உதவிக்கு வரும் தானியங்கி கார்கள்!
கரோனா வைரஸ் தாக்குதலினால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு உலகின் பல நாடுகள் தடை விதித்துள்ளன. வீட்டில் தனித்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
கரோனா வைரஸ் தாக்குதலினால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு உலகின் பல நாடுகள் தடை விதித்துள்ளன. வீட்டில் தனித்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விலகி இருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள்.
"தனித்திருக்கலாம்... பசித்திருக்க முடியாதே' என்று மக்கள், தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடைவீதிகளில் குவிவதும், எதற்குத் தனித்திருக்கச் சொன்னார்களோ... அந்த அடிப்படை நோக்கத்துக்கே முரணாக நடந்து கொள்வதும் பல நேரங்களில் சாதாரணமாகிவிடுகிறது.
வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள் எல்லாவற்றையும் வாங்க மக்கள் வெளியே சென்று, கரோனா வைரஸூக்குப் பல சமயங்களில் உதவி வருகிறார்கள்.
இப்படி ஒரு நிலை வராமலிருக்க, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா ஆகிய மாகாணங்களில் வீடு தேடி கார்கள் வந்து தேவையான மளிகைப் பொருள்கள், உணவுகள், மருந்துகளைத் தருகின்றன.
அந்தக் கார்களை இயக்க ஓட்டுநர்கள் இல்லை. தானியங்கி கார்கள்தாம் அந்த பணிகளைச் செய்கின்றன.
கரோனா வைரஸ் உலகில் பிறப்பதற்கு முன்பாகவே, அமெரிக்காவின் சாலைகளில் ஓட்டுநரில்லா கார்களை ஓடச் செய்து பலமுறை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அது இந்த கரோனா காலத்தில் பயன்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஓட்டுநரில்லா காரான குரீஸ் இதற்காக சாலையில் இயங்குகிறது. சான்ஃபிரான்சிஸ்கோவில் வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவும்விதமாக இந்த தானியங்கி கார்கள் தேவையான பொருள்களை அவர்களுடைய இருப்பிடங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. என்றாலும் முகக் கவசம், கையுறைகள் அணிந்த ஒருவர் காரில் இருந்து பொருள்களை எடுத்துத் தருகிறார்.
அதேபோன்று, டயோட்டோ நிறுவனத்தின் கார்கள் கலிஃபோர்னியா மாகாணத்தில் கரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அவசரகால உள்ளூர் மையங்களுக்குத் தேவையான பொருள்களைத் தருகின்றன.
சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் நீரோ கார்கள், சாக்ரமென்ட்டோவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா மருத்துவமனைகளுக்கும், சான் மெட்டோவில் உள்ள மருத்துவமனைகளுக்கும் மருந்துகளைக் கொடுக்கின்றன.
இந்த மூன்றுநிறுவனங்களும் தேவையான பொருள்களை எடுத்துச் சென்று கொடுப்பதற்காக எந்த கட்டணமும் பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் இவ்வாறு பொருள்களை எடுத்துச் சென்று கொடுக்கும்போது கிடைக்கக் கூடிய அனுபவங்களில் இருந்து இந்த தானியங்கிக் கார்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கான செயல்முறைகளைக் கற்றுக் கொள்கிறார்கள்.