தினமணி கதிர்

கோயிலில் ரோபோ யானை

கோயில் உத்ஸவங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் யானைகள் பங்கேற்கும்போது, சில வேளைகளில் யானைக்கு மதம் பிடித்து பல அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன.

சுதந்திரன்

கோயில் உத்ஸவங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் யானைகள் பங்கேற்கும்போது, சில வேளைகளில் யானைக்கு மதம் பிடித்து பல அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன.

வளர்த்த பாகனையே கொல்லும் அளவுக்கு யானைகளின் கோபம் வெளிப்படுகிறது. பாகன்களும் தங்கள் வளர்க்கும் யானைகளைத் துன்புறுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது.

உத்ஸவத்தின்போது கூடும் மக்கள்.. அவர்களின் ஆரவாரம்.. மேளங்கள் முழங்குதல்... வெடிகள் பலத்த சத்தத்தில் வெடிக்கப்படுதல்,.. போன்றவையே யானையின் அமைதியைக் குலைத்து கிளர்ந்து எழச் செய்கிறது. அதனால் 'கோயில்களில் யானையை வளர்க்க வேண்டாம்' என்று விலங்கு நல ஆர்வலர்கள், பீட்டா அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.

'தமிழ்நாட்டில் யானைகளை கோயில்கள் உட்பட யாரும் சொந்தமாக வளர்க்கக் கூடாது. எந்த அவசியத்துக்கும் யானைகளைப் பயன்படுத்தக் கூடாது' என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையை அண்மையில் பிறப்பித்தது. யானையை வளர்ப்பவர்கள் உடனடியாகத் தங்கள் வசமுள்ள யானைகளை தமிழ்நாடு அரசின் மறுவாழ்வு மையத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இனி கோயில்களில் யானை இருக்காதா?, உத்ஸவங்கள் யானைகள் இல்லாமல் நடக்குமா? என்ற கேள்விக்கு கேரளம் வழிகாட்டியிருக்கிறது. ஆம்.. மோட்டார்களால் இயங்கும் ரோபோ யானை.

அசல் யானையைப் போல தோற்றத்திலும், உயரத்திலும் பருமனிலும் ரோபோ யானை இருக்கும். நிஜ யானை போல கண் முடித் திறக்கும் தும்பிக்கையை ஆட்டும்.. வளைக்கும்... நீரையும் உறிஞ்சும்.... பீச்சி அடிக்கும். முறம்.. போன்ற அகன்ற விரிந்த காதுகளை விசிறி போல வீசும். வாளை நிஜ யானை வீசுவதுபோல ஆட்டும்.

கேரளத்தில் திருச்சூர் இரிஞ்ஜடப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் விழாவில் ரோபோ யானையை அண்மையில் அறிமுகம் செய்து, நிஜ யானையில் மரபுப்படி என்னென்ன சடங்குகள் சம்பிரதாயங்களை செய்வார்களோ அதை கடவுளுக்கு செய்து முடித்துள்ளனர்.

ரோபோ யானையின் உயரம் 11அடி. எடை 800 கிலோ. நான்கு பேர் இதன் மீது அமரலாம். ஐந்து மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்கள் மூலமாக யானையின் தும்பிக்கை, காதுகள் கண்கள், வால், வாய், தாடைகள், கால்கள் இயக்கப்படுகின்றன.

மோட்டார்களை இயக்கும் பொத்தான்கள் யானையில் தலையில் உள்ளது. மோட்டார்கள் மின்சாரத்தால் இயங்கும். ரோபோ யானை சக்கரம் பொருத்தப்பட்ட பலகையில் நிற்க வைக்கப்பட்டுள்ளது. பலகையை மோட்டார் கொண்டு இயக்கி யானையை அங்கும் இங்கும் நகர்த்தலாம்.

இந்தச் செயற்கை யானைக்கு 'ராமன்' என்று பெயரிட்டுள்ளனர். உள்ளே இரும்பு கம்பிகள்... மேலே ரப்பர் போர்வையால் மூடப்பட்டிருக்கும் ரோபோ யானையை உருவாக்க 5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. சிற்பக் கலைஞர் பிரசாந்த் பிரகாசன் தலைமையில் மூன்று கலைஞர்கள் இணைந்து ரோபோ யானையை உருவாக்கியுள்ளார்கள்.

துபையில் நடைபெற்ற பொருள்காட்சிக்காக பிரகாசன் குழுவினர் தயாரித்து அனுப்பிய ரோபோ யானை பிரபலம் ஆனதால் பீட்டா நிறுவனம் அணுகி, ' எங்களுக்கும் இதுமாதிரி யானை ஒன்று வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது.

அப்போது 'இந்த ரோபோ யானையை கோயிலுக்கு அன்பளிப்பு செய்யப் போகிறோம்' என்று பீட்டா நிறுவனம் பிரகாசனிடம் சொல்லவில்லை. ரோபோ யானை உருவாக்கும் செலவுக்கு நடிகை பார்வதி திருவோத் பங்களிப்பு செய்துள்ளார்.

பீட்டா நிறுவனம் திருச்சூர் இரிஞ்ஜடப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் நிர்வாகிகளை அணுகி ரோபோ யானையை உத்ஸவத்தில் பங்கெடுக்க வைக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தனர்.

கேரளத்தில் கோயில் உத்ஸவங்களில் ஒரே சமயத்தில் நூறு யானைகள் வரை பங்கேற்கும். அப்படியான தருணங்களில் எந்த யானைக்கு எப்போது மதம் பிடிக்குமோ என்ற பயம் பலருக்கும் இருக்கும். கடந்த 15 ஆண்டுகளில் கேரளத்தில் 526 பேர் கோயில் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும், அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுகிறது.

யானைகள் இல்லாமல் வழிபாட்டு முறை பூர்த்தி ஆகாது என்று கோயில் நிர்வாகங்கள் கருதுவதால், அவற்றைப் பயன்படுத்துவதை கேரளத்தில் தவிர்க்க முடியவில்லை.

எதிர்காலத்தில் கோயில்களில் ரோபோ யானைகளின் பயன்பாடு அதிகரிக்கும் என பீட்டா நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டு கோயில்களிலும் ரோபோ யானைகள் அறிமுகம் ஆகலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT