செஸ்-தமிழன்
பிரேசில் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக, தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரியதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக, தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரியதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் (2022), முதன்முதலாக இந்தியாவில் நடைபெறுகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுவதால், தமிழகத்துக்குப் பெருமை ஏற்பட்டுள்ளது.
Advertisement
இந்தப் போட்டியில் பிரேசில் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக கிராண்ட் மாஸ்டர் பிரியதர்ஷன் கண்ணப்பன் (28) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட நாட்டரசன்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்து வளர்ந்தது மதுரை. பெற்றோர்எல். ஐ.சி. முகவர் ஏ.எஸ்.கண்ணப்பன்- மீனாட்சி. இவரது மூத்த சகோதரர் பிரசன்னா, அமெரிக்காவில் "ரோபோடிக் சயின்டிஸ்ட்டாக' உள்ளார்.
உலகம் முழுவதும் 1, 700-க்கும் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். இதில், தமிழகத்தில் உள்ள 26 கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரே பிரியதர்ஷன்.
"ஃபிடே' தரவரிசைப் பட்டியலில் 2,554 புள்ளிகளுடன் இந்திய அளவில் 25 -ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 71- ஆவது இடத்திலும், உலகளவில் 475-ஆவது இடத்திலும் உள்ளார். 22 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் துறையில் இருந்துவரும் இவர், 3 கண்டங்களில் உள்ள 12 நாடுகளில் பலநூறு செஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 11 சர்வதேசப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஆங்கிலத்தில் "தி மாடர்நைஸ்ட் பெர்லின் வால் டிபன்ஸ்' என்னும் புத்தகத்தையும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பயிற்சியாளர்களுக்கான "ஃபிடே ட்ரைநர்' என்கிற பட்டத்தையும் இளம் வயதிலேயே பெற்றுள்ளார். 2019-ஆம் ஆண்டில் துருக்கியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் இந்தியன் சப் ஜுனியர் அணிக்குப் பயிற்சியாளராக இருந்தார்.
தனது சாதனை குறித்து பிரியதர்ஷன் கூறியதாவது:
""எனது அண்ணன் விளையாடுவதைக் கண்டு, ஆறரை வயது முதல் நான் செஸ் விளையாடி வருகிறேன். ஆரம்பத்தில் மதுரையில் சுரேஷ், ரங்கராஜன், திருநாகலிங்கம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றேன். பின்னர் பெங்களூரில் இண்டர்நேஷனல் மாஸ்டர் ராஜா ரவி சேகரிடமும், சென்னையில் கிராண்ட் மாஸ்டர் ரமேஷிடமும் பயிற்சி பெற்றேன்.
எனது போட்டிகள் அனுபவத்தில், அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானா எனக்கு சவாலாக இருந்தார். 2015-இல் லாஸ் வேகாஸில் நடைபெற்ற மில்லியனர் ஓபனில் எங்கள் இருவருக்குமான போட்டி சமனில் முடிந்தது, அன்று ஃபேபியானோ உலகின் இரண்டாவது சிறந்த செஸ் வீரராக இருந்தார்.
2019-இல் "செஸ் கஜா' என்னும் பெயரில் இணையத்தின் வாயிலாக செஸ் பயிற்றுவிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். இதுவரை 600-க்கும் அதிகமானோருக்கு செஸ் பயிற்றுவித்தேன். தற்போது 14 நாடுகளைச் சேர்ந்த 120-க்கும் அதிகமானோர் பயின்று வருகின்றனர்.
பிரேசில் அணியில் உள்ள 5 வீரர்களில் ஒருவர் எனது கல்லூரித் தோழர் ஆண்ட்ரே டயமண்ட். இவர்வாயிலாகவே பிரேசில் அணிக்குப் பயிற்சியளிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரேசில் அணியில்உள்ள மற்றொரு வீரர் லூயிஸ்பாலோ சுபி, 2020-இல் நடைபெற்ற செஸ் போட்டியில், தலைசிறந்த செஸ் வீரரான கார்ல்சனைத் தோற்கடித்தவர். இவர்களுக்கு இணையவழியில் செஸ் பயிற்சி அளிக்கிறேன்'' என்றார்.