முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பனி... பசி... வறட்சி!

விடியற்காலையில் குளிர் அதிகமாக இருப்பதால் உடலின் இயற்கையான சூடானது வெளியே செல்ல முடியாமல்

Updated On : 7 மார்ச், 2022 at 1:32 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:06 PM

என் வீடு வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ளதால், விடியற்காலை பனி மூட்டத்தினால் பசி அதிகம் எடுக்கிறது. மேல் தோலில் வறட்சி, சொரசொரப்பினால் வெடிப்புகள் ஏற்படுகின்றன.  இவற்றை எப்படிச் சரி செய்வது?
 ஹரி, ஊஞ்சலூர்.


விடியற்காலையில் குளிர் அதிகமாக இருப்பதால் உடலின் இயற்கையான சூடானது வெளியே செல்ல முடியாமல் குளிர் தடுப்பதால், உட்புற தாதுக்களில் நுழைந்து,  அந்த ஏழுவிதமான தாதுக்களுடைய  அக்னி பலத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் வாயு தாதுவும் உள்ள தங்கி குடலிலும் தாதுக்களிலும் இருக்கும் அக்னியைத் தூண்டிவிடுகிறது.  அதனால்  தீவிரமான பசி எடுக்கும். 
எளிதில் செரிக்காத கன உணவும் எளிதில் செரிக்கும்.  இந்த இயற்கைக்கு ஏற்றபடி உணவு உட்கொள்ளாமல் விட்டுவிட்டால், வாயுவின் கோபம் அதிகமாகும்.  அக்னி,  தாதுக்களையே சாப்பிடத் தொடங்கும்.  உடம்பு இளைக்கும்.  குளிரும். வறட்சியால் வாத ரோகமும் வரலாம். 
அதனால் நீங்கள் விடியற்காலை பனியால் ஏற்படும் பசியை உதாசீனப்படுத்தாமல், கனமான தாதுக்களை வளர்க்கக் கூடிய இனிப்பு,  புளிப்பு,  உப்பு சுவைகள் மிகுந்துள்ள நெய், வெண்ணெய், பால், தயிர், எண்ணெய் நெய்ப்புடன் கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.  மாமிசம் புசிப்பவர் இந்த பருவகால மாற்றத்திற்கு ஏற்ப புசிப்பது  மிகுந்த  நன்மையைத் தரும். மாமிசம் சாப்பிடாதவர், உளுந்து, மொச்சை, பயிறு, கொத்துக்கடலை போன்ற தானியங்களை ஊற வைத்து முளைகட்டி கொப்பரைத் தேங்காய், வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் போதுமானது.  பூரண குணம் கிடைக்கும். செய்யாவிட்டால் ரத்த ஓட்டத்தில் குறைவு ஏற்பட்டு முடக்கு வாயுப் பிடிப்பு, சந்திகள் எனும் மூட்டுகளில்  ஏற்படும் அபாயமுள்ளது.
பகலில் தூக்கம் கபத்தை வளர்க்கக் கூடியது.  விடியற்காலை பனியினால் கபம் மேலும் வளருமென்பதால்,  பகல் தூக்கம் தவிர்ப்பது நல்லது.  பனியின் வறட்சியால் மேல் தோலில் வறட்சி,  சொரசொரப்பு வெடிப்புகள் உண்டாகும்.  இவற்றைக் குறைக்க க்ஷீரபலா தைலம், பலாசுவகந்தாதி தைலம் போன்ற வாயுவின் சீற்றத்தை  அடக்கக் கூடிய  தைலங்களை சிறிது சுட வைத்து அவசியம் தினம்தோறும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வெந்நீரில்  குளிக்க வேண்டும்.  இந்த காலத்தில் மட்டும் கடுகு எண்ணெய்யை மேலுக்கு மட்டும் தடவி சிறிது ஊறியதும் குளிப்பது தரம். தோல் உடம்பைக் காப்பாற்றும் முக்கியமான செயலைச் செய்வதால், அதனை நன்கு பாதுகாக்க இரவிலும், பகலில் காலை, மாலை நேரங்களிலும் கை,கால் அலம்ப வெந்நீர் உபயோகித்தல், வெயிலில்  சிறிது நேரம் உட்கார்ந்திருத்தல் நல்லது.
விடியற்காலை பனி மாறி, பகலில் நல்ல வெயில் தற்சமயம் அடிப்பதால்,  கால நேரத்துக்கு ஏற்ப தன் உடல்நிலையை நன்கறிந்து  அதற்கேற்றவாறு பகல் உணவை ஏற்பதும், பருவநிலைக்கேற்ப செயல்களை மாற்றி அமைத்து வாழ்வதும், ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும். 
(தொடரும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.