தினமணி கதிர்

தமிழ் சினிமாவில் சைக்கிள் ஓட்டிய  முதல் நடிகை!

ஆ. கோ​லப்​பன்

தமிழ் சினிமாவில் சைக்கிள் ஓட்டிய முதல் நடிகை, நகைச்சுவை நடிகை அங்கமுத்து ஆவார். தமிழில் பேசும் படங்கள் வருவதற்கு முன்னரே மேடை நாடகங்களில் அங்கமுத்து கோலாச்சிக் கொண்டிருந்தார். இவரே தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை நடிகை எனக் கூறலாம்.

1914-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் ஜீவரத்தினம் மற்றும் எத்திராஜுலு தம்பதியருக்கு மகளாகப் பிறந்த அங்கமுத்து, சிறுவயதிலேயே தந்தை, தாய் இருவரையும் இழந்து ஆதரவற்றவராக நின்றார். படிக்க வழியில்லாத அவருக்கு நாடக உலகமே கைகொடுத்தது.

சண்முகம் செட்டியார் என்பவர் பி.எஸ்.வேலு நாயர் நாடகக் கம்பெனியில் அங்கமுத்துவைச் சேர்த்து விட்டார். அதன் பின்னர் மளமளவென கம்பெனிகள் மாறி வெளிநாடுகளுக்குச் சென்று நாடகங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார் அங்கமுத்து.

1933-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "நந்தனார்' என்ற பேசும் படத்தில் முதன்முறையாக பேசி நடித்தார், அங்கமுத்து.

பி.எஸ். ரத்னாபாய் மற்றும் பி.எஸ். சரசுவதிபாய் சகோதரிகள் தயாரித்த "பாமா விஜயம்' படத்தில் நடித்தார். சகோதரிகளுடன் நல்ல நட்பு கொண்டிருந்த அங்கமுத்து அவர்கள் நடத்திய நாடகக் கம்பெனியிலும் நடித்து வந்தார்.

நடிப்பு என்பது வெறும் வசன உச்சரிப்பு, பாடல் என்று மட்டுமே இருந்த காலகட்டத்தில், உடல் மொழியிலும் நகைச்சுவை ஊட்டலாம் என்று கற்பித்தவர் அங்கமுத்து. பெருத்த உருவம், கணீர்க்குரல், கை, கால்களை ஆட்டிப் பேசும் உத்தி என அந்த காலத்தில் நடிகைகளின் லட்சணமாக சொல்லப்பட்ட எந்த இலக்கணத்தையும் சாராதவராக இருந்து, தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

"ரத்னாவளி', "மிஸ்சுந்தரி', "மீராபாய்', "பிரேமபந்தன்', "காலேஜ்குமாரி', "டம்பாச்சாரி', "மாயா பஜார்' என வரிசையாக பல படங்களில் நடித்தார். "காலேஜ் குமாரி' படத்தில் சைக்கிள் ஓட்டி நடித்த முதல் நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

1979-இல் வெளிவந்த "குப்பத்துராஜா' அங்கமுத்து நடித்த கடைசித் திரைப்படம். திருமணம் செய்து கொள்ளாத அங்கமுத்து, சர்க்கரை நோயால் அவதியுற்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அங்கமுத்து 1994-ஆம் ஆண்டு மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT