தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கோப, தாபங்களைத் தவிர்க்க உலர் திராட்சை!

எஸ். சுவாமிநாதன்

என் மகனின் வயது 16. அடிக்கடி உலர் திராட்சையை விரும்பிச் சாப்பிடுகிறான். ரத்த விருத்திக்கு மாதுளம் பழம்தான்நல்லது என்று எடுத்துக் கூறினாலும், அவனுடைய விருப்பம் உலர்திராட்சைதான். உலர்திராட்சை சாப்பிடுவதால் என்ன பயன்?

ராஜலட்சுமி, சென்னை-40.

பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சைதான். நீங்கள் குறிப்பிடுவதுபோல, மாதுளம் பழம் ரத்த விருத்திக்கு நல்லதுதான் என்றாலும், உலர் திராட்சையினுடைய மருத்துவகுணம், மாதுளையை விடச் சிறந்தது.

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்:

கண்களில் ஏற்படும் சூட்டைக் குறைத்து, கண் பார்வையை மேம்படுத்தும். மலம், சிறுநீர் ஆகியவற்றில் ஏற்படும் தடையை அகற்றி, அவற்றின் வெளியேற்றத்தை எளிதாக்கும். சுவையிலும், சீரண இறுதியிலும் இனிப்பான சுவையாகவே இருக்கும் என்பதால், உடல் உட்புற நெய்ப்பை ஏற்படுத்தி உறுப்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமல் எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தரும். சிறிது துவர்ப்பான சுவையையும் கொண்டிருப்பதால், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இயல்புடையது. வீரியத்தில் குளிர்ச்சியானதால், உடல் சூடாக இருப்பவர்கள், உலர் திராட்சையினால் சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியடையச் செய்யலாம். செரிமானத்துக்கு கடினமானதால், உலர் திராட்சையுடன் மற்ற பழங்களைச் சேர்க்காமல் தனித்துச் சாப்பிடுவதே
நல்லது.

வாயு மற்றும் பித்த தோஷங்களால் குடலில் ஏற்படும் உஷ்ண வாயுவை எளிதில் வெளியாக்கி, சுகத்தை ஏற்படுத்தும். உட்புற மற்றும் வெளிப்புற ரத்தக் கசிவை தன் குளிர்ச்சியானதன்மையினால் குணப்படுத்தும். வாய்க் கசப்பினால் துன்பப்படும் நபர்களுக்கு, உலர் திராட்சை வரப் பிரசாதமாகும். சிறிய அளவில் அடிக்கடி வாயினுள் போட்டுக் கடித்து, அதன் சாற்றுடன் எச்சிலை விழுங்க, வாய்க் கசப்பு விரைவில் அகலும்.

மதுபானம் அருந்தி, மயக்கத்தினால் தள்ளாடுபவர்களை, தெளிவுறச் செய்து மயக்கத்தை அகற்றும். தண்ணீர் தாகம், வறட்டு இருமல், வாயு - பித்தங்களால் ஏற்படும் மூச்சிரைப்பு, குரல்வளை உடைந்து ஏற்படும் வலி மற்றும் சீராகப் பேச முடியாத நிலை ஆகியவை மாறும். தொடர் இருமலால் ஏற்படும் ரத்தக்கசிவு உபாதைக்கு உலர்திராட்சையை நெய்யில் வறுத்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல குணம் பெறலாம்.

பொன்நிறமாகக் கிடைக்கும் உலர் திராட்சைக்குத்தான் இத்தனை சிறப்புகள். கறுப்பு உலர்திராட்சையில் கொட்டையிருப்பதால், பலரும் அதை விரும்புவதில்லை. ஆனால் அதற்கும் மேற்கூறிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

இரவில் படுக்கும் முன் 8 -10 உலர்திராட்சைகளை வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலை அவற்றைக் கசக்கிப் பிழிந்து, நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடித்தால், கல்லீரலில் பித்த சுரப்பானது மட்டுப்படுவதுடன், மலமும் சிறுநீரும் நன்கு வெளியேறி, உடலில் ஏற்படும் விஷக்காற்றை அறவே நீக்கிவிடும் என்பதால் நீங்கள், உங்களுடைய மகன் உலர் திராட்சை சாப்பிடு வதைத் தடுக்க வேண்டாம். திராக்ஷôதி கஷாயம், திராக்ஷரிஷ்டம் போன்ற தரமான மருந்துகள் ஆயுர்வேத மருந்துக்கடைகளில் விற்கப்படுகின்றன. மாலையில் பிஸ்கெட் சாப்பிடுவதைவிட, உலர் திராட்சையைச் சாப்பிட்டால், தேவையில்லாத கோப - தாபங்களைத் தவிர்க்கலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT