தினமணி கதிர்

பார்த்திபன் பாராட்டிய குறும்படம்!

சந்திரமெளலி

சங்கர் குமார் பிரபல கார்பரேட் கம்பெனியில் 25 வருடம் பொறுப்பான வேலை பார்த்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றவர். நடிப்பில் அவருக்கு மிகுந்த ஆர்வம். டிவி வரதராஜனின் குழுவில் சேர்ந்து அவரது நாடகங்களில் நடித்து வருகிறார்.

மகான் தியாகராஜர் நாடகத்தில் ஸ்ரீ ராமனாக, "துக்ளக் தர்பார்' நாடகத்தில் பதூதாவாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்.

இவரது மூத்த மகன் லண்டனில் டாக்டராக இருக்கிறார். இளைய மகன் நித்திஷ் சங்கர் கோவையில் இஞ்சினியரிங் படிக்கிறார். நித்திஷுக்கு சினிமாவில் குறிப்பாக ஒளிப்பதிவு, இயக்கத்தில் மிகுந்த ஆர்வம். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பொது முடக்கம் காரணமாக வீட்டிலேயே இருந்த சமயம் அப்பாவும், மகனும் பல்வேறு விஷயங்கள் குறித்து நிறையப் பேசினார்கள். கடந்த ஆண்டு தொடக்கத்தில் மகனின் சினிமா ஆர்வத்துக்குத் தீனிபோட விரும்பினார் அப்பா. வீட்டிலேயே இருக்கும் கணவர், குடும்பத் தலைவியைப் போல வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு பொறியை மகனிடம் விவாதிக்க, மகன் நித்திஷ் சங்கர் உட்கார்ந்து மடமடவென்று சின்னதாய் "இல்லத்தரசன்' என்று ஒரு ஸ்கிரிப்ட் எழுதிவிட்டார்.

மகனின் புகைப்படக் கலை ஆர்வத்தை ஊக்குவிக்க அப்பா வாங்கிக் கொடுத்த எஸ் எல் ஆர் கேமரா இப்போது கைகொடுத்தது. பொது முடக்க காலத்தில் வீட்டை விட்டு வெளியே போகாமல், அப்பாவை வைத்தே "ஹோம் மேக்கர்'

என்ற குறும்படத்தினை எடுத்து முடித்துவிட்டார் நித்திஷ். வீட்டில் இருந்தபடியே டப்பிங், எடிட்டிங், பின்னணி இசை என எல்லா வேலைகளையும் முடித்தார். குறும்படம் ரெடி. அதைப் பார்த்த நண்பர்களும், உறவினர்களும் கொடுத்த ஊக்கத்தில் மறுபடியும் அப்பாவுடன் சேர்ந்து அடுத்த ஸ்கிரிப்டையும் எழுதி முடித்தார்

நித்திஷ். பெயர்: இருமனம். கல்யாணம் வேண்டாம் என்று சொல்பவரை, திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைப்பதுதான் கதை.

இந்தப் படத்தில் அப்பா, பிள்ளை என இரண்டு கேரக்டர்கள் மட்டுமே. அந்த இரு கேரக்டர்களிலுமே அப்பாவையே இரட்டை ரோலில் நடிக்க வைத்து ஒளிப்பதிவு செய்து, இயக்கினார் நித்திஷ். ஏழரை நிமிடப் படம். படத்தின் கடைசியில் வரும் டுவிஸ்ட் சுவாரசியமாக இருக்கிறது.
நித்திஷ் இன்னும் இரண்டு படங்களையும் இயக்கி இருக்கிறார். ஒன்று முடிவிலி. இது அறிவியல் கதை வகையைச் சார்ந்தது. இன்னொன்று "டபிகா'
இந்தப் படத்தை எடுத்து முடித்து, நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார் நித்திஷ்.
சில நாட்களில் ஒரு மெசேஜ் வந்தது, அதைப் பார்த்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. நடிகர், இயக்குநர் பார்த்திபன் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, தன் பாராட்டை ஒரு வீடியோவாகவே பதிவு செய்து அனுப்பி வைத்துவிட்டார். அதில் படத்தின் பல நுட்பமான அம்சங்களைக் குறிப்பிட்டு பாராட்டியதுடன், தன்னிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கொள்ளவும் அழைத்திருக்கிறார்.
ஆனால், ""நான் இப்போது என்ஜினியரிங் இறுதியாண்டு மாணவன். படிப்பை பாதியில் நிறுத்த விரும்பவில்லை. முடித்துவிட்டு வந்து சேர்ந்து கொள்கிறேன்'' என்று கூறிவிட்டார் நித்திஷ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT