தினமணி கதிர்

என்ன எங்கே எப்பொழுது?

சமீபகாலமாக கோலிவுட் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடப்பதில்லை.நாளடைவில் சென்னையில் இருந்த ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக மூடுவிழாக் கண்டன.

டெல்டா அசோக்

சமீபகாலமாக கோலிவுட் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடப்பதில்லை.நாளடைவில் சென்னையில் இருந்த ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக மூடுவிழாக் கண்டன. இதனால் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோ தென்னிந்திய சினிமாவை தன்னகத்தே இழுத்துக் கொண்டது. ஒரே இடத்தில் அனைத்து அரங்குகளும், தங்குமிடங்களும் என இன்னப் பிற வசதிகளை கொண்ட அந்த ஸ்டூடியோ. பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் அங்கேதான் நடந்து வருகின்றன.

இதையும் தாண்டி எங்கெங்கே என்னென்ன படப்பிடிப்புகள் நடக்கின்றன. அதன்அப்டேட் என்ன.... இங்கே பார்க்கலாம்...

கடலூரில் ரஜினி: சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான "தர்பார்', "அண்ணாத்த' படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்றன. அதிலும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஒரே மொத்தப் படத்தையும் செட்டுக்குள்ளேயே எடுத்து வந்து விடுவார்கள். ரஜினி - நெல்சன் கூட்டணியின் "ஜெயிலர்' படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடந்து வந்தது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டர் அருகேயும் படப்பிடிப்பு நடந்து வந்தது.

தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரிலும் செட் அமைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடக்க உள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் - புதுச்சேரி எல்லையை ஒட்டியிருக்கும் அழகிய நத்தம் தென்பெண்ணையாற்று பாலம் அருகே நடந்து வருகின்றன.

சென்னையில் கமல்: கமல், ஷங்கர் கூட்டணியின் "இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. கமலின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. சிவகார்த்திகேயனின் "டான்' பட வெற்றிவிழாவின் போதுதான் உதயநிதி, லைகாவின் சுபாஷ்கரனிடம் "இந்தியன்2'-ஐ மீண்டும் ஆரம்பிப்பது பற்றிப் பேசினார்.

இந்நிலையில்தான் "இந்தியன்2'-இல் நடித்த கமல், காஜல் அகர்வால் உட்பட படத்தின் நடிகர் நடிகர்களிடம் மீண்டும் தேதிகள் கேட்கப்பட்டது.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஒரு பழைமை வாய்ந்த கட்டடத்தில்தான் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காட்சிகள் எடுக்கப்பட்டன.
இப்போது சென்னை, திருப்பதியில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது படப்பிடிப்பு. கமலின் போர்ஷன் படமாகி வருகிறது. படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊழல் பெருக்கெடுக்கும் சமூகத்தில் ஒருவர் அதற்கு எதிராக என்ன மாதிரியெல்லாம் களத்தில் இறங்குகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

இதற்கு முன்பு எழுதி வைத்த கதையில் வசனங்கள் கடுமையாக அரசியல்வாதிகளை சாடியும் சிலரை குறிப்பால் உணர்த்தியும் இருந்ததாம். இப்போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் முக்கியமானவர் படப் பிரச்னைகளில் பஞ்சாயத்து செய்து சரி செய்து விட்டதால் அவரும் இந்தத் தயாரிப்பில் கலந்துவிட்டார். அவருக்கு எதிர்காலத்தில் பிரச்னை வராமல் இப்போதே அதில் கடுமையை குறைத்து விட்டார்கள். அதற்கு பதிலாக அரசியல் தவிர வேறு சில கருத்துகளைச் சேர்க்க இப்போது எழுத்தாளர்கள் வேலை செய்கிறார்கள்.

பனையூரில் ஷாரூக்கான்: இன்னொரு ஆச்சரியம், அட்லீ- ஷாரூக்கான் காம்போவின் "ஜவான்' படப்பிடிப்பு சென்னையில் உள்ள பனையூரில் மும்முரமாக நடந்து வருகிறது. அங்கே வீடு ஒன்றை செட் போட்டுள்ளனர். ஷாரூக்கான் பங்கேற்று நடிக்கும் காட்சிகள் சென்னையில் தொடர்ந்து இருபது நாள்கள் எடுக்கப்படுகின்றன. படப்பிடிப்பு அரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக உள்ளன.

கோகுலம் ஸ்டூடியோவில் விஜய்: விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் "வாரிசு' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் மும்முரமாக நடந்து வந்தது. இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்போது சண்டைக் காட்சிகளை படமாக்கியதைத் தொடர்ந்து சரத்குமார், குஷ்பு உள்பட, அனைத்து நடிகர்களின் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பையும் சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ எடுக்கத் திட்டமிட்டு வருகின்றனர். மூன்றாவது ஷெட்யூலுக்கான செட் வேலைகள் எதுவும் இன்னும் சென்னையில் துவங்கப்படாமல் உள்ளதால் ஹைதராபாத்தில்தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். விஜய்யின் வசன காட்சிகளை எடுத்து முடித்துவிட்டனர். விஜய் - ராஷ்மிகாவின் பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்க வேண்டியிருக்கிறது. அதற்காக கோகுலம் ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்கம் ஒன்றை அமைத்து வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். பல்கேரியாவிலும் ஒரு பாடலை படமாக்கியுள்ளனர். இந்த வேலைகள் முடிந்தால் "வாரிசு' தயார்.

பாங்காங்கில் அஜித்: அஜித்தின் "துணிவு' படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்து முடிந்திருக்கிறது. மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் அங்கிருந்து திரும்பி வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த ஷெட்யூலோடு பேட்ச் ஒர்க் வேலைகள் மட்டுமே படமாக்க வேண்டியிருக்கும் என்றும் தகவல். ஆரம்பத்தில் "துணிவு' படத்தைத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்திட வேண்டும் என்றுதான் நினைத்தனர். ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனதில், ரிலீஸ் பொங்கலை நோக்கி நகர்ந்தது.

கடப்பாவில் விக்ரம் :

விக்ரம் - பா. ரஞ்சித் கூட்டணி இணைந்திருக்கிறது. இந்த படம் 18- 19 நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால், இந்தியாவின் பல இடங்களிலும் லொகேஷன் தேடுதல் வேட்டையை நடத்தினார் பா.ரஞ்சித். அவர் மட்டுமில்லாமல் பல அணிகளாகப் பிரித்து கதைக்கான இடங்களைத் தேடி வந்தனர். ரஞ்சித்தும் இதற்காக சமீபத்தில் பெங்களூரு சென்று வந்தார்.

இந்நிலையில் இன்று ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி, நடந்து வருகிறது. விக்ரமுடன், பசுபதி இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். மற்ற நடிகர்கள் விரைவில் இணையவிருக்கிறார்கள். கடப்பாவில் தொடர்ந்து பத்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கின்றன.

ஒடிஸாவில் சூர்யா: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் " சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. பீரியட் படமான இதில் "சூர்யா- திஷா பதானி' இணைந்து நடிக்கும் காட்சிகளை அங்கு படமாக்கி வருகிறார்கள். அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு, மீண்டும் சென்னை வருகிறார். இதற்கிடையே பாலாவின் "வணங்கான்' படம் எப்போது மீண்டும் துவங்கும் எனவும் கேட்க ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து பாலாவின் படத்தில் நடித்துவிட்டு வெற்றி மாறனின் "வாடிவாசல்' படத்தில் நடிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டார் சூர்யா. வாடி வாசல் படத்துக்காக ஒடிஸாவில் ஒரு கிராமத்தை தேர்வு செய்கிறார் வெற்றிமாறன். அதற்காக அங்கு சென்றுள்ளது இயக்குநர் குழு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT