தினமணி கதிர்

தமிழ்நாட்டிலிருந்து தான்சானியாவுக்கு..!

தான்சானியா  நாட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து செம்மை நெல் சாகுபடி உள்ளிட்ட நுட்பங்களைச் சொல்லித் தரும் பணியை 'எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்'  தொடங்கியிருக்கிறது.

சா. ஜெயப்பிரகாஷ்

தான்சானியா  நாட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து செம்மை நெல் சாகுபடி உள்ளிட்ட நுட்பங்களைச் சொல்லித் தரும் பணியை 'எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்'  தொடங்கியிருக்கிறது.

இதற்காக புதுக்கோட்டையிலிருந்து அந்த நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்,  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் பேராசிரியர் வா.இரா. சுவாமிநாதன் ஆகியோர் மார்ச் 12  முதல் 22-ஆம் தேதி வரை 11 நாள்கள் தான்சானியாவில் தங்கியிருந்து முதல்நிலைப் பயிற்சியைத் தொடங்கி வைத்து வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து,  தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து 5 வேளாண் விஞ்ஞானிகள் ஜூலை மாதத்தில் தமிழ்நாடு வருகின்றனர். குறிப்பாக,  புதுக்கோட்டையில் 3 நாள்கள் தங்கியிருந்து நேரடியாக வேளாண் நிலத்தில் பயிற்சியை எடுத்துக் கொள்வதுடன், சென்னையில் இரு நாள்கள் கலந்துரையாடலிலும் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து,  தான்சானியாவிலுள்ள 5 ஆயிரம் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக  2024 ஜனவரியில் மீண்டும் தான்சானியா செல்லவும் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு வேளாண் அறிஞர் குழுவினர்.

இதுகுறித்து ஆர். ராஜ்குமார் கூறியதாவது:

'தான்சானியாவின் இரண்டாவது பெரும்பயிர் நெல்.  மக்காச்சோளம்தான் முதல் நிலைப்பயிர்.  ஆற்றுப்பாசனம்தான் பிரதான பாசனமுறை. முறையான வேளாண் சாகுபடி கிடையாது.

பெரும்பாலும் மாட்டிறைச்சி, காய்கறி, பழங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.ஊட்டச்சத்துக் குறைபாடு என்ற பேச்சே இங்கு கிடையாது. 

நெல்லுடன் கோதுமை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழை, கரும்பு, காபி, பருத்தி, முந்திரி, புகையிலை போன்றவையும் பயிரிடப்படுகின்றன. கால்நடை வளர்ப்பும், மரம் வளர்ப்பும் கணிசமான வருமானம் தான்சானியா மக்களுக்கு கிடைக்கின்றன.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்துக்கேற்ப மேம்பட்ட இடுபொருள்கள் பயன்பாடு உள்ள நெல் உற்பத்தி முறையை விவசாயிகளுக்குப் பயிற்றுவிப்பதுதான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

விவசாய ஆராய்ச்சியில் உலகளாவிய பெயரைப் பெற்றுள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. நார்வே நாட்டின் நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாய் நாற்றங்கால் முறை, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு, காய்ச்சலும் பாய்ச்சலும் கொண்ட நீர்ப்பாசன முறை, நுண்ணூட்டச் சத்து மேலாண்மை போன்றவற்றை உள்ளடக்கியது இக்களப்பயிற்சி. மேலும், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வரும் 'கிராம அறிவு மையம்' செயல்படும் முறை குறித்தும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம்.

தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஜெஃப்ரி ம்காமிலோ, திட்ட இயக்குநர் உதயசேகர் நாக்கோத் உள்ளிட்டோரும் பயிற்சியைத் தொடங்கி வைத்து ஒழுங்குபடுத்தினர்.

தமிழ்நாட்டைக் கடந்து நம்முடைய செம்மை நெல் சாகுபடி முறை தற்போதைய காலநிலை மாற்ற நெருக்கடியில் கொண்டு செல்லப்படுவது பெருமை கொள்ளத்தக்கது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT