பழக் கிண்ணத்தில் பழச்சாறு!
சிலர் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து சுற்றுப்புறச் சூழலை சிறிய அளவில் பாதுகாக்கத் தொடங்கிவருகின்றனர்.
சிலர் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து சுற்றுப்புறச் சூழலை சிறிய அளவில் பாதுகாக்கத் தொடங்கிவருகின்றனர்.
இந்த வகையில் பெங்களூரில் மல்லேஸ்வரம் பகுதியில் "ஈட் ராஜா' பழச் சாறு விற்பனை நிலையத்தில் பழங்களில் சதையை எடுத்துவிட்டு அந்தக் காலி இடத்தில் பழச் சாற்றினை ஊற்றிக் கொடுக்கின்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஆனந்த் ராஜ் தொடர்கிறார்.
Advertisement
""நான் ரேடியோ ஜாக்கியாக 12 ஆண்டுகள் வேலை பார்த்தவன். அப்பா பழச் சாறு விற்பனை கடையை நடத்தி வந்தார். அப்பா இறந்ததும் கடையை நடத்தும் பொறுப்பை அம்மா ஏற்றுக் கொண்டார்.
சில ஆண்டுகளில் அம்மாவுக்கும் உடல் நலம் சரியில்லாததால் கடையை நடத்தச் சிரமப்பட்டார். அந்தத் தருணத்தில் ரேடியோ ஜாக்கி வேலையை விட்டுவிட்டு கடையை நடத்தத் தொடங்கினேன். இந்தக் கடை 45 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எனக்கு அம்மா வழிகாட்டினார்.
ரேடியோ ஜாக்கியாக இருந்தபோது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் சொந்தமாகக் கடையை நடத்தத் தொடங்கியபோது, தினமும் எத்தனைக் கழிவுகளை உருவாக்குகிறது என்று தெரிந்து கொண்டேன். கடையில் காகிதக் குவளைகள், காகித உறிஞ்சு குழாய்கள், டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தினாலும் அவற்றை அப்புறப்படுத்துவதுடன் எல்லா பிரச்னைகளும் முடிந்துவிடுவதில்லை.
அந்தக் காகிதக் கழிவுகளில் பிளாஸ்டிக் பூச்சு இருப்பதால் மண்ணுடன் மக்கி கலக்கவும் அதிக நாள்கள் தேவைப்படுகின்றன. அதற்குள் புதிய கழிவும் சேர்ந்துவிடும். கண்ணாடி குவளைகளில் கொடுத்தால் கழுவ சுத்தம் செய்ய தண்ணீர் அதிகம் செலவாகிறது. அதனால் சாறு எடுக்கப்படும் பழங்களையே காப்பாக மாற்றுவது என தீர்மானித்தேன்.
தர்ப்பூசணி, கொய்யா, ஆரஞ்சு, வாழைப் பழம், ஆப்பிள், அந்நாசி... மெலன், ஆவக்கோடா போன்ற பழங்களில் சதைப் பற்றைக் குடைந்து எடுத்து "கிண்ணம்' போல உருவாக்குவோம். பழத்தின் சதையைப் பழச் சாறாக்கி பழக் கிண்ணத்தில் ஊற்றி வழங்குவோம்.
பயனாளர்கள் குடித்து முடித்ததும் அதை கழிவுக் கூடையில் போட்டுவிடுவோம். கழிவுகளை அப்புறப்படுத்துபவர்கள் பச்சைக் கழிவுகளை போடும் இடத்தில் பறவைகளுக்கு, மாடுகளுக்கு உணவாகும். மிஞ்சியவை மண்ணோடு கலந்து உரமாகும். குளியல் அறைகளை, தரைகளைச் சுத்தம் செய்ய சில இயற்கைப் பொருள்களை பழக் கழிவுகளுடன் கலந்து கிருமிநாசினியை உருவாக்குகிறேன். பழைய சைக்கிளில் மிக்சியைப் பொருத்தி சைக்கிளில் அமர்ந்து பெடல்களை மிதித்தால் மிக்சி சுற்றும். மிக்சியில் உள்ள பழம் சாறாக மாறும். உடற்பயிற்சியோடு, மின்சாரச் செலவு இல்லாமல் பழச் சாறும் ரெடி.
தொடக்கத்தில் இந்த உக்தி பொதுமக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் பயனாளர்கள் கடைக்கு வருவது குறைந்தது. அப்போதுதான் கல்லூரி மாணவர்கள் பழச் சாறு அருந்திவிட்டு அதைக் காணொளியாகப் படம் எடுத்து எனது முயற்சியை "புதுமையான பசுமை முயற்சி' என்று சிலாகித்து பதிவுகள் போட, நல்ல விளம்பரமாக அமைந்தது. பயனாளர்கள் கடைக்கு வர ஆரம்பித்தார்கள். கடையில் விற்பனை சூடு பிடித்தது...' என்கிறார் ஆனந்த் ராஜ்.