைக்கு பத்து கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக அருந்துவது நுரையீரலுக்கு வலு சேர்க்கும் வழியாகும்.
தாளீசபத்ராதி எனும் சூரண மருந்தை தேன், நெய் சேர்த்துச் சாப்பிட, இருமல், மூச்சிரைப்பு, ருசியின்மை, குமட்டல், இதயவலி, பக்கசூலை நீங்கும். மேலும் ரத்தசோகை, காய்ச்சல், பேதி குணமாகும். குடலில் அசைவின்றி முடங்கிக் கிடக்கும் வாயுவை தன் பாதையில் செல்லும் வழியைத் திறந்துவிடும். இந்த சூரணத்துடன் இந்துகாந்தம் எனும் நெய் மருந்தும் கலந்து சாப்பிட மருந்தின் வீரியமானது, மேலும் கூடி நல்ல பலன்களை விரைவில் ஏற்படுத்தித் தரும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.