முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனதை வலுப்படுத்தும் மருந்துகள்!

என் மனைவியும் மகளும் கரோனாவால்  பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:


என் மனைவியும் மகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நான்தான் வீட்டில் செய்ய வேண்டியுள்ளது. காலையில் தியானம் மற்றும் இறைவனது வழிபாட்டில் ஈடுபடும்போது, அருகிலுள்ள கிராமத்திலிருந்து வரும் ஒலிபெருக்கிப் பாடலும், இடையே இவர்களுக்குத் தர வேண்டிய சூடான நீர், மருந்து போன்றவற்றாலும் மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் மிகவும் வருந்துகிறேன். என் துயர் குறைய வழி என்ன?

வெங்கடேசன், காஞ்சிபுரம்.

காலையில் தியானப் பயிற்சியும், மந்திர உச்சாடனத்தைச் செய்வதும் மிகவும் மனதிற்கு நிம்மதி ஊட்டும் விஷயமாகும். ஆனால் தங்களுக்கு ஏற்படும் பல தடங்கல்கள் வருந்த வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது. வைகறைத் துயில் எழுவதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. மனைவியும் மகளும் எழுவதற்கு காலையில் சுமார் 6.30 மணி என்று வைத்துக் கொண்டால், அதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே, அதாவது 4.30க்கே நீங்கள் எழுந்து கழிவறை வேலையை முடித்து, பல் துலக்கி, தங்களுக்குப் பிடித்த சூடான பானத்தை அருந்திய பிறகு, அவசரக் குளியல் ஒன்றை முடித்து, அதன் பிறகு தியானப் பயிற்சியில் ஈடுபடலாம். விடியற்காலையில், பறவைகளின் இனியகுரல், ஊரடங்கு அமைதி, ஒலிபெருக்கி ஓசையின்மை, குளிர்ந்த காற்று ஆகியவை அமைந்த சூழ்நிலையில் தியானப் பயிற்சியையும், மந்திர உச்சாடனத்தை சத்தமில்லாமலும் செய்வதில் கிடைக்கும் இன்பத்தை அனுபவித்துப் பார்ப்பவர்கள் மட்டுமே உணர முடியும்.

Advertisement

மேலும் தியானத்தை ஒருநிலைப்படுத்தி, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது மனதை லயிக்கும்படி செய்து, அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்களுக்கு, மனரீதியான வலிமையானது பல மடங்கு கூடுகிறது. எதையும் எதிர்கொள்ளும் சக்தியானது வலுப் பெறுகிறது. மந்திர உச்சாடனத்தைச் செய்பவராக இருப்பின், அந்த மந்திரத்தின் அச்சரங்கள் எனப்படும் எழுத்துகள் உங்கள் மனதில் தெள்ளத் தெளிவாக ஓடத் தொடங்கினால், நீங்கள் உச்சம் தொட்டுவிட்டீர்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். மேலும் இந்த எழுத்துகளில் உள்ளடங்கிய பொருளை உணர்ந்து, அதனை உணரத் தொடங்கினால் நீங்கள் நினைக்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

இவை அனைத்தும் அத்தனை சுலபமானதல்ல.

காரணம் நாம் இரவில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தேவையில்லாமல் பார்த்துவிட்டு நடு இரவில்படுக்கச் சென்றால், விடியற்காலையில் எழ முடியுமா? உடல்தான் அதற்கு ஒத்துழைக்குமா?

உடலைவிட மனம்தான் வலிமையாக இருக்க வேண்டும். இதுவும் கடந்துபோகும் என்று நினைத்துச் செயலாற்றுங்கள். அருகிலுள்ள கிராமத்தின் அதிகாரியிடம் சொல்லி, காலையில் தேவையில்லாமல் ஒலி பெருக்கியை ஒலிக்கச் செய்வதை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள். வைகறை துயில் எழுவதற்கு நீங்கள் இரவு உணவை மிதமான அளவிலும், வெதுவெதுப்பாகவும், காலையில் எழும்போது செரிக்கக் கூடிய உணவாகவும் உட்கொள்வது நல்லது. படுப்பதற்கு முன் பல் துலக்கி வாயை இளம்சூடான தண்ணீரால் கொப்புளித்து, கால் பாதத்திலுள்ள அழுக்கை அகற்றி, தலையை கிழக்கு முகமாகவோ, தெற்கு முகமாகவோ வைத்து, இடது பக்கமாகச் சரிந்து படுத்து உறங்கினால், தூக்கமானது நன்கு ஏற்பட்டு, விடியற்காலையில் சுகமாக எழ முடியும்.

இஞ்சி சாறும், வெல்லப்பாகும் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்தினை வீட்டிலேயே செய்து, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாகச் சாப்பிட்டு வந்தால், மனதை நடத்திச் செல்லும் கண்களுக்குப் புலப்படாத உட்புறக் குழாய்கள் சுத்தமடைவதாகவும், அதனால் மனம் சார்ந்த வருத்தம், துக்கம், விசனம் போன்ற குறைகள் குறையும் எனவும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. அதனை நீங்கள் முயற்சிக்கலாம்.

மனதை வலுப்படுத்தக் கூடிய சுறுசுறுப்பாக வைத்திருக்கக் கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய கல்யாணககிருதம், மாசை மித்ரம் குளிகை, சாரஸ்வத சூரணம் போன்ற மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வரலாம்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments