தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆசனவாய்  கட்டி!

என் வயது 40. நீரிழிவு உள்ளது. ஆசனவாய்ப் பகுதியில் வலது பக்கம் கெட்டியாக கட்டிபோன்று இறுகிய நிலையில் உள்ளது.

எஸ். சுவாமிநாதன்

என் வயது 40. நீரிழிவு உள்ளது. ஆசனவாய்ப் பகுதியில் வலது பக்கம் கெட்டியாக கட்டிபோன்று இறுகிய நிலையில் உள்ளது. அறுவைச் சிகிச்சை ஒன்றே இதற்குத் தீர்வு என்று ஆங்கில மருத்துவர் கூறுகிறார் இந்தக் கோளாறினால் மிகவும் துன்பப்படுகிறேன். அறுவைச் சிகிச்சையின்றி குணப்படுத்த முடியாதா?

ஜி.தாவீதுராஜா, பழவேற்காடு.

ஆசனவாய்ப் பகுதி நாலரை அங்குலம் நீளம் உள்ளது. மூன்றுவித மடிப்புகள் அமைந்துள்ளன. அவை சங்குச்சுழி போன்றிருக்கும். இப்பகுதியில் அமைந்துள்ள தோல், மாமிச, கொழுப்புகளை வாத- பித்த- கபங்கள் கோளாறடையச் செய்து, ஆசனவாய் மடிப்புகளில் பலவித உருவமுள்ள முளைகளை உண்டு பண்ணும்.

துவர்ப்பும் காரமும் கசப்புமான இவை, வறட்சியும் குளிர்ச்சியும், எளிதில் செரிக்கும் குணங்கள் அடங்கிய உணவுப் பொருள்களை உண்ணுவதாலும், மிகச் சொற்ப உணவும், ஊடுருவும் தன்மையுடைய மதுபானமும், பட்டினியும், மிகச் குளிர்ச்சியான அறையில் நீண்ட நேரமிருப்பதாலும், கடுமையான உடற்பயிற்சியும், மனத்துயரமும்,

வெயிலும் காற்றும் அதிகமாகத் தாக்குவதும்- நீங்கள் குறிப்பிடும் வகையில் கெட்டியாக கட்டி போன்று இறுகிய நிலையிலுள்ள முளைகளை ஆசனவாய் மடிப்புகளில் உருவாக்கலாம்.

கல்யாணக்ஷôரம் எனும் பொடி மருந்தை நெய்யுடன் சேர்த்து உணவில் கலந்து காலை, இரவு என இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வர, ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணர் செய்ய வேண்டிய வேலையை அது செய்துவிடும்.

வயிற்றில் வாயு கீழேயிருந்து மேல்நோக்கி உருண்டு ஓடுதல், உட்புற குழாய் அடைப்புகள், மூலம், குல்மம் எனும் வாயு பந்து போல் உருண்டு ஓரிடத்தில் சேருதல், சோகை, உதரம் எனும் வயிற்றில் நீரின் சேர்க்கை, குடல் கிருமிகள், சிறுநீர்த்தடை, சீறுநீரகக் கற்கள், வீக்கம், இதய உபாதைகள், கிராணி, சர்க்கரை உபாதை, மண்ணீரல் வீக்கம், வயிற்றுவலி, உப்புசம், மூச்சிரைப்பு, இருமல் போன்ற உபாதைகளையும் இது குணப்படுத்தக் கூடியது.

சிரிவில்வாதி கஷாயத்துடன் சுகுமாரம் நெய் சேர்த்து சிட்டிகை இந்துப்புடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நீங்கள் குறிப்பிடும் கட்டியானது, மிருதுவான நிலைக்கு மாறி அமுங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

கோமூத்ர ஹரீதகீ என்ற வைத்திய முறையை நம் முன்னோர் பின்பற்றி ஆசனவாய் கட்டிகளை அகற்றினர். சுமார் இருநூறு கடுக்காய் தோல் எடுத்து பதினாறு லிட்டர் பசுவின் சிறுநீர் விட்டுக் காய்ச்சி, சிறுநீர் வற்றியதும், இரண்டு கடுக்காய்த் தோல்களை மட்டும் எடுத்து சிறிது தேனுடன் கடித்துச் சாப்பிடுவதன் மூலம், குஷ்டம், வீக்கம், குல்மம், சர்க்கரை உபாதை, உதரம், கிருமிகள், கட்டிகள், கேன்சர் கட்டிகள், அக்குள், துடையிடுக்குகளில் ஏற்படும் கட்டிகள், உடல் பருமன், சோகை, முடக்குவாதம் போன்ற உபாதைகளை இதன் மூலம் நிவர்த்தி செய்து கொண்டனர்.

அரை லிட்டர் தயிரில், கால் பங்கு தண்ணீர் விட்டு மத்திட்டு நன்கு கடைந்து, சிறிது வெண்ணெய் நீக்கிய மோரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு நீங்கள் குடித்து வர, இறுகிய நிலையிலுள்ள கட்டி தளர்வடையும்.

தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ள பைலோசிட் எனும் ஆயின்ட்மென்ட் (களிம்பு), சததெளத கிருதம் எனும் களிம்பு போன்றவை கட்டியின் மேல் போடத்தக்கவை.

ஆசனவாய்ப் பகுதியில் ஏற்படும் கட்டிகள், வீக்கம், பேதி, கிராணி என்னும் உபாதை போன்றவை வயிற்றின் பசித்தீயுடன் மிகவும் சம்பந்தப்பட்டவை. பசி மந்தம் ஏற்படும் நிலைகளில் கூடுவதும், பசித்தீ நன்றாக இருக்கும் நிலையில் அவை அடங்குவதும் இயல்பு என்பதால், நீங்கள் பசித்தீ கெடாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT