முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க..!

எனக்கு அடிக்கடி சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. லேசர் சிகிச்சை மூலம் பலமுறை கற்களை உடைத்து எடுத்துவிட்டார்கள். ஆனால் மறுபடியும் உருவாகிறது. சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க வழி உள்ளதா?

Updated On : 4 செப்டம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM


எனக்கு அடிக்கடி சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. லேசர் சிகிச்சை மூலம் பலமுறை கற்களை உடைத்து எடுத்துவிட்டார்கள். ஆனால் மறுபடியும் உருவாகிறது. சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க வழி உள்ளதா?

-தனஞ்செழியன்,
ரோடு.

இயற்கை உபாதையான சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டவுடன் காலதாமதமின்றி அதை வெளியேற்றிவிட வேண்டியது தங்களுக்கு அவசியமாகும். அது போலவே, தண்ணீர் தாகம் எடுத்தவுடன், உடன் தண்ணீர் அருந்துவதும் அந்தத் தண்ணீரும் மண்பானைத் தண்ணீராக இருத்தலும் நலமாகும்.

Advertisement

சிறுநீரகக் கற்களை உருவாக்காமல் தடுக்கும் நீர்க்காய்களாகிய வெள்ளரி, பூசணி, புடலை, சுரை, பீர்க்கை, பரங்கி போன்றவற்றின் விதைகளை, அந்த மண்பானைத் தண்ணீரில் ஊறவைத்து, கூடவே சிறிது கரும்புவேர், நாணல் வேர், நெருஞ்சில் விதை போன்றவை கிடைத்தமட்டில் சேர்த்து ஊறவைத்து, அந்த நீரைப் பருகினால்,  கற்கள் மேலும் உருவாகாமல் தடுக்கலாம்.

வெறும் பசுநெய்யை உருக்கி, சுமார் பத்து மில்லி லிட்டர் அளவு, காலை இரவு உணவிற்கு அரை மணி முன், அரை மணி பின் என்று சாப்பிட்டு வந்தாலும், சிறுநீர் தாராளமாக இறங்கும். கற்களும் உருவாவதைத் தடுக்கும்.

உணவில் வாழைத்தண்டு பொரியல், வாழைப்பூ வடகறி, தேங்காய்த் துவையல், பீர்க்கங்காய் கூட்டு, முள்ளங்கி சாம்பார், மூக்கரைட்டை கீரை என்ற வகையில் அமைத்துக் கொண்டு சாப்பிடுவது தரம். ஒரு பங்கு கொள்ளு, பத்து பங்கு தண்ணீர் சேர்த்து, வேக வைத்து, ஐந்து பங்காக தண்ணீர் சுண்டியதும் , வடிகட்டி, சிறிது இந்துப்பு சேர்த்து, ஒருநாளில் பல தடவை, சிறிதுசிறிதாகப் பருகிவந்தால், கற்களை சிதைத்துப் பொடியாக்கி வெளியேற்றுவதுடன், மேலும் உருவாகாமல் பாதுகாக்கவும் செய்யும்.

உணவில் சிறிதும் எண்ணெய்ப் பசை இல்லாத வகையில் சாப்பிடுவதையும், சூடாறிய உணவை மறுபடியும் சூடு செய்து சாப்பிடுவதையும் ஒருநாள் இரவு தங்கிப் போன உணவை, மறுநாள் சாப்பிடுவதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

ஒறே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும்போது, பிஸ்கட், டீ சாப்பிடுவது, பன் பட்டர் ஜாம், சமோசா, பீட்சா உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

உலர் திராட்சைப் பழம், அத்திப்பழம், தூத்துக்குடி பழச்சாறு, ஆப்பிள் பழம், வாழைப் பழம், பப்பாளிப் பழம், அன்னாசிப் பழம், மாதுளம் பழம், பேரீச்சம் பழம், சப்போட்டாப் பழம், சீதாப் பழம், மாம்பழம் போன்றவை நீங்கள் சாப்பிட உகந்தவை. ஒரு நாளில் ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் போதுமானது.

வீரதராகி கஷாயம், சுகுமாரம் கஷாயம், புனர்நவாதி கஷாயம், கோகிலாக்ஷம் கஷாயம், தசமூலஹரீத கீலேஹியம், பிரவாள பஸ்பம், கோக்ஷராதி சூரணம், சதாவரீ குலம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகள், சிறுநீரக் கற்களை அகற்றக் கூடியவை மட்டுமல்ல; வராமல் தடுக்கக் கூடியவையும் ஆகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.