மீட்பு
புதிதாக வந்திருக்கும் டீச்சர் பெயர் "தங்கம்மா' என்றும் பார்க்க அழகாக இருக்கிறாள் என்றும் தேவகி டீச்சர் என்னிடம் சொன்னாள்.
தினமணி கதிர்மீட்பு
புதிதாக வந்திருக்கும் டீச்சர் பெயர் "தங்கம்மா' என்றும் பார்க்க அழகாக இருக்கிறாள் என்றும் தேவகி டீச்சர் என்னிடம் சொன்னாள்.
புதிதாக வந்திருக்கும் டீச்சர் பெயர் "தங்கம்மா' என்றும் பார்க்க அழகாக இருக்கிறாள் என்றும் தேவகி டீச்சர் என்னிடம் சொன்னாள்.
தங்கம்மா வேலைக்கு சேர்ந்த அந்த வாரத்தில் நான் லீவில் மதுரைக்குப் போயிருந்தேன்.
நான் திரும்ப வேலைக்கு வந்த அன்று தேவகியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே மேற்கண்ட தங்கம்மா பிரஸ்தாபம் வந்தது. நாங்கள் பேசிப் பத்து நிமிஷங்கள் கழித்து அறைக்குள் வந்த புதியவளைப் பார்த்து தேவகி சிரித்தபடி ""குட்மார்னிங் தங்கம். ஒரு நிமிஷம் வரியா?'' என்று கேட்டாள். அருகே வந்தவளிடம் ""தங்கம்.. இவங்க மிஸ் ரேவதி. சைன்ஸ் டீச்சர். ரேவதி, தங்கம் இங்க கணக்கு டீச்சரா சேர்ந்திருக்காங்க'' என்றாள்.
தங்கம்மா என்னைப் பார்த்து சிரித்தபடி, "வணக்கம்' சொன்னாள். கூடவே ""எனக்கு சைன்ஸ்னா ஒரே அலர்ஜி. ரொம்பப் பயம்'' என்று சிரித்தாள்.
நான் அவளிடம் ""எனக்கும்தான்'' என்றேன்.
அவள் ஆச்சரியத்துடன் கண்களை அகல விரித்து ""என்னது? உங்களுக்குமா? சைன்ஸிலியா?'' என்றாள்.
நான் ""எனக்கும் கணக்குன்னா ஒரே அலர்ஜி. ரொம்பப் பயம்'' என்றேன்.
தங்கம்மா கட்டுப்படுத்த முடியாதவளாய் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பு என்னையும் தேவகியையும் பற்றிக் கொண்டது.
""யூ ஆர் க்யூட்'' என்றாள் இன்னும் சிரிப்பு வழியும் வாயோடு.
மிகவும் அழகான பல் வரிசை அவளுக்கு என்று நான் நினைத்தேன். தேவகி கூறியது போல அழகுதான். ஆனால் அதை உணராதவளைப் போல இயல்பாக இருந்தாள். எண்ணெய் மினுமினுக்கும் தலை முடியை இறுக்கக் கட்டி வாரிக் கொண்டிருந்தாள். வட்டமான முகத்தில் சிறிய நெற்றியை ஒரு சிறிய சிவப்புப் பொட்டு ஆரத் தழுவிக் கொண்டிருந்தது. மாநிறம் என்றாலும் உதடுகளில் எப்படி அவ்வளவு சிவப்பு என்று நினைத்தேன். லிப்ஸ்டிக் உபயம் என்று தோன்றவில்லை. கட்டுவிடாத உடம்பு என்று அவள் அணிந்திருந்த முறையில் ஸாரியும் ரவிக்கையும் உணர்த்தின.
தினமும் காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன் தங்கம்மாவைப் பார்த்துப் பத்திருபது நிமிஷம் பேசுவது தவிர, மதிய உணவு நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டே இருவரும் பேசுவோம். அந்தச் சமயங்களில்தான் அவளுக்கும் என் வயதுதான். திருவையாறு அருகே மரூரில் வீடு, இங்கு வேலை கிடைத்து வந்து சித்தி வீட்டில் தங்கியிருக்கிறாள் என்று தெரிந்தது. எங்கள் ஸ்கூல் பக்கத்தில் இருக்கும் பதினேழாம்
கிராஸிலுள்ள பெண்கள் ஹாஸ்டலில் நான் தங்கியிருப்பதைச் சொன்னேன்.
ஒருநாள் அவளிடம் ""நீ வந்து வேணும்னாஎன் ரூமைப் பாரேன்'' என்று அழைத்துக் கொண்டு போனேன். எங்கள் ஹாஸ்டல் கட்டடம் மரங்கள், செடிகள், கொடிகள் அடர்ந்த பகுதியில் கட்டப்பட்ட ஒன்று. நாகரிகம் இயற்கையை உதைத்து வெளியே அனுப்பும்முன். இயற்கையைப் போற்றிய பெங்களூருக்காரர் கட்டிய முப்பது வருடப் பழைய கட்டடம். நிர்வாகம் திறமையுடன் கட்டடத்தைக் காப்பாற்றிவந்ததைக் காலத்தின் முதுமை ரேகை எதையும் காண்பிக்காதசுவர்களும் பசேலென்ற இயற்கை வனப்பும் எடுத்துக் காட்டின.
நுழைந்து உள்ளே வரும் போதே தங்கம்மா""அம்மாடி, எவ்வளவு அழகு! எங்க ஊர் மாதிரி வச்சிருக்காங்களே! கண்ணு பூரா ஒரே பச்சையால்ல இருக்கு! எவ்வளவு பூச்செடி! அட, வாட்டர்ஃபால்ஸ் வேறயா!'' என்று ஆச்சரியக் குறிகளை இறைத்துக் கொண்டே
வந்தாள் என் அறைக்குள் வந்ததும் வாசலிலேயே திகைத்து நின்று விட்டாள்.
""தங்கம், அங்கேயே நின்னா எப்படி? உள்ளே வா'' என்று அவளைப் பார்த்தேன். மெல்ல நடந்து உள்ளே வந்தாள்.
""என்னது இது? வீடு மாதிரி வச்சிருக்கே?''
""அப்படீன்னா?''
""ஹாஸ்டல்லே இருக்கறவங்கன்னா அவங்க ரூம்லே சாமான்லாம் கன்னாபின்னான்னு மேலேயும் கீழேயும் இரைந்து கெடக்கும். பெருக்கித் துடைச்சு வைக்கற வேலையெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்கன்னுதானே படிச்சிருக்கேன். சினிமாலே கூட அப்படித்தானே காட்டுவாங்க! இங்க என்னாடான்னா, தரை கண்ணாடி மாதிரி பளபளன்னு இருக்கு. ஒரு தும் புதூசு கண்ணுலே படலே. ஏதோ பர்ஃப்யூம் போட்ட மாதிரி ரூம் பூரா மணக்குது'' என்று கண்களை அகல விரித்துக் கொண்டு சொன்னாள்.
""நீ கண்ராவி சினிமாவும் புஸ்தகமும் ஜாஸ்தி பாக்கறே, படிக்கிறேன்னு நல்லாத் தெரியுது'' என்று
சிரித்தேன்.
ஒரு மூலையில் ஸ்டவ்வும் சில பாத்திரங்களும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ""அட சமைக்கவும் செய்வியா?'' என்று கேட்டாள்.
""இதையெல்லாம் பழக்கம் விட்டுடக் கூடாதுன்னும் ஒரு காலத்திலே சமைச்சதுக்கான ஞாபகச் சின்னமா இருக்கட்டுமேன்னும் வச்சிருக்கேன்'' என்றேன்.
""தினமும் காலேல காப்பி போடறதுக்கு மட்டும்தான் இப்ப யூஸ். ஹாஸ்டல்லேயே ப்ரேக் ஃபாஸ்டும், டின்னரும் கிடைச்சிடுது. லஞ்ச் வேணும்னா அதையும் கூடக்கட்டிக் கொடுக்கறாங்க..''
""வீட்டு ஞாபகத்தை மறக்கடிச்சு சவுகரியம் பண்ணிக் கொடுத்திடுவாங்கன்னு சொல்லு'' என்றாள் தங்கம்.
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன். ""இப்படிக் கூட இதைப் பார்க்கலாமா?'' என்று மனது திகைத்தது.
""என்ன இப்பிடி உளறுதுன்னு பாக்கிறியா?'' என்று என் மனதைப் படித்தவள் போலக் கேட்டாள்.
""ஆமா..''
தங்கம் என்னை ஒரு முறை உற்றுப் பார்த்தாள்.
""சொல்றேன். எங்கப்பா அம்மாவோட இருந்தது எல்லாம் ஜெயில்ல இருந்த மாதிரிதான். குழந்தையா இருக்குறப்போ அப்பாவோ அம்மாவோ ஸ்கூலுக்கு கொண்டு போயிவிட்டிட்டு ஸ்கூல் விடறப்போ மறுபடியும் ஸ்கூலுக்கு வந்து அழைச்சிட்டுப் போவாங்க. நீ பாத்திருப்ப. ஆனா காலேஜுக்குப் போறப்போ? என் அம்மா என் கூட வரும். விட்டுட்டுத் திரும்பி வீட்டுக்குப் போகணுமில்லே. அதான் கிடையாது. அங்கேயே காலேஜிலேயே உக்காந்திருக்கும். சாயந்திரம் வரைக்கும்! இப்பிடி எங்கேயாவது பாத்திருக்கியா, கேட்டிருக்கியா? ஒரு வாரத்திலே காலேஜு பூரா இது நியூஸ் ஆகி எல்லாரும் என்னைப் பாத்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. வீட்டிலே அம்மா கூட சண்டைன்னா அப்பிடி ஒரு சண்டை. நான் இனிமே காலேஜுக்கேபோகலேன்னு.. ஒரு வாரம் வீட்டிலேயே கிடந்தேன். அப்புறம் இங்க இருக்கிற சித்தப்பா வந்து இதென்ன அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு, நல்லா படிக்கிற பொண்ண படிக்க விடாம என்னா நாஸ்தி பண்ணிக்கிட்டுஇருக்கீங்க? ஒண்ணு இந்த மாதிரி காபந்து பண்ணுற விஷயத்தையெல்லாம் விட்டுட்டுஅத காலேஜுக்குப் போக விடுங்க. இல்லேன்னா இன்னிக்கி நான் கிளம்பறப்போ அதையும் பெங்களூருக்குக் கூட்டிட்டு போயிடுறேன். அப்புறம் எப்படி அண்ணி தினமும் மரூர்லேந்து கிளம்பி பெங்களூருக்கு வந்து இது பின்னாலே போயி கவனிச்சிட்டுத் திரும்பிப் போறாங்கன்னுபாப்பம்னு சத்தம் போட்டாரு. அதுக்கப்புறம்தான் நான் நிம்மதியாகாலேஜுக்குப் போக முடிஞ்சுது. ஆனா எங்ப் பாவையோ அம்மாவையோ அத்தனை சீக்கிரம் மாத்திற முடியுமா? காலேஜு தவிர மத்த விஷயத்திலே எல்லாம் குறுக்கால வந்து வந்துவிழுவாங்க.''
நான் அவள் கைகளைப் பற்றி என் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டேன். இவ்வளவு சொல்லும் போதும் அவள் குரலில் பிசிறு எதுவும் படாமல் நின்று நிறுத்தி அழகாகப் பேசினாள்.
திடீரென்று ""நா இங்க வந்திரட்டுமா?'' என்று கேட்டாள்.
""என்னது?''
""ஆமா. சித்தி வீட்டிலே இப்ப எனக்கொண்ணும் பிரச்னை இல்லே. ஆனா ஃ ப்ரீயா இருக்க முடியறதில்லே. இன்னும் அவங்ககிட்டே சொல்ல முடியாத விஷயங்கள்லாம் இருக்கு''
""சொல்ல முடியாததா?''
அவள் என் உதட்டில் நெளியும் புன்னகையைப் பார்த்துச் சிரித்தாள். அவள் கண்களில் ரகசியத்தை ஒளித்து வைத்துள்ள குறும்பு தெரிந்தது.
"" பாய்ஃப்ரெண்டா?'' என்று கேட்டேன்.
""பாம்பின் கால் பாம்பறியும்!''
எங்கள் இருவராலும் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஹாஸ்டலில் என் கூடத்தான் தங்கிக் கொண்டாள். அதனால் ஏற்பட்ட பொருளாதார செளகரியத்துக்கு அப்பால் நட்பின் நெருக்கத்தை அது இறுக்கியது.
ஒருநாள் காலையில் அவள் என்னிடம் ""இன்னக்கி சாயந்திரம் மனோவை இங்க வரச் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள். இந்த நாள்களில் மனோ அவள் காதலன் என்பதையும் அதற்கும் மேலான உண்மைகளையும் அவள் என்னிடம் தெரிவித்திருந்தாள்.
""நீ உன்னோட சித்தி வீட்டை விட்டு வெளியிலே வந்ததுக்கே இந்த பெர்மிஷன் விஷயம்தானே காரணம்?'' என்று நான் சீண்டினேன்.
""சும்மா உனக்கு ஒரு மரியாதை கொடுக்கலாமேன்னு பார்த்தேன்'' என்றாள் பொல்லாதவள்.
பிறகு ""அவன் உன்னைப் பாக்கணும்னுதான், இல்லேல்லே, நீ அவனைப்பாக்கணும்னுதான் இங்கே வரச் சொல்றேன்'' என்றாள்.
அன்று மாலை நாங்கள் இருவரும் சேர்ந்தாற்போல் ஸ்கூலைவீட்டுக் கிளம்பினோம். மனோவுடனான
பழக்கத்துக்குப் பின்னர் அவள் மாலையில் ஸ்கூல் விட்டதும் நேரேஅவனைக் காணச் சென்று விடுவாள். இப்போது ரூமுக்குப் போகும் முன் ஹையர் டேஸ்டில் கேக்கும் சமோசாவும் வாங்கிக் கொண்டு போகலாம் என்று தங்கம்மா சொன்னாள். அதை முடித்துக் கொண்டு நாங்கள் ஹாஸ்டலை அடைந்தபோது,
ரிசப்ஷனில் மனோ காத்துக் கொண்டிருந்தான்.
" "சாரி, நீ வந்து ரொம்ப நேரமாச்சா?'' என்று தங்கம்மாஅவனைக் கேட்டபடி என்னை அறிமுகம் செய்வித்தாள்.
நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். அவன் கையிலிருந்த காகிதப் பார்சலை தங்கம்மாவிடம் கொடுத்தான். அதில், " ஹையர் டேஸ்ட்' என்ற எழுத்துகள் மின்னின!
என்னாலும் தங்கம்மாவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. மனோ குழப்பத்துடன் எங்களைப் பார்த்து "என்ன? என்ன?' என்றான்.
""கேக்கும் சமோசாவுமா?'' என்று தங்கம்மா சிரித்தபடி அவனைக் கேட்டாள். எங்கள் பையைத் திறந்து அவனிடம் காண்பித்தாள். அவன் சிரிக்கத் தொடங்கினான்.
""ரெண்டு பேருக்கும் ஒத்த மனசு'' என்றேன் நான். தங்கம்மா அவனைப் பெருமிதத்துடன் பார்த்தாள்.
அவர்கள் அன்னியோன்யம் எனக்குப் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வம்படித்த பின்னர் தங்கம்மா வெளியே சென்று சாப்பிடலாம் என்றாள்.
நாங்கள் பத்தாம் கிராஸில் இருந்த ஆஷா ரெஸ்டாரெண்டுக்குப் போனோம். மனோ பில்லுக்குப் பணம் தர முயன்றபோது ""நீ எங்க இடத்துக்கு வந்திருக்கே. அதனாலே நாங்க தான் பே பண்ணனும்'' என்று அவளே பணம் கொடுத்தாள்.
மறுநாள் மாலை ஸ்கூல் விட்டதும் நான் ரூமுக்குக் கிளம்ப ஆயத்தமானேன். அப்போது தங்கம்மா என்னைத் தேடி வந்தாள் .
""ஏன், இன்னிக்கி மனோவைப் பார்க்கப் போகலையா?''
""இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே சித்திக்கிட்டேயிருந்து போன் வந்துது. என்னடி போனாலும் போனே, எங்களையெல்லாம் மறந்திட்டியா'ன்னு ஒரே திட்டு. மனோவுக்கும் போன் பண்ணி நாளைக்கு வரேன்னுசொல்லிட்டேன்.''
""சரி, வீட்டுச் சாப்பாட்டை எனக்கும் சேத்து ஒரு பிடி பிடிச்சிட்டு வா'' என்று சிரித்தேன்.
நான் ரூமுக்குச் சென்று வழக்கம் போல ஒரு குளியலைப் போட்டு விட்டு அறைக்கு வெளியே வந்தேன். வாசலில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து ஐந்து நிமிஷம் இருக்கும். கைபேசியில் தங்கம் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். இரவு சித்தி வீட்டிலேயே தங்க வேண்டும் என்று சொல்லி விட்டதால் மறுநாள் நேரே ஸ்கூலுக்கு வந்துவிடுவதாக.
அப்போது மனோ வந்தான்.
