தினமணி கதிர்

நான் புதுமைப்பித்தன்..!

ஆ. தமிழ் மணி

மனிதர்கள் என்றாவது ஒருநாள் மரணிப்பவர்கள்தான்; அவர்களை நினைவு கூர்வது அவரவர் செய்த சாதனைகளும், விட்டுச்சென்ற படைப்புகளும்தான். இப்படியாக, கதை, கவிதை, பாடல், வசனம்.. என தன்னுடைய எழுத்துகளால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருபவர்தான் எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

கடலூரில் பிறந்த இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகளே வாழ்ந்தார். இருந்தாலும், பல நூறு ஆண்டுகள் பேசும் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். காலத்தால் அழியாத அவரது வாழ்க்கையை அவரின் காலத்துக்கே கொண்டு சென்று நினைவுக் கூர்கிறது 'நான் புதுமைப்பித்தன்' எனும் நாடகம்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 'கூத்துப்பட்டறை' சார்பில், எஸ்.ராம கிருஷ்ணன் எழுத்தில் கே.எஸ்.கருணா பிரசாத் இயக்கத்தில் இந்த நாடகம் உருவாகியுள்ளது.

இயக்குநர் கருணாபிரசாத்துடன் ஓர் சந்திப்பு:

பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாதெமி விருதுகளைப் பெற்ற ந.முத்துசாமியால் 1977-இல் பகுதி நேரக் குழுவாகத் தொடங்கப்பட்ட கூத்துப்பட்டறை, 1988 முதல் முழுநேர தொழில்முறை நாடகக் குழுவாகச் செயல்படுகிறது. சிறந்த கலைஞர்களையும், சிறந்த நாடகங்களையும் கலையுலகுக்கு அளித்துள்ளது.

'நான் புதுமைப்பித்தன்' நாடகம் குறித்து?

ஆரம்ப காலத்தில் இருந்தே கூத்துப்பட்டறையில் நடித்தும், நாடகங்களை இயக்கி வந்தேன். எஸ்.ராம கிருஷ்ணன் எழுத்தில் 'அரவான்' என்ற நாடகத்தை இயக்கினேன். புதுமைப்பித்தன் நாடகத்தை உருவாக்கும் எண்ணமும் வந்தது. கரோனா காரணத்தால் தள்ளிப் போனது. இறுதியாக, தற்போது உருவாகியுள்ளது.

35 நாள்களுக்கு மேலாக நாடகத்தில் நடிக்கும் அனைவருக்கும் புதுமைப்பித்தனின் புத்தகங்கள், கதைகளைப் படிக்க வைத்து பல விவாதங்களைச் செய்து புரிதலை உருவாக்கினோம். படிப்படியாக ஒத்திகை பார்த்து, நாடகத்தை அரங்கேற்றினோம். பின்னர், நேர்த்தியாக வந்து சிறப்புப் பெற்றுள்ளது. இந்த நாடகத்தில் புது முயற்சியாகப் பார்வையாளர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புது அனுபவத்தைக் கொடுப்பதற்காக நடிகர்களின் கதாப்பாத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். ஒரே கதாபாத்திரத்தில் சிலர் மாறிமாறி நடித்தால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிப்பார்கள். அது நாடகத்தை மேலும் சிறப்பாக்கும்.

சினிமாவால் நாடகம் அழிந்து வருகிறதா?

நாடகம்தான் நடிப்பின் தாய் கலை. தமிழ்நாட்டில் போலி பெருமிதம் அதிகம். அதனால் சினிமாவால் நாடகம் அழிந்துவிட்டதாக கூறுகிறார்கள். நாடகம் வெறும் கேளிக்கைக்கான கலை வடிவம் இல்லை. மாணவர்களும் கற்று தரும்போது நடிப்பை மட்டும் கற்றுதருவது அல்ல; அதையும் தாண்டி அந்தக் கதாபாத்திரத்தின் பின் கதை என்ன? அந்த கதை கருவை பற்றி ஆராய்ச்சி செய்வது என பல விஷயத்தை உள்ளடக்கியது. இதனால், அவர்களுக்கு ஆளுமை உண்டாகும். இன்றும் நாடகங்களை விரும்பிப் பார்க்கும் கூட்டம் உள்ளது.

நாடகக் கலையை வளர்க்க அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

நவீன நாடகங்களை பெரிய அரங்கத்தில் பிரம்மாண்டமாகப் போடுவதால், அதிக பார்வையாளர்களை முழுமையாகப் பார்க்க வைக்க முடியும். அதற்கு அரசு உதவ வேண்டும். நாடகக்கலையில் தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு, மாணவர்கள் இடையே நாடக கலையைக் கொண்டு செல்ல வேண்டும்.

போதைப்பொருள்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வரும் நிலையில் அதை பற்றிய ஒரு புரிதல் வருவதற்காக, கல்வி நிலையங்களில் நாடககங்களை நடத்தவும், கற்று தரவும் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

தினகரி சொக்கலிங்கம் (புதுமைப்பித்தனின் மகள்) கூறியது...

வெறும் நாடகம் பார்ப்பது போல் இல்லாமல் ஒரு வாழ்க்கையை பார்ப்பது போல் உள்ளது. இது மிகவும் அருமையான ஒரு படைப்பு. இந்த நாடகத்தை பற்றி சொல்ல இதைவிட சிறந்த வார்த்தை எதுவும் இல்லை. என் கண்ணீரை காணிக்கையாகச் செலுத்துகிறேன்''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

கருப்பு சிவப்பு காவி!

ஐபிஎல் லீக் போட்டிகள் நிறைவு: புள்ளிவிவரங்கள் இதோ!

SCROLL FOR NEXT