ஆற்காடு தர்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தீமிதி இளவேனில் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
பழமைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். கணினி உலகில் இளைய தலைமுறையினர் நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அறியும் வகையில், 115 நாள்கள் பிற்பகல் முதல் மாலை வரை மகாபாரதச் சொற்பொழிவும், 20 நாள்கள் இரவில் தெருகூத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இது குறித்து ஸ்ரீ திரௌபதிஅம்மன் சமேத தர்மராஜர் அறக்கட்டளை தலைவர் டி.எல்.பாலாஜியுடன் ஓர் சந்திப்பு:
இந்த விழா எத்தனையாவது ஆண்டாக நடைபெறுகிறது?
ஆற்காடு நகரில் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து, நல்லிணக்க விழாவாக திரௌபதி அம்மன் விழாவை நடத்துகிறோம். ஒவ்வொரு சமூக மக்களும் ஓவ்வோர் உத்ஸவத்தை நடத்துவதால், இந்த விழாவை நகர மக்களே எதிர்நோக்கும் விழாவாகும்.
115 ஆண்டுகளில் நடைபெற்ற விழாக்கள் கோயில் கல்வெட்டுகளில் உள்ளன. ஆனால், அதற்கு முன்பே பல நூற்றாண்டுகள் விழா நடைபெற்றுள்ளதாக முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.
2013-ஆம் ஆண்டில் 99 நாள்கள், 2005-ஆம் ஆண்டில் 90 நாள்கள், 1994-ஆம் ஆண்டில் 90 நாள்களும் இதற்கு முன்னர் மகாபாரதச் சொற்பொழிவுகள் நடை
பெற்றுள்ளன.
மகாபாரதத்தோடு, ராமாயணத்தில் ராமன் வரலாறு மற்றும் முருகன் கதையும் சொற்பொழிவில் உரையாற்றப்படும். கெங்கையம்மன் சிரசு திருவிழாவின் பரசுராமர்-ரேணுகாதேவி வரலாறும் எடுத்துரைப்போம்.
விழாவில் திரளாக மக்கள் பங்கேற்கின்றனரா?
ஏப். 23 முதல் ஆகஸ்ட் 15 வரையில் தொடர்ந்து 115 நாள்கள் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையில், தொடர் சொற்பொழிவு நடைபெறும். இதற்கு முன்னர் நடைபெற்ற சொற்பொழிவுகளில் , 2 ஆயிரம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு இதற்கு அதிகமானோர் கண்டிப்பாக வருகை தருவர் என்று எதிர்பார்க்கிறோம்.
கணினி உலகில் சமூக வலைதளங்களில் இளைய தலைமுறையினர் மூழ்கிவிட்ட நிலையில், அவர்களுக்கு நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் கற்றுத் தரும் வகையில், அவர்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய திட்டமிட்டுள்ளோம். விடுமுறை நாள்கள் என்பதால், அதிகம் பேர் பங்கேற்பர் என்று நம்புகிறோம். விழாவில் பங்கேற்போருக்கு அன்னதானம், குளிர்பானங்கள் போன்ற உணவையும் அளிக்கிறோம்.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை கடைசி 20 நாள்கள் பாரம்பரியம் மிக்க தெருக்கூத்து நிகழ்ச்சிகளை இரவு முழுக்க நடத்துவோம். இந்த விழாக்களில் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்பர். இதற்கு முந்தைய விழாக்களில் வெளிநாட்டவர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
சொற்பொழிவுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
வழக்கமாக, திரௌபதி அம்மன் விழா எப்போது நடக்கும் என்று ஆற்காடு நகர மக்கள், சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரு ஆண்டுகளுக்கு முன்பே கேட்கத் தொடங்கிவிடுவர். அதுவும், மகாபாரதச் சொற்பொழிவை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் சொற்பொழிவாற்றிய செங்கத்தைச் சேர்ந்த வெ.கிருஷ்ணமூர்த்தி உரைநிகழ்த்துகிறார். அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவரது உரை கேட்கவே மெய் சிலிர்க்க வைக்கும். இதுதவிர, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளில் தெருக்கூத்து நாடகங்களை நடத்தி புகழ்பெற்ற திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகேயுள்ள குண்டையார் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமாரியப்பன் தெருக்கூத்து கிராம சபா குழுவினர் நடத்தும் நாடகங்கள் மக்களை இடம்பெற விடாமல் கட்டிப்போட்டு விடும்.
விழா நடத்துவதன் நோக்கம் என்ன?
எனக்குத் தெரிந்து இது ஆறாவது தலைமுறையாக நாங்கள் விழா நடத்துகிறோம். அனைத்துச் சமூக மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும், தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இந்த விழா நடத்தவே சில கோடி ரூபாய் செலவாகும். ஒவ்வொரு சமூக மக்களும் ஒவ்வொரு விழாவையும், நன்கொடையாளர்கள் தானாக முன்வந்து ஒவ்வொரு நாளுக்குரிய அன்னதானம், குளிர்பானங்கள் போன்ற விழாச்செலவுகளையும் ஏற்கின்றனர். "ஊர் கூடி தேர் இழுப்போம்' என்பதே நோக்கம்.
நகரில் உள்ள அனைத்து வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், வெளியூரில் வசிக்கும் ஆற்காடு அன்பர்கள் என்று பலதரப்பட்டவர்களும் உதவிகளைத் தேடி வந்து செய்கின்றனர்.
முக்கிய நிகழ்வான, ஆக. 13-இல் நடைபெறும் துரியோதனனம் படுகளம், தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.
தி.நந்தகுமார், ஜா.புகழேந்தி .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.