""வா, வா. எங்கே இந்தப் பக்கம்? தங்கம் அவ சித்தியைப் பார்க்கப் போயிருக்கா'' என்றேன். அதைச் சொன்னதற்குப் பின்தான் அவள் அவனிடம் தகவல் தெரிவித்ததைச் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது.
அவன் ""ஆமா. என்னோட பாஸ் இங்கேதான் க்ளூனி கான்வென்ட் பக்கத்திலே இருக்காரு. அவரை ஆபீஸிலேந்து டிராப் பண்ண வந்தேன். அதான் அப்படியே எட்டிப்பாத்துட்டுப் போகலாம்னு...'' என்றான்.
""அதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்லாம்? யூ ஆர் மோஸ்ட் வெல்கம். நானே எப்படிப் பொழுதைக் கழிக்கறதுன்னு தடுமாறிக்கிட்டு இருந்தேன்'' என்று அவனை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காகச் சொன்னேன்.
எட்டு மணி வாக்கில் அவன் கிளம்பிச் சென்றான். தங்கம் இல்லையென்று தெரிந்தும் வந்தான் என்பது ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் லஞ்ச் சாப்பிடும் போது நான் தங்கம்மாவிடம் மனோ வந்து போனதைச் சொன்னேன்.
அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு "காலேல பேசினப்போ சொன்னான்" என்றாள்.
இரண்டு நாள் போயிருக்கும். நான் லீவு போட்டு விட்டு மந்திரி மாலுக்குச் சென்று ஷாப்பிங் செய்யப் போவதாக ஸ்கூலுக்கு கிளம்பிக் கொண்டிருந்த தங்கத்திடம் சொன்னேன்.
""எத்தனை மணிக்குப் போவே?'' என்று கேட்டாள்.
""ஒரு மணிக்குப் போனால் ராஜஸ்தானி ரெஸ்டாரெண்டில் தாலி சாப்பிட்டு விட்டு அதுக்கப்புறம் ஷாப்பிங் முடிச்சிட்டு நாலு மணிக்கு வரலாம்னு பாக்கறேன்.''
நான் ராஜஸ்தானியை அடையும்போது ஒன்றரை மணி ஆகிவிட்டது. நான் உட்கார இடம் தேடிக் கொண்டிருந்தபோது, சற்றுத்தூரத்திலிருந்து யாரோ கையை அசைத்த மாதிரி இருந்தது.
""மனோ! அட, இவன் எங்கே இங்கே வந்தான்?''
அவனுக்கு எதிரே இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
""அரை மணி லேட்'' என்றான்.
""என்னது?''
""ஆமா. ஒரு மணிக்கு இங்கே வரதா இருந்திச்சில்லே?''
நான் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
""உங்க ஸ்கூலுக்குப் போயிருந்தேன். அப்ப தங்கம் சொன்னா. எனக்கும் இந்தப் பக்கம் கொஞ்சம் வேலை இருந்தது. சரின்னு அதை முடிச்சிட்டு ஒரு மணிக்கு இங்கே வந்தேன்.''
நான் முகமனாக ""எனக்கும் ஒரு கம்பனி கிடைச்சது நல்லதாப் போச்சு'' என்றேன்.
நாங்கள் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தோம்.
""ஐம் க்ளாட் தேட் ஐ மெட்யூ டுடே. இந்த மாதிரி சேர்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது'' என்றான்.
""எனக்கும்தான். பிரெண்ட்ஸ்னா அப்படித்தானே இருக்கும்!''
""யூஆர் மோர் தேன் எ பிரெண்ட்'' என்றான்.
நான் அவன் கண்களை நேரடியாகச் சந்தித்தேன். அசடு வழிகிறானோ என்று ஒரு சந்தேகம் தோன்றி மறைந்தது.
""இப்போ தங்கமும் நம்மளோட இருந்தா இன்னும் ஜாலியா இருக்கும்'' என்றேன்.
""ஆமா'' என்று சொல்லி விட்டுத் தம்ளரில் இருந்த நீரைக் குடித்தான்.
""இங்கே சாப்பாடு விலை ஜாஸ்தியா இருந்தாலும் டேஸ்ட் அருமையா இருக்கும், இல்லே'' என்றான்.
அவன் தங்கத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது போல எனக்குத் தோன்றியது.
""இன்னிக்கி நீங்க ஃப்ரீயா இருந்தா நாம...''
நான் இடைமறித்து ""சாப்பிட்ட துக்கப்புறமா ஷாப்பிங் போகணும்'' என்றேன்.
