முகப்பு
தினமணி கதிர்

மனித  நேயத்தின்   மறு  பெயர்!

ரவி என்கின்ற ரவிச்சந்திரன், மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர். கடந்த 25  ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

தினமணி கதிர்

மனித  நேயத்தின்   மறு  பெயர்!

ரவி என்கின்ற ரவிச்சந்திரன், மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர். கடந்த 25  ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

ரவி என்கின்ற ரவிச்சந்திரன், மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர். கடந்த 25  ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்திவருகிறார்.

சென்னைக்கு வரும் பல்வேறு மாநிலப் பயணிகளுடன் பேசிப் பேசி,  கொஞ்சம் இந்தி, கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் மலையாளம் பேசக் கூடியவர்.
சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் இன்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அப்படி அவர் செய்த காரியம் என்ன?
கொல்கத்தாவை சேர்ந்த சங்கரதாஸ் (52)  என்பவர் சென்னைக்கு  வந்தபோது சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார்.
சங்கரதாஸூக்கு தமிழ் தெரியாது. இந்தியில் தான் போக வேண்டிய இடத்தை சொல்லிக் கொண்டே வந்தவருக்கு திடீர் என பேச்சு தடைபட்டது. கண் இருண்டது. வியர்த்துக் கொட்டியது. அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார்.
வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என அதிர்ந்த  ரவி,  கொஞ்சமும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.  அங்கே சங்கரதாûஸ பரிசோதித்த டாக்டர்,   கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என்றும்  உடனே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படியும்  சொன்னார்.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை.  அவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஆம்புலன்சில் சங்கரதாஸூடன் ரவி பயணம் சென்றார். வழியில் சங்கரதாஸ் விடாமல் வாந்தி எடுக்க எல்லாவற்றையும்  தாங்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் கையிலும் வாங்கிக் கொண்டார்.
ஆஸ்பத்திரியில் சங்கரதாûஸப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள்,  ""இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து வந்திருந்தாலும் இவரை உயிருடன் பார்த்திருக்க முடியாது. ஆனாலும் இவரது உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்.  பேஸ்மேக்கர்  கருவி பொருத்த வேண்டும். அந்த கருவி வெளியில்தான் வாங்க வேண்டும்; அதுவும் உடனே வாங்க வேண்டும் இல்லாவிட்டால் உயிர்பிழைக்க முடியாது'' என்றனர்.
சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கொல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது சென்னைக்கு ரயிலில் வரவே காசில்லாத குடும்பம் அது என்று.
ரவி கொஞ்சமும் யோசிக்காமல் தனது ஆட்டோ ஆர்சி புக்கை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் திரட்டினார். நண்பர் ஒருவரிடம் நிலமையைச் சொல்லி 27 
ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றார்.  57 ஆயிரம் ரூபாயை டாக்டர்களிடம் கொடுத்து,  ""நம்ம தமிழ்நாட்டை நம்பிவந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்ன்னு ஒரு கெட்ட பெயர் வரக் கூடாது டாக்டர்... இந்தாங்க என்னால புரட்ட முடிந்தது'' என்று 57 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார்.
""சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே? இவரு யாரு உங்களுக்குத் தெரிஞ்சவரா?'' என டாக்டர்கள் கேட்க, ""இவரு யாரு எதுன்னுல்லாம் எனக்குத் தெரியாது. என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பாத்துன்னு கேட்டு தோள்ல சாய்ந்த சக மனுஷன்,  அவ்வளவுதான்'' என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு பேஸ்மேக்கரை வாங்கிவந்து  வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர்.
இதற்குள் பத்து நாட்களாகிவிட்டன. இந்த பத்து நாட்களும் சங்கரதாஸிற்கு தானே காப்பாளராக இருந்து வார்டு வார்டாக கூட்டிச் செல்வது; மருத்துவ பரிசோனைகளுக்கு உட்படுத்துவது; படுக்க வைப்பது; சாப்பிட வைப்பது; நேரநேரத்திற்கு மருந்து கொடுப்பது என பார்த்துக் கொண்டார்.
பகல் முழுவதும் சங்கரதாûஸ பார்த்துக் கொள்வார். இரவில் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தை வீட்டு செலவிற்குக் கொடுத்துவிடுவார். காலையில் வீட்டில் பால் போட்டு எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி வந்து விடுவார். தாளிக்காத உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ஓட்டல் ஓட்டலாக அலைந்து வாங்கிவந்து கொடுப்பார்.
இப்படியே இருபது நாட்கள் சங்கரதாûஸ கண்ணும் கருத்துமாகப் பார்த்து உடல் நல்லபடியாக தேறியதும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் சென்னையில் மூன்று வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றார். காரணம் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தார்.
பிறகு நல்லபடியாக கொல்கத்தாவிற்கு ரயிலில் அனுப்பிவைக்கும் போது சங்கரதாஸ் பேசவே இல்லை கட்டித்தழுவி கண்ணீர்விட்டு அழுதார். அங்கே மொழிக்கு வழியேயில்லை அன்புதான் மேலோங்கியிருந்தது.
கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து தனது ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்த ரவியை ""எங்கேப்பா இருபது நாளாக் காணோம்'' என்று அவரது 
நண்பர் கேட்டிருக்கிறார். ""இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சு... அதான் வரமுடியலை'' என்று சொல்லியிருக்கிறார்.
""என்னப்பா இவ்வளவு நல்ல விஷயம் செஞ்சுருக்கே... இது நாலு பேருக்கு தெரியட்டும்'' என்றபடி தனக்குத் தெரிந்த ஊடகங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
இதன் மூலம் இவரைத் தொடர்பு கொண்ட திரைப்பட எடிட்டர் மோகன் தன் பங்கிற்கு அடகு வைத்த ஆட்டோ ஆர்சி புக்கை மீட்டுக் கொடுத்திருக்கிறார். இதே போல அடுத்தடுத்து பலரும் உதவி செய்ய முன்வர, ""அதெல்லாம் வேண்டாம், நான் மனிதனாக என் கடமையைச் செய்தேன். அதற்கு எதற்கு வெகுமதி, பாராட்டு எல்லாம்?'' என்றபடி அடுத்த பயணியின் அழைப்பை ஏற்று ஆட்டோவைச் செலுத்துகிறார் ரவி.
 

முழு கட்டுரையைப் படிக்க →