""ஓ, லவ்லி. அதை முடிச்சிட்டுப் போகலாம். நானும் வரேன். பிலிம் சொசைட்டிலே தி ரீயூனியன்ன்னு ஒரு ஸ்வீடிஷ் படம் போடறாங்க ஆறரை மணிக்கு'' என்றான்.
நான் பதில் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தேன்.
சாப்பிட்டு முடித்த பின் பில்லைத்தான்தான் கொடுப்பேன் என்றான். கடைகளைத் தேடிப் போகும்போது நான் அவனிடம் ""சினிமாவை இன்னொரு நாள் வச்சிக்கலாம். இதுக்கப்புறம் நான் கொஞ்சம் டயர்டாஆயிடுவேன். ரூமுக்குத்தான் போவேன் நீயும் வரியா? தங்கத்தைப் பார்க்கலாம்'' என்றேன் .
""இல்லே. நான் சினிமாவுக்குப்போறேன்.''
மாலுக்குள் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்
சுற்றினோம். பிறகு அவன் போனான்.
மாலையில் தங்கம் வந்தபோது, நான் ஷாப்பிங்
பண்ணிய பொருள்களைக் கட்டிலில் பரப்பி எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.
வந்தவள் அவற்றைப் பார்த்து ""அடேயப்பா! பெரிய ஷாப்பிங் போல இருக்கு!'' என்று சிரித்தாள்.
""அதையேன் கேக்கிறே? பெரிய கம்பனி வேறே
கிடைச்சது.''
""மனோதானே?''
""ஆமா. ஏதோ வேலை இருந்தது. அதை முடிச்சிட்டு வந்தேன்னான். உன்னைப் பாத்தப்போ நீதான் நான் ராஜஸ்தானிக்குப் போகப் போறதைச் சொல்லியிருக்கே."
"ஆமா. வேணும்னுதான் சொன்னேன். முதல்லே அவன் சிவாஜி நகரில் கமிஷனர்ஆபீஸ்லே வேலை இருக்கு. அங்க போறேன். சாப்பிடக் கூட விடாம மூணு மணி நாலு மணி வரைக்கும் உட்கார வச்சு இழுத்தடிப்பாங்கன்னு சொன்னான். அப்பதான் நீ மந்திரி மாலுக்குப்போகறதைச் சொன்னேன். நான் நினைச்சது சரியாப் போச்சு. அவன் ஸ்கூலுக்கு வந்தது கூட
என்னைப் பாக்க இல்லேன்னு எனக்கு சந்தேகம்
இருந்தது'' என்றாள்.
""எனக்கும் லேசா இருந்தது'' என்றேன் நான்.
""அன்னிக்கி உன்னை இங்க வந்து பார்த்தான் இல்லே. மறுநாள் நான் சித்தி வீட்டிலேந்து நேரே ஸ்கூலுக்கு வரலே. டிரெஸ் சரியா இல்லேன்னுசேஞ்ச் பண்ண இங்கே வந்தேன். அப்போ தோட்டக்காரம்மா மனோ முந்தின நாள் வந்ததைச்சொன்னா. நீ கூட மறுநாள் என்கிட்டேகேட்டப்போ அவன் என்கிட்டே சொன்னான்னேன். ஆனா அவன் சொல்லலே. அப்பதான் எனக்கு முதல்லே சந்தேகம் வந்தது. இப்ப எல்லாம் கிளியர்ஆயிருச்சு. டர்ட்டி ராஸ்கல்'' என்றாள்
நான் படுக்கையில் கிடந்த ஒரு அட்டைப் பெட்டியை எடுத்தேன். அதை அவளிடம் காட்டி ""உமன் ரோஸ். ரெண்டாயிரம் ஆச்சு. மனோதான் வாங்கிக் கொடுத்தான்'' என் வாசனைத் திரவிய பாட்டிலை அவளிடம் காண்பித்தேன்.
""சீ அவன் வாங்கிக் கொடுத்தான்னு நீ எடுத்துக்கிட்டு வந்தியா?'' என்று கோபத்துடன் என்னைப் பார்த்தாள்.
""பின்னே ஹையர் டேஸ்ட்டுலேயும் ஆஷா
ரெஸ்டாரென்ட்லேயும் செலவழிச்சதை எப்படி கலெக்ட்பண்ணுறதாம்?'' என்று அவளைப் பார்த்து சிரித்தேன்.